***
இதழை தவறாமலும் தாமதமின்றியும் படிக்க, இதழை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்:
""
*** இதழை தவறாமலும் தாமதமின்றியும் படிக்க, இதழை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்:
0 Comments
16 நவம்பர் 2018 - நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் வாழ்வில் மறக்க முடியாத துயர நாளாக மாறிவிட்டது. கஜாப் புயலின் கோர தாண்டவம் நான்கு மாவட்ட மக்களை, அவர்களின் உழைப்பை சுமார் இருபது ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது. பெரும்பாலான மின் கம்பங்கள் சாய்ந்து இருளில் மூழ்கியதோடல்லாமல், மரங்களின்றி வெட்டாந்தரையாக மாறின டெல்டா மாவட்டங்கள். அந்தப் பகுதியின் முக்கியத் தொழிலான தென்னை விவசாயத்தை முற்றிலுமாக அழித்துவிட்டு சென்றிருக்கிறது கஜா! நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, அரசின் பல்வேறு துறைகளும், தன்னார்வக் குழுக்களும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுற்றிச் சுழன்று நிவாரணப் பணியாற்றிக் கொண்டிருக்க, தனது 115289 மாற்றுத்திறனாளிகளின் நிலை குறித்து எந்தவிதப் பதட்டமோ, பரிவோ இன்றி மெத்தனமாக இயங்கியது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. உணவு, உறைவிடம் என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாகிவிட்ட மக்களுக்கான நிவாரணங்கள் பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட, கூட்டத்தில் முந்தியடித்துக்கொண்டு பெற இயலாத மாற்றுத்திறனாளிகளின் அல்லல் குறித்தும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தின் மெத்தனம் குறித்தும், ‘டிசம்பர் 3’ இயக்கம் தனது வேதனையை ஓர் அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியது. அதன் பிறகே, தனது அரிதுயில் களைத்த ஆணையரகம், கஜாப் புயலால் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, தொடர்புடைய மாவட்டங்களின் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களிடம் அறிக்கை தரும்படி கேட்டிருக்கிறது. கஜாப் புயலின் தாக்குதலுக்குள்ளான மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளிகள், மறுவாழ்வு இல்லங்களும் வெகுவாகப் பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், ஆணையரகத்தின் சில மூத்த அதிகாரிகளுக்கு, மண்டல அலுவலர்கள் (Zonal Officers) என்ற பெயரில் மாவட்ட வாரியாகச் செயல்படுத்தப்படும் பல்வேறு மறுவாழ்வுப் பணிகள் குறித்துக் கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர்கள்கூட பாதிப்புக்குள்ளான மாவட்டங்களின் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை! பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இழப்பீடும், நிவாரணமும் வழங்கிட வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம் என பல துறைகள் இருக்கின்றன. ஆனால், அவர்களின் கைபிடித்து, “கவலை வேண்டாம், நம்பிக்கை இழக்காதீர்கள்” என்று தேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு இருக்கிறது. ஆகவே, அறிக்கைகள் கேட்பதை விடுத்து, ‘களத்திற்கு வாருங்கள், ஆணையர் அவர்களே!’ “உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு” சிறப்புக் கட்டுரை: விழி ஒளி இழந்தவர்கள் மீது விழுந்த ஊடக வெளிச்சம்! - வினோத் சுப்பிரமணியன்12/28/2018 இந்த உலகம் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. எல்லாக் காலங்களிலும் ஊடகம் தனது பேராற்றலை தனக்கேற்றப் பாணியில் பிரயோகித்துக் கொண்டுதான் இருக்கிறது. பொதுவாக, ஒரு சாமானியனின் பார்வையில் ஊடகம் காட்டுவது வெறும் செய்தி அல்ல; உண்மை. அதுவும், இந்த ரியாலிட்டி ஷோக்கள் வந்ததிலிருந்து, அவர்கள் காட்டுவதுதான் எல்லாம் என்றாகிப்போனது பார்வையாளனின் அதிர்ஷ்டமா அல்லது துரதிர்ஷ்டமா என்று கணிப்பதில் ஒரு பெரிய சிக்கல் இருப்பதை மறுப்பதற்கில்லை; இந்தக் கட்டுரையும் அதைப் பற்றியதுதான். கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி, ‘சன்’ தொலைக்காட்சியில் ‘நாம் ஒருவர்’ மற்றும் ‘தாயா? தாரமா?’, ‘விஜய்’ தொலைக்காட்சியில் ‘நீயா? நானா?’, ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் ‘ஒரு சாமானியனின் குரல்’ ஆகிய நான்கு நிகழ்ச்சிகள் பார்வை மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்தி ஒளிபரப்பப்பட்டன. அது உண்மையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த அளவு உதவி இருக்கின்றன என்பதை ஆராயத்தான் இந்தக் கட்டுரையே தவிர, நிச்சயமாக அந்த ஊடகங்களை விமர்சிப்பதற்காக அல்ல என்பதை இங்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன். நாம் ஒருவர் ‘சன்’ தொலைக்காட்சியில், நடிகர் திரு. விஷால் அவர்கள் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் நான்காவது எபிசோடாக இருந்தது அன்றைய நிகழ்ச்சி; ஆண்ட்ரியாவை அழைத்திருந்தார்கள். ஒரு சிறிய குடும்பம்; அதில், ஒரு பார்வைத்திறன் குறையுடைய சிறுவன். அந்தக் குடும்பத்தின் வரலாறு, வாழ்க்கைத்தரம் மற்றும் அந்தச் சிறுவனின் நிலை ஆகியவற்றைக் கொண்டு நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த பார்வைக் குறைபாடுடைய சிறுவனின் பெற்றோருக்குக் கடை வைத்து தரவேண்டும் என்பதும், அந்தச் சிறுவனுக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய பணம் திரட்ட வேண்டும் என்பதும்தான் அன்றைய நிகழ்ச்சியின் நோக்கம். இந்த நிகழ்ச்சியின் உண்மையான நோக்கமே இயலாதவர்களுக்கு உதவுவதுதான் என்பதால், அதை உளமார பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம். இதற்கு முன் ஒளிபரப்பப்பட்ட மூன்று எபிசோடுகளும் பிறருக்கு உதவுவதையே நோக்கமாகக் கொண்டிருந்ததால், இந்த நிகழ்ச்சியை மட்டும் பிரித்துத் தனிமைப்படுத்தி கேள்வி எழுப்ப இயலவில்லை. ஆனால், ‘ஆண்ட்ரியாவிடமும், விஷாலிடமும், சன் தொலைக்காட்சியிடமும் இல்லாத பணத்தையா பிறரிடம் இருந்து அவர்கள் திரட்டப் போகிறார்கள்?’ என்ற கேள்வி எழாமல் இல்லை. அதே நேரத்தில், இப்படிச் செய்தால் நிறைய பேர் உதவ முன்வருவார்கள் என்று இதயத்தில் உருவாகும் நேர்மறை எண்ணத்தையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று தோன்றுகிறது. அதற்காக ஆண்ட்ரியா பாடலெல்லாம் பாடி உதவி கேட்பதும், அதில் சிலர் இருபது ரூபாய் மட்டும் நன்கொடையாகக் கொடுத்துச் செல்வதும் பார்ப்பவர்களை உணர்ச்சி வசப்படுத்துவதற்காக மட்டுமே செய்யப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும், அந்த பார்வைக் குறையுடைய சிறுவனை, ‘வருங்கால சையிண்டிஸ்ட்’ என்று அழைத்ததெல்லாம் வாதத்திற்குகூட ஒத்துவராது என்பது திரு. விஷாலுக்கும் தெரியும்! இந்த நிகழ்ச்சி பார்வையற்றவர்களைப் புரிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டது அல்ல என்பதும், ஏழ்மை நிலையில் இருக்கும் ஒரு பார்வைக் குறைபாடுடைய சிறுவனின் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவுவதுதான் அதன் குறிக்கோள் என்பதும் தெரிந்ததால், இந்த நிகழ்ச்சியைப் பாராட்டிதான் ஆகவேண்டும். அதே வேளையில், தன்னுடைய டி.