பால் பிரிவு என்பதை உடல்ரீதியான அளவீடாகவே இயற்கை வைத்திருக்கிறது. அந்த அளவீட்டை நாம்தான் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்கிற பெயர்களில் மெல்ல மனதிற்கும் பழக்கப்படுத்திவிட்டோம். விளைவு, தனது இணையைப் பொருட்படுத்தாத, அல்லது தன்னை மட்டுமே முன்னிறுத்துகிற ஒரே ஜீவராசியாக ஆண்கள் நாம் மாறிப்போனோம். இந்தப் பதிவு முழுமைக்கும் எனது ‘நாம்’ என்கிற சொல்லாடல், என்னையும் உட்படுத்திய ஆண்களையே குறிக்கும் என்பது பின்குறிப்பல்ல; நேரடிச் செய்தி.
இன்றைக்கு கல்வியாலும், காலச்சூழல்களாலும் பெண்கள் வெளியே தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார்கள் என்றாலும், எல்லா நிலைகளிலும் அவர்களுக்கான சம வாழ்வை நாம் அங்கீகரித்திருக்கிறோமா என்றால், மௌனமும் அதுகடந்த குற்ற உணர்ச்சிகளுமே நம்மைத் துரத்திக்கொண்டிருக்கின்றன. நாம் சுகவாசிகள்; காலங்காலமாய் அப்படித்தான் நமது மரபணுக்கள் செறிவூட்டப்பட்டிருக்கின்றன.
நமது அன்றாடங்கள், நிறைபோதை தெளிந்த ஒருவனின் இருண்ட பகல் என்பதே நமக்கு உரைக்கவில்லை. அந்த அளவிற்கு இறுகிப்போய்விட்டது நம் மனம். நாம் அழுவதையே அவமானம் என்று எண்ணும் ஏமாளிகள்; இன்னும் சொல்வதானால், அப்படி எண்ணுவதால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் கோமாளிகளும்தான் நாம்.
இந்த உண்மையை பல்வேறு தருணங்களில் நமது மனம் நமக்கு உரைத்துக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அதைக் காதுகொடுத்துக் கேட்பதே இல்லை. அதற்கான பொறுமையோ, அவகாசமோ நம்மிடம் இல்லை என்பதாக நாம் பாவனை செய்கிறபோது, நம்மையும் உடைத்து, ஊடுருவி, கலைத்துப்போட்டுவிடுகிற ஆற்றல் கொண்ட கலைவடிவங்களாக இருப்பவை இசையும், இலக்கியமும். நல்ல இசை நம்மை மௌனிக்கச் செய்கிறது; நல்லிலக்கியம் நம் மனதில் மெல்ல அன்பு விதை தூவுகிறது. இசையும், இலக்கியமும் இரண்டறக் கலக்கும்போது, ஆண் தன்மை தளர்ந்து உயிர்த்தன்மையில் ஒன்றுகிறது மனம்.
உண்மையில் உயிர்த்தன்மை என்பது என்ன? எல்லாவற்றிலும் தன்னைக் காண்பது; எவர் ஒருவரையும் தானாக உணர்வது. அப்படியானால், அத்தகைய உயிர்த்தன்மையைக் கேட்கும்போதெல்லாம் கொடையளிக்கிற தன்மை சில திரையிசைப் பாடல்களுக்கு உண்டு. அவற்றுள் ஒன்று, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம்’ பாடல். பாடலின் இத்தன்மைக்கு வலு சேர்ப்பது இலக்கியமாய் அமைந்த படத்தின் திரைக்கதை.
கதைப்படி, நாகரிகச் சுவடே அறியாத ஒரு கிராமத்தில், படிப்பு வாசனை இல்லாத வெள்ளந்தி மனிதனாக, செம்பட்டை என்கிற பெயரில் தனது அன்றாடத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார் நாயகன் சிவக்குமார். அவருக்கு நந்தினி என்கிற அழகான, நவநாகரிகத்தில் ஈடுபாடு கொண்ட நாயகி தீபா மணம் முடிக்கப்படுகிறாள். நாயகியின் நியாயமான அபிலாஷைகள், அதற்குத் துளியும் பொருந்திப்போகாத நாயகன் மற்றும் அந்த கிராமம், விளைபயனாய் அவளை ஆட்கொள்ளும் ஏக்கங்கள், முரண் முடிவுகள் எனத் திரைக்கதை நம்மில் எழுப்புகிற கேள்விகள் ஏராளம்.
அந்தக் கேள்விகளின் முனைகளைத் தன் இசையால் கூர்தீட்டி, நாமே மார்பேந்தி வாங்கிக்கொள்ளும்படி நம்மை நோக்கி எறிந்திருக்கிறார் இசைஞானி. அதிலும், பாடலின் துவக்கத்தில் தலைகாட்டி, சரணத்தின் இடையிடையே வியாபித்திருக்கிற அந்தப் புல்லாங்குழல் இசை, அடடா! மங்கையவள் மனம் தடுமாறுகிற வாசனையைத் தடம் மாறாது நம் செவி நிறைத்துவிடுகிறது.
‘என் மன கங்கையில் சங்கமிக்க, பங்கு வைக்க,
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலில்
போதையிலே மனம் பொங்கி நிற்க, தங்கி நிற்க,
காலம் இன்றே சேராதோ?’
என அணு அணுவாய்த் தன் வார்த்தைகளால் நம் மனத்தை ஆழப் பிளந்திருப்பார் கவிஞர்.
கண்களை மூடிக்கொண்டு நித்திரை முயற்சிக்கு நீங்கள் ஆட்படுகிற ஓர் இரவு வேளையில், எங்கோ ஒரு மூலையில்,
‘மஞ்சளைப் பூசிய மேகங்களே! மோகங்களே!
மல்லிகை முல்லையின் மாலைகளே!
மார்கழி மாதத்துக் காலைகளே! சோலைகளே!
என்றும் என்னைக் கூடாயோ?’
என்று கேட்டபடி, ஏக்கம் நிறைந்த கண்களோடு, உங்கள் எதிரே தீபா நிழலாடினால் அதற்கு வாணி ஜெயராமே பொறுப்பு.
பாடல் தொடக்கம் முதல் இறுதிவரை நம்மை ஆட்கொண்டபடியேதான் கடந்து செல்கிறது. ஒரு மென்மையும், நெகிழ்வுமான மனம் வாய்க்கப்பெறுகிறோம். அந்த நந்தினியின் பொருட்டு நாம் விசும்புகிறோம். அவளுக்கு மறுக்கப்பட்டவைகளை நாமே மனதால் பட்டியலிடுகிறோம்.
நடைமுறையில் அப்படியான நடத்தைகளை எள்ளி நகையாடுகிற ஆண் தன்மையைக் கழற்றிப் போட்டுவிட்டு, அந்த நந்தினிக்காய் நியாயம் கேட்டு நிற்பதுவும் நம் மனம்தான் என்றால், யார் நாம்? எது நமது உண்மைத்தன்மை?
எனக்குள் எழுந்த கேள்விகள் உங்களுக்குள்ளும் எழ, பாடலைக் கேளுங்கள்!
...ரதம் பயணிக்கும்
***
தொடர்புக்கு: [email protected]