ஆர்.பி. (TRP) ரேட்டிங்கை ஏற்றிக்கொள்ள ‘சன்’ தொலைக்காட்சி ஒளிபரப்பும் ஒரு நிகழ்ச்சிதான் இது என்ற அப்பட்டமான உண்மையையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, பார்வையற்றவர்களைப் பற்றி வெறும் உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமல்லாமல் கொஞ்சம் யதார்த்த நிலையிலிருந்தும் அணுகுமாறு திரு. விஷால் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். உதாரணமாக, அவர்களுக்கான பள்ளி, அவர்கள் உபயோகப்படுத்தும் பொருட்கள் போன்றவற்றைத் தெரிந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்தியிருந்தால், இன்னும் இயல்பாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. நீயா? நானா? பார்வையற்றவர்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றிருக்க வேண்டிய நிகழ்ச்சி. ஏனோ ஏதோ ஒரு புள்ளியில் துவங்கி ஏதோ ஒரு புள்ளியில் முடிந்துவிட்டது! பார்வையற்றவர்களின் உலகம் எவ்வாறு இருக்கிறது என்று ஆராயத் தொடங்கிய நிகழ்ச்சி, அவர்களின் வாழ்வில் ஓர் அங்கமான இசையை மட்டுமே தூக்கிப்பிடித்து, அவர்களின் அன்றாட வாழ்வின் இன்னல்களைப் பற்றி பெரிதாக விவாதிக்காமலேயே முடிந்து விட்டது. விவாதிப்பதற்கு நிறைய விடையங்களும் அதற்கான சரியான நபர்களும் இருந்தும், எந்த ஒரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இந்த நிகழ்ச்சி முடிந்து விட்டது என்று தோன்றுகிறது. இருப்பினும், கடைசி ஐந்து நிமிடங்கள் முன்வைக்கப்பட்ட பகிர்வுகளும், விவாதங்களும் நிகழ்ச்சிக்கு வலு சேர்த்ததைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்; நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே அதை செய்திருக்கலாம். பார்வை மாற்றுத்திறனாளிகள் தாம் எதிர்கொள்வதாகச் சொன்ன சில முக்கியமான பிரச்சினைகளை கத்தரி போட்டதைத் தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில், பெரிதாக எதையும் செய்யாமல் ஏமாற்றியதாகத்தான் இருந்தது இந்த ‘நீயா? நானா?’ என்ற எண்ணம் பெரும்பாலான பார்வையற்றவர்களின் மனதில் தோன்றியதை உணர முடிகிறது. இருப்பினும், பார்வையற்றவர்களுக்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தியதற்காக ‘விஜய்’ தொலைக்காட்சிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சாமானியனின் குரல் விளிம்பு நிலையில் இருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பற்றி கொஞ்சம் உணர்வுபூர்வமாகவும், கொஞ்சம் உண்மைத் தன்மையுடனும் ஆராய்ந்து ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி இது. பார்வையற்றவர்களுக்கு பாடல்தான் எல்லாமே என்று ஆரம்பித்திருந்தாலும், அவர்கள் பயணித்த சில விடையங்கள் கொஞ்சம் ஆறுதலைத் தந்தது. பார்வையற்றவர்கள் என்றாலே நன்றாகப் பாடுவார்கள் என்று யாரோ கிளப்பி விட்டுவிட்டார்கள் போலும்; ஒரு சிலரைப் பாடவைத்து இசைக்கு பாலூற்றிவிட்டார்கள். வெறும் 22 நிமிடங்களே ஒளிபரப்பப் பட்டாலும், பார்வை மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின்மீதும் சற்று கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ’பெற்றோருக்குப்பின் அவர்களது நிலை என்ன?’, ’எந்த மாதிரியான சூழ்நிலைகளில் பார்வை இல்லையே என்று வருந்தியிருக்கிறார்கள்?’ போன்ற சில அத்தியாவசியக் கேள்விகளும் இடம்பெற்றிருப்பதைப் பாராட்டிதான் ஆகவேண்டும். அடுத்த முறை, மற்ற துறையில் இருக்கும் பார்வையற்றவர்களைப் பற்றியும் ஆராய்ந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும். ஏனென்றால், இதுபோன்ற நிகழ்ச்சிகள், ‘பார்வையற்றவர்கள் பாடுவதற்கு மட்டும்தான் சரிப்பட்டு வருவார்கள்’ என்ற பிம்பத்தைச் சமுதாயத்தில் ஏற்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன! தாயா? தாரமா? பார்வை மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்தி ஒளிபரப்பப்பட்ட நான்கு நிகழ்ச்சிகளில் ஒரு தரமான நிகழ்ச்சி என்று இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். வெறும் உணர்வுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், திறமைக்கு தீனி போடும் விதமாகவும் அமைந்தது இந்த நிகழ்ச்சி. அதில் பங்கு பெற்ற பார்வைக் குறைபாடுடைய போட்டியாளர் திரு. குமார் அவர்கள், தனது அண்ணனின் தியாகத்தைப் பற்றி கண்ணீருடன் சொன்னது, தன் விழி ஒளி இழந்த மனைவிக்கு ஏன் முக்கியத்துவம் தருகிறார் என்று சொன்னது, தொகுப்பாளர் அசாரை தேவையான இடங்களில் கலாய்த்தது போன்றவை அளவாகவும், அழகாகவும் இருந்தன. அதே நேரத்தில், அந்தத் தொகுப்பாளரும் போட்டியாளர்களை வெறும் பார்வை மாற்றுத்திறனாளிகளாக மட்டும் நடத்தாமல், சக மனிதர்களைப் போல் நடத்தியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. மொத்தத்தில், ‘தாயா? தாரமா?’ மற்ற மூன்று நிகழ்ச்சிகளைக் காட்டிலும் மிகத் தரமாக இருந்தது! எது எப்படியோ! விழி ஒளி இழந்தவர்களின்மீது ஒரு வெளிச்சம் விழுந்திருக்கிறது. அனைத்து ஊடகங்களும் பார்வைச்சவால் கொண்டவர்களை வைத்து தத்தம் பங்கிற்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி முடித்திருக்கின்றன. வருங்காலங்களிலாவது இதுபோன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக விழும் இந்த வெளிச்சம், விழி ஒளி இழந்தவர்களின் வாழ்வியல் ரீதியான மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவும் என்று நம்புவோம்! *** (கட்டுரையாளர் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் பணியாற்றி வருகிறார். ‘www.slvinoth.blogspot.com’ என்ற தனது வலைப் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்). தொடர்புக்கு: [email protected] வியர்வையிலே நனைகிறோம், குளிரிலே உறைகிறோம்! ஸ்மார்ட் கிளாஸ் வந்ததும் கொண்டாட்டம் ஆச்சு; பள்ளியில போதுமான கட்டடம் இல்லாததால எங்க பாடு திண்டாட்டமாப் போச்சு! ஆர்டர் வந்து ஆண்டுகள் உருண்டு போச்சு; எங்க பள்ளி கட்டட வளர்ச்சி மட்டும் பாதியில நின்னே போச்சு! வெள்ளை தாளில் வெளிவந்த செய்திகள் எல்லாம் - பாவம் வண்ண தாள்களிடம் சரணடைந்து விட்டன! இலவசச் சீருடையும் இதற்குமேல் தாங்க முடியாது என்பதுபோல, தரையின் உராய்வு தாங்காது விரிசல் விட ஆரம்பித்துவிட்டது! தரமான கட்டடம் வருமுன்னு தரையில உக்காந்து படிச்சோம்; ஆனா இப்போ, கட்டாந்தரையே நிரந்தரமாயிருமோனு தவிக்கிறோம்! அப்பப்ப பாம்பும் பூரானும் பள்ளிக்கூடம் வருகுது; பறவைகளும் சேர்ந்தே பாடங்கள் கற்குது! மரத்தடிதான் எங்கள் வகுப்பறை! பூமித்தாய் மடிதான் எங்களுக்கு இருக்கை! எங்களுக்கு எல்லாமே மரத்தடிதான்! காலை வகுப்பறையும் மரத்தடிதான்; மதிய உணவுக்கூடமும் மரத்தடிதான்; மாலை விளையாட்டுத் திடலும் மரத்தடிதான்; நாங்கள் ஓய்வெடுக்கும் இடமும் மரத்தடிதான்! பகலிலே எங்கள் அறிவுக் கண் ஒளிர, மரமும் எங்களுக்காய் உழைக்கிறது! ஆனால் இந்த பாழாய்ப் போன ???? மட்டும், இதை கண்டுகொள்ள மறுக்கிறது! என்று மாறும் இந்த நிலை? முடியட்டும் வேலை; விடியட்டும் நாளை! (இக்கவிதை அடிப்படைக் கட்டட வசதி இல்லாத அனைத்துப் பள்ளிகளுக்கும் சமர்ப்பணம்). *** (கவிஞர் விருதுநகர் மாவட்டம் தமிழ்ப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர்). தொடர்புக்கு: [email protected] புதுக்கோட்டை மாவட்ட மக்கள் வானிலை அறிக்கைகளை எள்ளலுடன் கடந்துசெல்லும் இயல்புடையவர்கள். இப்பகுதிகளில் மழை பொய்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. புயல் வந்தாலாவது மழை பொழியுமே என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் வானிலை செய்திகளை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். ‘வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக புதுகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்’ என்ற அறிவிப்பைக் கேட்கும்பொழுது அவர்கள் மனதில் மகிழ்ச்சி எழும்; மழை பொழிந்து ஓய்ந்த பிறகு அது துயரமாக வடிவெடுக்கும். விவசாயத் தேவை, குடிநீர்த் தேவை என எதையும் பூர்த்தி செய்யாது, தரையை மட்டும் நனைத்துவிட்டு மழை நின்றிருக்கும். ஒருமுறை மட்டுமல்ல; ஒவ்வொரு முறையும் இப்படியே நடப்பதால் மக்கள் வானிலை அறிக்கைகளைக் கேலிச்சிரிப்புடன் கடக்கத்தொடங்கினர். ‘கஜாப் புயலின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை பொழியும்’ என்ற அறிவிப்பைக் கேட்டுவிட்டு இதேபோலத்தான் கேலிச்சிரிப்புடன் கடந்துசென்றனர் மக்கள். பக்கத்து வீட்டில் கேதம்; நிறையபேர் வருவார்கள் என்பதால், அவர்களுக்காக தோசை மாவை அதிகம் ஆட்டத் தொடங்கின அவ்வூரிலிருந்த உணவகங்கள். இப்படி ஒவ்வொருவரும் தங்களது அன்றாட பணிகளுக்கான திட்டமிடலை வகுத்துவிட்டு, வழக்கம்போல் உறங்கச் சென்றனர். அதிகாலை 3 மணி; லேசாகக் காற்று வீசத் தொடங்கியது. மெல்ல மெல்ல அதன் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. 3.30 மணிக்குப் பின் வேகமெடுத்த காற்று, காலை எட்டு மணிக்குத் தான் ஓய்ந்தது. 4 மணிக்குப் பிறகு, புயலோடு மழையும் கைகோர்த்துக் கொண்டது. அது நிகழ்த்திய கோரத்தாண்டவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. உயிரை மட்டும் விட்டுவிட்டு, உடைமைகள் அனைத்தையும் அது சிதைத்து சென்றுவிட்டது. இங்கே வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவித்துக் கொண்டிருந்த சமயத்தில், புயல் முன்னேற்பாடு குறித்த வாழ்த்து மழையில் தமிழக அரசு நனைந்துகொண்டிருந்தது, முதலமைச்சரோ, அவர் மாவட்டத்தில் நடந்த நிகழ்வில் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியாயிருந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அமைச்சரோ, ‘பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை’ எனப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். இத்தகைய பேரிடர்கள் சூழ்ந்திருந்த தருணத்தில், பார்வை மாற்றுத்திறனாளிகள் எத்தகைய இடர்களைச் சந்தித்தனர் என அவர்களிடமே கேட்டோம். புதுக்கோட்டை மாவட்டம் நெய்வத்தலியைச் சேர்ந்த முருகானந்தம், “எங்களது பொருளாதாரத் தேவையை பூர்த்திசெய்த தென்னை மரங்கள் அனைத்தும் புயல் காற்றில் சாய்ந்துவிட்டன. இவ்விழப்புகளிலிருந்து எவ்வாறு மீண்டு வரப்போகிறோம் எனத் தெரியவில்லை. நிவாரணப் பொருட்களை வாங்குவதில் நான் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டேன். பல நிவாரணப் பொருட்களை நான் வாங்க முடியாதது பற்றி வருத்தப்படவில்லை; ஆனால், அத்தியாவசியத் தேவையான உணவைக் கூட என்னால் வாங்க இயலவில்லை. ஏனெனில், எல்லோரும் அடித்துப் பிடித்து தங்களது பாத்திரங்களை நிரப்பிக்கொண்டு சென்றுவிட்டனர். அவர்களைப் போல் என்னால் முந்திக்கொண்டு செயல்பட இயலாததால், பல நேரங்களில் சாப்பாட்டை இழந்திருக்கிறேன். பேரிடரின் பாதிப்பைக் கண்டு முகம் தெரியாத பலரும் உதவிக்கரம் நீட்டுகின்றனர். ஆனால், பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த சிலர், எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்ற நோக்கில் மனித நேயமற்று செயல்பட்டனர். எங்கள் ஊரில் கைபேசிகளுக்கு மின்னேற்றம் செய்ய 200 ரூபாய் வரை வாங்கிய கொடுமையெல்லாம் அரங்கேறியது” என்று தன் ஆதங்கத்தைக் கூறி முடித்தார். தெற்குநல்லிப்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், “இப்புயலின் காரணமாக இரண்டு நன்மைகள் ஏற்பட்டுள்ளன. முதலாவதாக, சூரிய மின்னாற்றல் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலான கிராமப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கிறது. சூரிய ஆற்றலில் இயங்கும் விளக்குகளைப் பலரும் வாங்கி இப்போது பொருத்த தொடங்கி இருக்கின்றனர். அடுத்ததாக, கைபேசிகளில் மின்னேற்றம் செய்ய இருசக்கர வாகனங்களில் உள்ள மின்கலன்களை பயன்படுத்த மக்கள் இப்போது கற்றுக் கொண்டுவிட்டனர். புயலின் காரணமாக நான் கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்துவதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டேன். பொது இடங்களில் நாம் இன்னும் இச்சிக்கலை எதிர்கொள்கிறோம்; ஆனால், நான் சுதந்திரமாக இயங்கும் வீட்டிலேயே இன்னொருவரின் உதவியை நாட வேண்டியிருந்தது. இயற்கை உபாதைகள் வரும்போது செல்ல இயலாது; உதவிக்கு ஆள் வரும்போதே நான் கழிப்பிடங்களுக்குச் சென்றேன்” என்றார். இப்புயல் காற்றில் ராஜா முகமது என்ற பார்வை மாற்றுத்திறனாளியின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. இதைக் கேள்விப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளி நண்பர்களான பிரபு, பிரபாகரன் மற்றும் சோலைகணேஷ் ஆகிய மூவரும் இவருக்கு உதவி செய்துள்ளனர். இவர்கள் செய்த உதவியைக் கேள்விப்பட்ட பிற பார்வை மாற்றுத்திறனாளி நண்பர்களும் இவருக்கு உதவ முன்வந்தனர்! இதைச் சாத்தியமாக்கியது, ‘உதவும் உள்ளங்கள்’ என்ற கட்செவி குழு. இதன் உறுப்பினர்கள் அனைவருமே பார்வை மாற்றுத்திறனாளிகள். இக்குழுவை உருவாக்கிய பிரபு தாங்கள் செய்த உதவியைப் பற்றிக் கூற, அக்குழுவில் இருக்கும் பிற பார்வையற்ற நண்பர்களும் தங்களால் இயன்ற பண உதவிகளைச் செய்துள்ளனர். “புயலில் எங்களது வீடு முழுவதும் சிதைந்து போனது. இரவில் உறங்கவும், மழை வரும்போதும் அண்டை வீடுகளில் அடைக்கலம் கேட்டு தங்கிக் கொள்வேன். என் நிலைமையைக் கேட்டவுடன், பிரபு மற்றும் அவரது நண்பர்கள் உரிய நேரத்தில் எனக்கு உதவினர். தொலைபேசி வாயிலாகவே அவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டனர். மின்சாரமில்லாத சூழலில் அது சிக்கலானதாக இருந்தது. பண உதவி செய்ததோடு மட்டுமல்லாமல், அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் எங்களுக்கு வழிகாட்டினர்” என்றார் ராஜா முகமது. ‘உதவும் உள்ளங்கள்’ கட்செவி குழுவில் உள்ள மாரிச்சாமி, “நாங்கள் எத்தனையோ உதவிகளைப் பெற்று, படித்து முன்னேறி இருக்கிறோம். இன்று நாங்களும் இச்சமூகத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என நினைக்கிறோம். களத்தில் நின்று உதவ முடியவில்லையே என்பதுதான் எங்களது சிறு கவலையாக இருக்கிறது” என்றார். புதுக்கோட்டை பார்வையற்றோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, கஜாப் புயல் காரணமாக மின்சார வசதியும், தண்ணீரும் இல்லாததால், ஒரு வாரம் மூடப்பட்டது. இதனால், பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் அவரவர் வீட்டிற்குப் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். எப்போதும் தன் மகனோ, மகளோ வீட்டிற்கு வருகி்றார்கள் என்று அறிந்தவுடன் மகிழும் பெற்றோர், அன்று மகிழ்ச்சியாக இல்லை. நம்மிடம் பேசிய ஒரு மாணவனின் தாயார் இப்படிக் கூறினார், “எங்க வீடு புயல்ல அடிச்சுக்கிட்டு போயிருச்சு. நாங்க நிவாரண முகாமுக்கு வந்துட்டோம். என் மகனாவது பள்ளிக்கூடத்துல பத்திரமா இருப்பான்னு சந்தோசப்பட்டோம். ஆனா, அவனும் இங்க வந்து எங்களோட கஷ்டப்படுறான். சாப்பாட்டுக்கும், ஒன்னுக்கு, ரெண்டுக்கு போறதுக்கும் அவன் ரொம்ப கஷ்டப்படுறான். வேகமா பள்ளிக்கூடம் தெறந்தா எங்களுக்கு நிம்மதியா இருக்கும்”. நிலைமை சீர் செய்யப்பட்டு ஒரு வாரத்தில் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. கைக்குறிச்சியைச் சேர்ந்த சக்திவேல் புயல் காற்றைப் பற்றி இவ்வாறு விவரிக்கிறார், “புயல் காற்றின் சத்தமானது ஒரு பெண்ணின் ஓலம் போல இருந்தது. ஏதேனும் ஒரு பிடிமானம் இல்லாமல் தரையில் நம்மால் காலை வைத்து நடக்க இயலவில்லை. மனிதனைத் தூக்கும் அளவிற்கு அதன் வேகம் இருந்தது. மழை எப்பொழுதும் வானிலிருந்து தரையை நோக்கி விழுந்துதான் நாம் கண்டிருப்போம்; ஆனால், காற்றின் காரணமாக நேரடியாக நம் முகத்தில் நீரை வேகமாக பீச்சியடிப்பதுபோல் மழைப்பொழிவு இருந்தது. இதன் காரணமாக வெளியே செல்பவர்கள் மூச்சு விடுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். எங்கள் உணவகத்தின் கூரை ஆஸ்பெட்டாஸ் சீட்டால் வெய்யப்பட்டது. அடிக்கும் காற்று அதை இழுத்துக்கொண்டு போய்விடுமோ என்ற பயத்தில் இருந்தோம். அழகு சுந்தரி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு அக்கா எங்கள் ஊரில் இருக்கிறது. அந்தப் பயங்கர புயல் காற்றிலும், தலையில் ஒரு நெகிழி கவரை மாட்டிக்கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது. நாங்கள் அந்த அக்காவைக் கடைக்குள் அழைத்தும் வரவில்லை. பலமுறை சாலையில் விழுந்தாலும், எழுந்து நடந்து சென்றது அந்த அக்கா. சாலையோரத்திலிருந்த மரங்கள் விழுந்து கொண்டிருந்தன. அவற்றிலிருந்து அந்த அக்கா உயிர் தப்பியது அதிசயம்தான்! இவ்வாறு, புயலினால் மனவளர்ச்சி குன்றியோர் பல பாதிப்புகளைச் சந்தித்திருப்பர். அவர்களுக்காக மனம் உள்ளவர்கள் நாமாவது குரல் கொடுப்போம்”. மேலும் அவர் கூறும்போது, “ஒரு மெழுகுவர்த்தி 100 ரூபாய்க்கும் மேல் விலை வைத்து விற்கப்பட்டது. அரசின் செயல்பாடுகள் மீட்புப் பணிகளில் மிகவும் மந்தமாகவே இருந்தன. ‘முதலமைச்சர் புதுக்கோட்டை மாவட்டத்தைப் பார்வையிட வருகிறார்’ என்ற அறிவிப்பு வந்ததும், அவர் செல்ல வேண்டிய பாதைகள் மட்டும் விரைந்து சரிசெய்யப்பட்டன. அவர் வருவதற்கு முந்தைய நாள் இரவு, அனைத்து ஊர்களிலும் குடிநீர் வண்டிகளில் வழங்கப்பட்டது. அத்தண்ணீரைத்தான் எங்கள் கடையில் கை கழுவுவதற்காக ஊற்றி வைத்திருந்தோம். அதைப்பார்த்த வாடிக்கையாளர்கள், ‘தண்ணீர் என்ன இந்த நிறத்தில் இருக்கிறது? நல்ல தண்ணியை மாற்றி வையுங்கள்’ எனக் கூறிச் சென்றனர். அத்தண்ணீரைத்தான் பலரும் குடிக்க வாங்கியிருந்தனர். எத்தனை மோசமான நீரை அன்று இரவு பொதுமக்கள் பயன்படுத்தி இருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். இப்புயலால் பல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. அதைச் சாக்காக வைத்துக்கொண்டு, சாலையோரத்தில் நின்ற மரங்களைப் பலரும் வெட்டியதைக் காண முடிந்தது. கஜாப் புயலுக்குப் பின், மின்னூழியர்கள் பம்பரமாய் சுழன்று பணியாற்றினர். அவர்களது சேவைக்கு தமிழகமே தலைவணங்குகிறது. காட்டிலும் மேட்டிலும் அவர்கள் கஷ்டப்பட்டு, சாலையோரத்திலிருக்கும் ஊர்களுக்கு மட்டும் மின்னிணைப்பு கொடுத்து முடிக்கும்போதே, மாவட்டம் முழுவதும் மின்னிணைப்பு கொடுக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் பேட்டி கொடுத்துவிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் முடுக்குப்புஞ்சை பகுதியில், விவசாய மோட்டார்களுக்கு மின்னிணைப்பு கொடுக்க 500 ரூபாய், வீடுகளுக்கு மின்னிணைப்பு கொடுக்க 100 ரூபாயென பணத்தைப் பெற்றுக்கொண்டு மின்னிணைப்பு வழங்கியதெல்லாம் கொடுமையின் உச்சம். அரசுக்கு எதிராகத் தினந்தோறும் சாலை மறியல் மற்றும் போராட்டங்கள் வெடித்துக்கொண்டே இருந்தன. அவர்களது உச்சபட்ச கவலையாக இருந்தது, ‘அரசாங்கத்தைச் சேர்ந்த யாரும் வந்து பார்க்கவில்லையே’ என்பதுதான். தன்னார்வலர்கள் சிறப்பாக தங்கள் வேலைகளைப் பகிர்ந்தளித்து, நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்தனர். பல தரவுகளையும், ஆள் பலத்தையும் கொண்டிருக்கும் அரசு எந்திரம் விரைவாகச் செயல்படாமல் இருந்தது மிகுந்த வருந்தத்தக்க நிகழ்வாகும். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், உரிய பிரதிநிதிகள் இல்லாமல் கிராமப் பகுதியினர் துயரப்பட்டதையும் காண முடிந்தது. நொடிப்பொழுதில் தேசத்தின் நோட்டையே மாற்றிய வல்லமை வாய்ந்த பிரதமருக்கு, கஜா நிவாரணத்தை ஒதுக்க நேரமில்லை போலும்! புயலுக்குப் பின் மக்கள் ஓலமிட்டுக் கொண்டிருக்க, அரசாங்கம் அமைதியாக இருந்ததுதான் இவ்வாண்டின் பெரும் பேரிடர்! *** தொடர்புக்கு: [email protected] ‘ராஜ பார்வை’, ‘காசி’ வரிசையில் பரவலான வரவேற்பையும் இனிமையான பாடல்களையும் கொண்டு, பார்வை மாற்றுத்திறனாளிகளின் அடையாளமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திரைப்படம் ‘குக்கூ’. திரைப்படத்தின் வெற்றி என்ற அடிப்படையில் ‘ராஜ பார்வை’, ‘காசி’ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் இடைப்பட்ட இடத்தைத்தான் ‘குக்கூ’ திரைப்படம் பெற்றது. ஏனெனில், ‘குக்கூ’ திரைப்படத்தில் பரிதாபத்தை ஏற்படுத்தும் காட்சிகள் ஒப்பீட்டளவில் முந்தைய திரைப்படங்களைவிட சற்றே குறைவு என்பதே. அந்தக் காரணம் தான், ‘குக்கூ’ திரைப்படத்தின் உயர் தரத்தின் ஒரு கூறாகவும் அமைகிறது. இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவில்லையே என்ற எண்ணம் எழாதவாறு அழகான, இனிமையான பாடல்கள் மற்றும் இசையை அளித்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு முதல் பத்தியிலேயே நன்றி தெரிவிக்கிறோம். ஏனென்றால், இத்திரைப்படத்தில் முதல் மரியாதைக்கு உரியவர் அவர் என்பது எள்ளளவும் மிகையில்லாத உண்மை. ‘குக்கூ’ திரைப்படத்தில் நாயகன், நாயகி மற்றும் பெரும்பாலான துணைக் கதாப்பாத்திரங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகள்தான். ஆனால், தனக்குப் பார்வை இல்லையே என ஒருவர்கூட சோக கீதம் இசைக்கவில்லை; எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியவில்லையே என்பது மாதிரியான விரக்தியான வசனங்கள் பேசவில்லை. மாறாக, பார்வை மாற்றுத்திறனாளிகள் திரையரங்கிற்குச் சென்று திரைப்படம் பார்க்கின்றனர்; மிக இயல்பாகவே திரைப்படக் காட்சிகளைக் கலாய்க்கின்றனர்; உடன் இருக்கின்ற நண்பர்களிடம் கோபப்படுகின்றனர்; இடத்தை மாற்றிச் சொல்லி ஏமாற்றுகின்றனர்; சண்டை போட்டு, மன்னிப்புக் கேட்டு சமாதானம் அடைகின்றனர். ஆக, அவர்களின் வாழ்வியல் இருண்ட உலகமோ, புனிதர்கள் மட்டுமே வாழும் பொன்னுலகமோ அல்ல; இயல்பான உலகம் தான் என்பதைக் காட்டிய முதல் திரைப்படம் ‘குக்கூ’ தான் என்பதை உறுதியாகக் கூறலாம். அந்த வகையில், இயக்குனர் ராஜூ முருகன் அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள். பெரும்பாலான திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகளைப் படித்தவர்களாக, படித்துக்கொண்டு இருப்பவர்களாகக் காட்டுவதில்லை. ஆனால், இத்திரைப்படத்தில் நாயகி மட்டுமின்றி பல பார்வை மாற்றுத்திறனாளிகள் படித்துக்கொண்டு இருப்பவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். மேலும், தன்னார்வலர்களான வாசிப்பாளர்கள் பாடங்களை வாசித்துக் காட்டுவது, செய்முறைப் பதிவேடுகள் எழுதித் தருவது போன்ற நடைமுறைகளும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. கல்லூரிப் பாடங்கள் மட்டுமின்றி, பிற நூல்களையும் தன்னார்வலர்கள் உதவியுடன் பார்வை மாற்றுத்திறனாளிகள் படிக்கின்றனர் என்பதும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. பொதுச் சமூகம் இதுவரை அறிந்திராத இவற்றை முதன்முதலாக திரையில் காட்டியமைக்கு இயக்குனர் ராஜூ முருகன் அவர்களுக்கு மீண்டும் நன்றிகள். நாயகன் மின்சார இரயிலில் சிறு பொருட்களை விற்கும் ஒரு நடைபாதை வியாபாரி மற்றும் பகுதி நேர மேடைப் பாடகன். நாயகி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவி. மேலும், நாயகன் மற்றும் நாயகியின் நண்பர்கள் என இன்னும் பல மாற்றுத்திறனாளிகள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதில் நாயகன் மற்றும் நாயகியைத் தவிர பிற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உண்மையான மாற்றுத்திறனாளிகள் என்பதுதான் இத்திரைப்படத்தின் சிறப்பம்சம். ஆனால், அவர்களில் ஒருவர்கூட குறைப்பார்வை கொண்டவராக இல்லாமல், அனைவரையுமே முழுமையான பார்வையற்றவர்களாகக் காட்டியிருப்பது இதுவும் இன்னொரு திரைப்படம் தான் என்பதைக் காட்டுகிறது. ஆக, பார்வை மாற்றுத்திறனாளி என்பவருக்கு துளியளவும் பார்வை இருக்கக்கூடாது என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது. இயக்குனரும் அந்த நிலையிலேயே தேங்கிவிட்டதால், ‘குக்கூ’ திரைப்படமும் ‘காசி’, ‘ராஜ பார்வை’, ‘மேஜர் சந்திரகாந்த்’ என பின்னோக்கித்தான் பயணிக்கிறது. ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி பிச்சைக்காரராக நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில், "நல்லாத்தான இருக்கற? ஏன் பிச்சை எடுக்கற?" என்று ஒருவர் கேட்பார். அதற்குக் கவுண்டமணி, "நீ போடற அம்பது பைசாவுக்காக எனக்கு கை, காலு, கண்ணு எதுவுமே இருக்கக்கூடாதா?" என்று கேட்பார். இதே கேள்வியைத் தான் இத்திரைப்பட இயக்குனரிடம் நாமும் கேட்கிறோம். வாசனை மூலமாக அடையாளம் காண்பது, கட்டித் தழுவிப் பார்த்து அடையாளம் கொள்வது போன்றவை எல்லாம் இத்திரைப்படத்தின் திருஷ்டிப் பரிகாரங்கள். அவை குறித்துப் பேசாமல் கடந்து விடுவதே நல்லது. முன்னதாக, ‘நன்றி சமர்த்தனம் அறக்கட்டளை’ என்ற பெயருடன்தான் திரைப்படம் தொடங்குகிறது. தன்னார்வலர்கள் வாசித்துக் காட்டும் இடம், நாயகி தங்கிப் படிக்கும் விடுதி, நாயகன் தங்கியிருக்கும் இடம், விற்பனைக்கான பொருட்களைக் கொள்முதல் செய்யும் இடம் அனைத்தையும் யதார்த்தமாகக் காட்டியிருந்தாலும், அவை எந்த இடங்கள் என்பதை வாய்மொழியாகவோ, சப்-டைட்டில் முறையிலோ குறிப்பிடவில்லை என்பது மிகப்பெரிய குறை. ஏனெனில், இவை ஒவ்வொன்றும் இத்திரைப்படத்தில்தான் முதல் முறையாக காட்டப்படுகின்றன என்பதால் அவை குறித்த அனுபவம் பொதுச் சமூகத்திற்கு இருக்காது. அதைச் செய்யாததால், அந்தக் காட்சிகள் முழுமையான தாக்கத்தை பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தவில்லை. விகடன் முத்திரை, இயக்குனர் லிங்குசாமி போன்றோரைத் திரையில் காட்டும்போதே பார்வையாளர்களுக்கு அடையாளம் தெரிந்துவிடும். ஆனாலும், இயக்குனர் ராஜூ முருகன் தனது குரலிலும் விகடன், லிங்குசாமி போன்ற பெயர்களைப் பதிவு செய்கிறார். இதே போன்ற அக்கறை, பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடர்பான இடங்களைக் காட்டும்போதும் இருந்திருக்கலாமே! பார்வை மாற்றுத்திறனாளிகளின் பின்புலத்தைப் பொதுச் சமூகம் புரிந்துகொள்ளும் அளவிற்குக் காட்டுவதற்கான அரிய வாய்ப்பை இயக்குனர் தவறவிட்டாரே? பார்வை மாற்றுத்திறனாளிகளை அவர்களது பெற்றோருடன், குழந்தைகளுடன், பணிபுரியும் சூழல்களைக் காட்டுவது எவ்வளவு முக்கியம் தெரியுமா? ஏனென்றால், இன்றைக்கும்கூட பார்வை மாற்றுத்திறனாளிகளின் பள்ளிகள், விடுதிகளுக்கு வருகின்ற பொதுமக்கள், "இவர்களுக்கு பெற்றோர் இருக்கின்றனரா?”, “இவர்கள் வீட்டிற்குச் செல்வார்களா?" என்பன போன்ற கேள்விகளைத் தவறாமல் கேட்கின்றனர். அதாவது, மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருடன் இருப்பதை பொதுச் சமூகம் உணர மறுக்கிறது! திரைப்படங்களும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் பின்புலத்தைக் காட்டுவதில் அக்கறை கொள்வதில்லை; தனித்தனியான மனிதர்களாகவே காட்டுகின்றன. இதன் காரணமாக, பார்வை மாற்றுத்திறனாளிகளின் திருமணம், குழந்தைகள் என்பன போன்றவற்றில் பொதுச் சமூகம் அறியாமையுடனேயே இருக்கிறது. தேவர் பிலிம்ஸ், இராம நாராயணன் திரைப்படங்களில், "இந்த விலங்குகளுக்கு இருக்கற பாசம், நன்றி உணர்ச்சி கூட மனுசங்களுக்கு இல்லயே!", "வாயில்லாத இந்த ஜீவன்களுக்கு எவ்வளவு அறிவு, திறமை பாருங்க!" என்பன மாதிரியான வியந்து பாராட்டும், அனுதாபம் காட்டும் வசனங்கள் தவறாமல் இடம்பெறும். பார்வை மாற்றுத்திறனாளிகளையும் படைப்பாளிகள் அவ்விதம்தான் கருதுகின்றனர்; கையாளுகின்றனர். விலங்குகளை வைத்து விந்தைகள் புரியும் சாகச மனநிலையில்தான் படைப்பாளிகள் சிந்திக்கின்றனர். ஆரம்பத்தில் யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாகத் தொடங்கிய இயக்குனர் ராஜூ முருகன், போகப்போக சாகச மனநிலைக்குச் சென்றுவிட்டது ‘குக்கூ’ திரைப்படத்தின் மிகப்பெரிய பின்னடைவு. ஆக, வடிவேலு பாணியில் மிகச் சுருக்கமாகச் சொன்னால், ‘ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. உன்னோட ஃபினிஷிங் சரியில்லயேப்பா!’ ஒரு முக்கிய அறிவிப்பு! அடுத்த பகுதியுடன் இந்தத் தொடர் நிறைவு பெறவிருக்கிறது. பார்வையை இழந்த பின்னரும் அசாத்தியமான முறையில் பழிவாங்கும் ‘இரவு சூரியன்’, ‘ரெண்டு’, ‘தாண்டவம்’ மற்றும் குரலை வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட முக்கோணக் காதல் கதைகள் ‘நிலவே முகம் காட்டு’, ‘உள்ளம் கொள்ளை போகுதே’ போன்ற திரைப்படங்களை இந்தத் தொடரில் எடுத்துக்கொள்ள இயலவில்லை. சரி, நிறைவுப் பகுதியாக இடம்பெறவிருக்கும் திரைப்படம் எது? இரு ஆசிரியர்களுக்கு இடையிலான உரையாடல் பின்வருமாறு, "ஏற்கெனவே கண் பார்வை மோசமா இருக்கு. அப்புறமும் அந்த பல்ப உத்துப் பாத்துக்கிட்டு என்ன பண்றீங்க?" "லைட். இத எப்படிச் சொல்லிக் கொடுக்கறதுன்னு தேடுறேன்!" "எல், ஐ, ஜி, ஹெச், டி. லைட். அவ்வளவு தான்!" "நீங்க சொல்றது ஸ்பெல்லிங். ஆனா, லைட்னா ஒளி, வெளிச்சம். இத எப்படிச் சொல்லிக் கொடுக்கறது?" அதே ஆசிரியருக்கும் ஒரு குழந்தையின் தாயாருக்கும் இடையிலான உரையாடல் பின்வருமாறு, "இருபது நாள் முடிஞ்சு போச்சு. என் குழந்தையால எதுவுமே கத்துக்க முடியல. நாம தோத்துப் போயிட்டோம்". "இருபது நாள் இன்னும் முடியல. இன்னமும் ஒரு மணி நேரம் இருக்கே!" "இருபது நாள் ஒண்ணும் முடியல. ஒரு மணி நேரத்தில என்ன செய்ய முடியும்?" "கத்துக்கறதுங்கறது நெருப்பு பத்திக்கறது மாதிரி. அதுக்கு ஒரு நொடி கூடப் போதும். நான் மறுபடியும் முயற்சி பண்ணிப் பாக்கறேன். ப்ளீஸ்!" இப்படியான ஆர்வம் கொண்ட ஆசிரியர் மற்றும் பிடிவாதம் கொண்ட குழந்தை இடையிலான உறவையும், கல்வியையும் பேசிய அந்தத் திரைப்படம் இந்தத் தொடரின் நிறைவுப் பகுதியாக! *** (கட்டுரையாளர் ஈரோடு செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல). தொடர்புக்கு: [email protected] “என் பின்னாலேயே வா மாப்ள” என்று சொன்னபடியே, தன் தோளில் கைவைத்து உடன் நடந்த கனகராஜை தனக்குப் பின்னால் ஒதுக்கிவிட்டு, வலக்கையில் பிடித்திருந்த ஸ்டிக்கைத் தன் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, வீட்டின் முன் கேட்டைத் திறந்தான் சசி. “மாப்ள இங்க செருப்பை விடு” என்று சொன்னவனிடம், “இது வீட்டோட முகப்பா சசி?” என அறியாதவனாய் கனகு கேட்டான். “இது கார் பார்க்கிங் மாப்ள”. “கார் நிறுத்தவா? அப்டினா, புதுசா கார் வாங்கியிருக்கியோ?” “அட நீ வேற. கார் வாங்கி என்ன பன்றது? இப்போலாம் சிட்டில கார் பார்க்கிங் வைக்காம வீடு கட்டவே முடியாது. பேங்க்ல லோன் தரமாட்டான்”. “அடப்பாவத்த! இவ்ளோ இடம் வேஸ்டு தானே?” என்று அங்கலாய்த்தான் கனகு. “என்ன பன்றது? வீட்டோட முற்றமுனு நினைச்சுக்க வேண்டியதுதான்” என்று பதில் சொன்னான் சசி. பேசிக்கொண்டே இருவரும் வீட்டின் ஹாலை அடைந்தார்கள். “இப்டி உட்காரு” என்று சுவரோரமாய் போடப்பட்டிருந்த சோஃபாவின் மேற்பரப்பில் கனகராஜின் கையை பிடித்து வைத்தான் சசி. இருக்கையில் சாய்ந்த கனகின் கைகள் சோஃபாவை அளந்தன. வெல்வெட் போர்த்திய அதன் மேலுறையும், உட்காரும்போது உணரப்படுகிற ஒருவிதத் துள்ளலும் அவனுக்கு நேற்று அவன் பயணித்த அரசு விரைவுப் பேருந்தை நினைவுபடுத்தியது. “நேத்து பஸ்ல கண்டக்டரோட ஒரே சண்டையாயிடுச்சு மாப்ள” என்று தொடங்கினான் கனகு. “என்ன? பாஸ் செல்லாதுனு சொன்னாரா?” “அப்டி சொல்லிருந்தா பரவாலயே. அது ஸ்பெஷல் பஸ்ஸாம், அதுனால அதுல பாஸ் செல்லாதாம். நான் விடல. செல்லாதுனு அடையாள அட்டை ஜெராக்ஸ்ல எழுதிக்கொடு, நான் டிக்கெட் எடுத்துக்கிறேனு கண்டிப்பா சொல்லிட்டேன். அப்புறம்தான் நம்ம வழிக்கு வந்தாரு அவரு. ஆனா ஒன்னு, அவரு மட்டும் எழுதிக்கொடுத்திருந்தா நடுவழியிலயே நான் கீழதான் இறங்கிருக்கனும். கால் சார்ஜ் கணக்குப் பண்ணிதான் மாப்ள காசு கொண்டாந்தேன்” என்று வெள்ளந்தியாய் கனகு சொன்னதைக் கேட்டு, உள்ளுக்குள் வருந்தினான் சசி. தரையின் வழவழப்பைத் தன் கால்களால் நுகர்ந்துகொண்டிருந்த கனகுவிடம், “மாப்ள உட்கார்ந்திரு இதோ வாறேன்”, சொல்லிவிட்டு தன் அறைக்குப் போனான் சசி. சசி, கனகராஜ் இருவரும் பள்ளி கால நண்பர்கள். மதுரை ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில், சாதாரணப் பள்ளியில் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் ஒன்றாகப் படித்தவர்கள். விவசாயத்தில் அதிக ஆர்வமிருந்ததால் கனகு கல்லூரிக்குச் செல்லவில்லை. ஊரிலேயே தனது நிலத்தில் விவசாயம் பார்க்கத் தொடங்கியவன், எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த அத்தை மகள் லட்சுமியைத் திருமணம் செய்துகொண்டான். வறுமையின் காரணமாக கண்ணில்லாதவனுக்கு வாழ்க்கைப்பட்ட லட்சுமிக்கு அது மிகப்பெரிய மனக்குறையாகவே இருந்தது. ஆனால், விவசாயம் தொடர்பான அத்தனை செயல்களிலும் அவன் காட்டிய ஆர்வமும், உழைப்பும் அவளுக்கு மிரட்சியும், ஆச்சரியமும் தந்தது. கூடவே, அவனது கள்ளம் கபடமில்லாத அன்பு அவளை மெல்ல அவன்மீது பிடிப்புகொள்ள வைத்தது. நிலம், மனைவி, இரண்டு குழந்தைகளே தன் உலகம் என வாழ்ந்தவனை, இன்று பத்திப் பைகளுடன் ஊர்ஊராய் சுற்றவைத்திருக்கிறது காலம். பி.எட். முடித்துவிட்டு, ஆசிரியர் பணியை அரசிடம் போராடிப் பெற்ற கடைசித் தலைமுறை பார்வையற்றவர்களுள் சசியும் ஒருவன். தன்னைப்போலவே ஒரு பார்வையற்ற பெண்தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்கிற உன்னத இலட்சியத்தோடு தேடிப்பிடித்த பெண்தான் இசை ஆசிரியை சந்திரா. சந்திராவையும், நான்கு வயது மகள் வர்ஷினியையும் தவிர சசிக்கு வேறு சொந்தம் கிடையாது. தற்போது வர்ஷினி வந்தவாசியிலிருக்கும் சந்திராவின் அம்மா வீட்டில் வளர்கிறாள். வார இறுதி நாட்களில் வர்ஷினியைப் பார்க்க இருவருமே வந்தவாசி கிளம்பிவிடுவதுதான் வழக்கம். கடந்த இரண்டு வார சனிக்கிழமைகளிலும் பள்ளி வேலை நாள் என்பதால், இந்த வாரம் சனி, ஞாயிறு மட்டுமல்லாது திங்கள் கிழமையும் சேர்த்து விடுப்பு எடுத்துக்கொண்டு குழந்தையோடு செலவிடுவது என்கிற சந்திராவின் முடிவை மாற்றியது கனகின் வருகை. ஞாயிற்றுக்கிழமை மாலையே சென்னைக்கு வந்ததில் சந்திராவுக்கு வருத்தம். “கண்டிப்பா அடுத்த வருஷம் வந்தவாசி பக்கம் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிடனும். சென்னைல இருக்கிறதால, செக்ரட்ரியேட்ல வேல, DPI போறேன், சங்க வேலைனு யாராவது வந்துக்கிட்டேதான் இருக்காங்க”, மூடிய அறைக்குள் சசியிடம் பொங்கினாள் சந்திரா. “ஏய்! அவன் இப்பத்தான்டி மொத தடவையா நம்ம வீட்டுக்கு வாறான். இன்னும் சொல்லப்போனா, அவன் இப்போதான் முதல்முறையா சென்னைக்கே வந்திருக்கான்”, சொல்லியபடியே கதவைத் திறந்துகொண்டு மீண்டும் ஹால் நோக்கி நடந்தான் சசி. “வாங்கண்ணா” என்று அழைத்தபடி, உள்ளே இருந்து வந்தாள் சந்திரா. “வாமா! இதுவரைக்கும் ஃபோன்லதான் பேசியிருக்கோம். இப்பதான் நேர்ல பார்க்கிறோம் இல்ல?”, கனகு சொல்ல, “இப்பவும் பேசிட்டுதான் இருக்கோம்” என்று சந்திரா சிரிக்கவே, சற்று ஆசுவாசம் அடைந்தான் சசி. “பாப்பா நல்லா இருக்கா?” “ம். அம்மா வீட்டில இருக்காணா. நேத்துத்தான் பாத்துட்டு வந்தோம்”, சொல்லிக்கொண்டே, தன் இடக்கையால் அவனது வலக்கையைத் தடவிப் பிடித்து, மெல்ல தன் வலக்கையில் இருந்த காஃபி டம்ளரை அவனது வலக்கைக்கு இடம் மாற்றும் வேலையைச் செய்தாள் சந்திரா. “இப்போதான் எங்களைலாம் பார்க்கனுமுனு தோணுச்சா?”, கனகு சென்னை வந்த காரணத்தை அறிவதில் ஆர்வம் காட்டினாள் சந்திரா. “இப்பவும் அவன் நம்மள பார்க்க வரல சந்திரா. அவனுக்கு மெயின் ஆஃபீஸ்ல ஏதோ வேலைனு வந்திருக்கான். என்ன மாப்ள வேலை?”, கேட்டான் சசி. “அதான் மாப்ள, உன்கிட்ட சொல்லிருந்தேனே. நம்ம ஊரு யூனியன் ஆஃபீஸ்ல ரெண்டு ஓ.ஏ. போஸ்ட் காலியா இருக்கு. பிலைண்டுக்கு ஒன்னு, ஹேண்டிகேப்டுக்கு ஒன்னு. அதுக்கு மாவட்ட ஆஃபீஸ்ல இருந்து இண்டர்வியூ அனுப்பிருக்காங்க. ரெண்டு தடவை இண்டர்வியூ தள்ளிப் போயிடுச்சு மாப்ள. ஆனா ஒருதடவை கூட எனக்கு இண்டர்வியூ கார்டு வரவே இல்ல. நானும் மாவட்ட ஆஃபீஸ்ல பலமுறை கேட்டுப் பாத்துட்டேன். சரியான பதிலே இல்ல. நம்ம மாவட்ட ஆஃபீஸ்ல வேலை பார்க்கிறாரே மணி, அவர்தான் சொன்னாரு, ‘நம்ம ஆஃபீசர் அவருக்கு வேண்டிய ஒருத்தருக்காக ட்ரை பன்றாரு. அதனால இங்க எதுவும் நடக்காது. நீ மெயின் ஆஃபீஸ்ல மனு கொடு, அவுங்க கேட்டா இவுங்களால மறுக்க முடியாது”-ன்னு. நானும் அவர் சொன்ன மாதிரி மூனு தடவை லெட்டர் போட்டுட்டேன் மாப்ள. ஆனா இதுவரைக்கும் மெயின் ஆஃபீஸ்ல இருந்து எந்த பதிலும் இல்ல. அதான் ஒரு தடவை நேர்ல போய் பாத்துரலாம்னு”. “இங்க போய் கேட்டா மட்டும் என்ன நடந்திருமுனு நினைக்கிற?”, கொஞ்சம் விரக்தியோடே கேட்டான் சசி. “இல்ல மாப்ள, மணிதான் சொன்னாரு, புதுசா வந்திருக்கிற சீஃப் ஆஃபீசரு ரொம்ப நல்ல மனுஷனாம். எல்லாத்துக்கும் உடனே நடவடிக்கை எடுக்கிறாராம்”. கனகின் குரலில் நம்பிக்கை தொனித்தது. “நானும் அப்டித்தான் கேள்விப்பட்டேன். ஆனா ஒன்னு, எப்பவுமே சாமி பிரச்சனை கிடையாது. பிரச்சனையெல்லாம் பூசாரிங்களால வர்றதுதான்”, சசி சொல்லவே, அதை ஆமோதித்துச் சிரித்தான் கனகு. ஓலாவின் மைக்ரோ காரில் கனகுவிற்குக் கிடைத்தது அதே சோஃபா சுகம். தலைக்கு மேலே ஒரு கையை உயர்த்தி, காரின் வெல்வெட் கூரையை அங்கும் இங்குமாகத் தடவிக்கொண்டே வந்தான். “ஏன் சசி! செல் எடுத்த, என்னமோ பண்ணுன, வீட்டு வாசலுக்கே கார் வந்திருச்சு. டச் செல்லுல அதெல்லாம் பண்ணலாமா?”, கனகு இடைவெளி விடாமல் கேட்ட அந்தக் கேள்வியில் அப்பட்டமாக வெளிப்பட்டது சக தலைமுறைப் பார்வையற்ற சமூகத்திடையே நிலவுகிற மிகப்பெரிய இடைவெளி. “டச் மொபைல்ல எல்லாமே ஆப் தான் மாப்ள. இது ஓலா ஆப். உட்கார்ந்த இடத்திலிருந்தே நாம கார் புக் பண்ணிக்கலாம்”, சசி முடிக்கும் முன்பே, “அப்போ ஸ்டிக்கப் போட்டு, தடவித் தடவி பஸ் ஸ்டாப் போயி, ஒவ்வொருத்தர் கிட்டையா இது என்ன நம்பரு, என்ன நம்பருனு கேட்டு பஸ் ஏறுற கஷ்டம் இல்ல. உனக்கு ரொம்ப வசதியாப் போச்சு. நீ அடுத்தவுங்க கிட்ட கேட்கவே கூச்சப்படுற ஆளாச்சே”, கனகு சசியின் தொடையைத் தட்டினான். “முன்ன மாதிரிலாம் இல்ல மாப்ள. மதுரையில ஸ்டிக் இல்லாம கெத்தா நடந்த காலமெல்லாம் போச்சு. சென்னைக்கு வந்துட்டாலே ஸ்டிக் எடுக்கனும், வாயத் தொறந்தே ஆகனும். ஆனா சென்னைல நல்லா ஹெல்ப் கிடைக்குது. நல்ல அவார்னஸ் இருக்கு”. “அவார்னஸ்னா?”, கனகு தயங்க, “அவார்னஸ்னா நம்மலப் பத்தின புரிதல்”, சசியிடமிருந்து யோசிக்காமல் பதில் வந்தது. தங்கள் வாழ்வில் கடந்தது, நடப்பது என அவர்கள் எல்லாவற்றையும் பேசிக்கொண்டே வந்தார்கள். நீண்ட நாளுக்குப் பின்னான பள்ளித் தோழனுடனான சந்திப்பு என்கிற அந்தத் தருணங்கள் மிக அழகானவை, ஒப்பனையற்றவை. அதனால்தான் கார் கடந்துவந்த முக்கால் மணிநேரத்தை அவர்கள் மூன்று நிமிடமாய் உணர்ந்தார்கள். விரைவாக வந்துவிட்டது சசிக்கு ஆச்சரியம் என்றால், 500 ரூபாய் ஆகியிருக்கிறது, அதையும் காசாகக் கொடுக்காமல், சசி ஏடிஎம் கார்டு வைத்து ஏதோ செய்கிறான் என்பது கனகுவிற்கு வியப்பாகவும், பயமாகவும் இருந்தது. அதுபற்றி பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று யோசித்தபடியே, சசியின் தோள் பிடித்து நடந்தான் கனகு. “அடேங்கப்பா! காத்து சும்மா சிலுசிலுனு அடிக்குதில்ல”, கனகு சிலிர்த்தான். “எதிர்த்த மாதிரி பீச் மாப்ள. இங்க சீக்கிரம் வேலை முடிஞ்சுட்டா, பீச் போவோம்”. “இதுதான் மெரினாவா? அப்போ அம்மா சமாதி போகலாம்”, கனகு உற்சாகமானான். அலுவலகத்தின் முன்வாயிலைக் கடந்து அவர்கள் இருவரும் முன்னேறிக் கொண்டிருக்கையில், “மாப்ள, கொஞ்சம் செருப்பைக் கழற்றிக் கால் வச்சுப் பாரேன்” என்று சசி சொல்ல, கனகு வெறுங்காலால் தரையைத் தடவினான். தரையில் நீளவாக்கில் சில புடைத்த கோடுகள் போடப்பட்டிருந்தன. “இது எதுக்கு மாப்ள?” “எல்லாம் நம்ம வசதிக்குத்தான். இந்த கோட்டுலயே அப்படியே நடந்து போனா, இது எங்க கட் ஆகுதோ, அங்க ஒரு ரூம் இருக்குன்னு அர்த்தம்” சொல்லிக்கொண்டே சுவரோரமாகக் கனகை நிறுத்தி, அவன் கையை மேலே உயர்த்திப் பிடித்து, சுவரில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் போர்டைத் தடவிப் பார்க்கச் செய்தான். ‘தண்ணீர் அருந்தும் இடம்’ என்று படித்தபோது கனகு சிலிர்த்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரெயில் புள்ளிகள் அவன் விரல்களை உரசுகையில், கனகுவிற்குள் ஏதோ செய்தது. அவன் அந்தக் கணத்தில் மிகுந்த பரவசமும், பெருமிதமும் கொண்டவனாகக் காணப்பட்டான். “ஏன் சசி, இதுமாதிரி போர்ட் ஒவ்வொரு ரூமுக்கு முன்னாலயும் ஒட்டியிருப்பாங்களோ?” வேகமாகத் தண்ணீரை விழுங்கிவிட்டு, “ஆமா. எந்த ஆஃபீஸா இருந்தாலும் நாம சுயமா, சுதந்திரமா நடமாட இந்த வசதியெல்லாம் செஞ்சு தரனுங்கிறது புதுசா வந்திருக்கிற சட்டம்” என்றான் சசி. பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் தலைமை அலுவலரின் (Chief Officer) உதவியாளர் அறை நோக்கி நடந்தார்கள். உதவியாளர் அவர்களிடம் சொன்ன வழக்கமான பதில், “ஐயா இல்லங்களே”. “எப்போ வருவார்?” “ஐயா ஒரு மீட்டிங் போயிருக்காங்க. எப்போ வருவாங்கனெல்லாம் சொல்ல முடியாது”, சசிக்குப் பதில் சொன்னார் அவர். “இல்ல சார், ஃப்ரெண்டு ரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்காப்ல”, சசி இழுக்க, “புரியுது சார். ஆனா ஐயா இப்போ அவைலபில் இல்லையே. என்ன பன்றது? நீங்க ஒரு ஃபோன் பண்ணிக் கேட்டுட்டு வந்திருக்கலாமே?” நிதானமாக பதில் சொன்னார் உதவியாளர். “நீங்க ஒன்னு பண்ணுங்க. ஜே.ஓ.-வைப் பாருங்க. கொஞ்சம் முன்னால போய் வலது பக்கமாத் திரும்பி, பத்து ஸ்டெப். ஜே.ஓ. ரூம் எதுனு கேளுங்க” என்று சொல்லி, இருவரையும் அங்கிருந்து நகர்த்துவதில் வெற்றி பெற்றார் அவர். சிறிதுநேரக் காத்திருப்பிற்குப் பிறகு இருவரும் ஜே.ஓ. அறைக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். கனகின் கையில் வைத்திருந்த கடிதத்தை வாங்கிப் படித்தார் ஜே.ஓ. “ஏன் உங்களுக்கு இண்டர்வியூ கார்டு வரல?” ஜே.ஓ. கேட்டார். சில வினாடிகள் யோசனைக்குப் பிறகு, “தெரிலங்கையா”. பவ்யமாகச் சொன்னான் கனகு. “கார்டு வரலைனு மாவட்ட ஆஃபீசர்கிட்டைல சொல்லனும். இங்க வந்து என்ன பன்றது?” கொஞ்சம் காட்டமாகவே கேட்டார் ஜே.ஓ. “பல தடவை பார்த்துப் பேசிட்டேங்கயா. ஒவ்வொரு தடவையும் பேரச் சேர்த்துடுறேனு சொல்றாரே தவிர...” கனகு இழுத்தான். “விண்ணப்பமெல்லாம் கரெக்டா ஃபில் பண்ணிக் கொடுத்தீங்களா?” “ம். கொடுத்தேங்கையா”. “சரி, நாங்க என்னன்னு விசாரிக்கிறோம்”. “இல்ல சார் இண்டர்வியூ அடுத்த வாரம்”, சசி தயங்கிச் சொல்ல, “அடுத்த வாரம் இண்டர்வியூவ வச்சுக்கிட்டு இப்போ வந்து சொன்னா?” கோபமானார் ஜே.ஓ. “இல்லங்கையா, இது சம்பந்தமா மூனு லெட்டர் போட்டிருக்கேன்”, பதட்டமும் கோபமுமாய் கனகும் சொன்னான். “சரி, நான் பாக்குறேன்”. “இல்ல சார், நீங்க மாவட்ட அதிகாரிகிட்ட பேசுனீங்கனா...” சசி இழுக்க, “எனக்கு ஆர்டர் போடுறீங்களா?” ஜே.ஓ. குரல் இறுகியது. “அப்டிலாம் இல்ல சார்”. “வேற எப்படி? நான் பாக்குறேனு சொல்லிட்டேன். இவுங்கட்ட பேசு, அவுங்கட்ட பேசுனலாம் எனக்கு நீங்க சொல்லக்கூடாது. நீங்க வெளிய போங்க”, கத்தத் தொடங்கினார் ஜே.ஓ. “வெளிய போங்களா? அவ்ளோ தூரத்திலேருந்து வர்றோம். சரியான பதிலும் சொல்ல மாட்றீங்க. வெளிய போங்கனு கத்துனா எப்படி?” கனகு கோபமாகக் கத்தினான். “இங்க சத்தமெல்லாம் போடக்கூடாது. எனக்கு நிறைய வேலை இருக்கு”. “இதுவும் உங்க வேலைதானே?” “கனகுக்கும் ஜே.ஓ.-வுக்கும் இடையே வாக்குவாதம் சூடாகிக் கொண்டிருந்தது. கனகை சசியால் அமைதிப்படுத்த இயலவில்லை. வேறு ஏதாவது தவறாகப் போய்விடுமோ என சசி பயந்துகொண்டிருக்க, ஒரு அலுவல் நிமித்தமாக ஜே.ஓ.-வைச் சந்திக்க அறைக்குள் நுழைந்தார் ஈ.ஓ. வாக்குவாதத்தை இடைநிறுத்தி, “வாங்க சார்” என்றார் ஜே.ஓ. ஜே.ஓ.-வுக்குத் தலையசைத்துவிட்டு, “என்னப்பா சசி! நல்லா இருக்கியா?” என்று சசியின் தோளைத் தட்டினார் ஈ.ஓ. ஈ.ஓ.-வுக்குத் தெரிந்தவர்களாக இருக்குமோ என்ற சுதாரிப்புடன், “யூனியன் ஆஃபீஸ் ஓ.ஏ. போஸ்டுக்கு அப்லே பண்ணிருக்காறாம். மாவட்ட ஆஃபீஸ்ல இருந்து இண்டர்வியூ கார்டே வரலையாம்”, ஜே.ஓ. சொல்ல, ஏதோ ஜே.ஓ.-விற்கு சைகை செய்துவிட்டு, “எந்த மாவட்டம் பா?” சசியிடம் கேட்டார் ஈ.வோ. “புதுக்கோட்டை சார்”. “சரி கீழ என் ரூம்ல இருங்க. நான் வர்றேன். முத்து, இவுங்க ரெண்டு பேரையும் கீழ என் ரூம்ல விட்டுடு” ஜே.ஓ.-வின் உதவியாளரிடம் சொன்னார் ஈ.ஓ. “சார் உங்க நண்பர் ரொம்ப டென்ஷனாயிட்டாரு?” சசியிடம் பேச்சுக்கொடுத்தார் முத்து. “பின்ன என்னங்க, அவனவன் காட்டிலையும் மேட்டிலையும் விழுந்தடிச்சு வாறான். உட்கார்ந்துக்கிட்டு நாட்டாமத்தனம் பண்ணுறாங்க”, சூடு தணியாமல் சொன்னான் கனகு. “சரி, கோபப்படாதீங்க சார். நீங்க ஈ.ஓ. சாராண்ட பொறுமையா எடுத்து சொல்லுங்க சார். கண்டிப்பா அவரு சால்வ் பண்ணிடுவாரு” சசியிடம் சொல்லிக்கொண்டே, ஈ.ஓ.-வின் அறைக்கு அருகே போடப்பட்டிருந்த இருக்கைகளில் இருவரையும் அமர்த்திவிட்டுத் திரும்பினார் முத்து. அறை திரும்பிய ஈ.ஓ. இருவரையும் அழைத்துப் பேசினார். “மாவட்ட ஆஃபீசர்கிட்ட பேசிட்டேன் பா. கனகராஜ் தானே உன் பேரு? நேத்துத்தான் கார்டு அனுப்பிருக்காங்கலாம். ரெண்டு நாளுல வந்துடும். கார்டே வரலைனாலும் நீ இண்டர்வியூவுக்குப் போ. ஆஃபீசர் ஏதாவது சொன்னா எனக்கு ஃபோன் பண்ணு. ஏம்பா சசி உன்கிட்ட என் நம்பர் இருக்கில்ல?” “இருக்கு சார்”, சசி சொன்னான். “பின்ன என்னப்பா? கவலப்படாம, தைரியமாப் போ”. ஈ.ஓ. பேசியது கனகுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. “சார் நீங்க எவ்ளோ தன்மையாப் பேசுறீங்க? அவரு கத்த ஆரம்பிச்சிட்டாரு சார்”, கனகு சொல்ல, “அந்தாள விடுப்பா. நல்ல மனுஷன்தான், கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி”, ஈ.ஓ. முடிப்பதற்குள், “நாம ஒன்னும் சும்மா இங்க வாரதில்லையே சார்?” சசி சொல்ல, “புரியுது, புரியுது. உனக்கு க்ரீவன்ஸ் இல்லைனா நீ ஏம்பா இங்க வரப்போற? சரி, அதெல்லாம் விடுங்க. சாப்டீங்களா?” “இல்ல சார், போய்த்தான் சாப்பிடனும்”. “சாப்பிடுறீங்களாப்பா”, தனக்கு எதிரே வைத்திருந்த டிஃபன் பாக்ஸை சுண்டினார் ஈ.ஓ. “பரவால சார், நீங்க சாப்பிடுங்க. நாங்க கிளம்புறோம். கொஞ்சம் ஞாபகம் வைச்சுக்கங்க சார்”, கனகைத் தொட்டுக்கொண்டு சொன்னான் சசி. “ஏம்பா சசி! உனக்குத்தான் என்னப்பத்தி தெரியுமே. கவலைப்படாம போங்கப்பா. நான் பாத்துக்குறேன்”. அறையை விட்டு இருவரும் நம்பிக்கையோடு வெளியேறினார்கள். ஈ.ஓ.-வின் குரல் கனகின் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. அவர்கள் இருவரையும் கடந்து ஈ.ஓ.-வின் அறைக்குள் நுழைந்தார் ஜே.ஓ. தன் டிஃபன் பாக்ஸை திறந்துகொண்டிருந்த ஜே.ஓ.-விடம், “என்ன சார், டென்ஷன் ஆயிட்டீங்களா?” சிரித்துக்கொண்டே கேட்டார் ஈ.ஓ. “ஐயோ! அதை ஏன் கேட்கிறீங்க?” “உங்களுக்கு ட்ரிக் தெரியல. அவுங்ககிட்ட வாதமெல்லாம் பண்ணக்கூடாது. சரிப்பா, செஞ்சிடலாம்பானு அவுங்க பாணிலேயே பேசி அனுப்பப் பார்க்கனும். வெளில பார்த்தீங்கல்ல, எவ்ளோ திருப்தியா போறாங்கனு”, தன்னை வியந்தபடியே முதல் பிடிச் சோற்றை விழுங்கினார் ஈ.ஓ. “ஏன் சசி, இவரு யாரு?” “இவரு ஈ.ஓ. உமாநாத் சார்”. “ஜே.ஓ.-விடப் பெரிய பதவியோ?” “அதெல்லாம் இல்ல. ஆனா இவருதான் இங்க எல்லாமே. நல்ல அரசியல் செல்வாக்கு உள்ளவரு. அதனால இவரை யாரும் அவ்ளோ சீக்கிரம் எதுக்க மாட்டாங்க”, சசி சொல்ல, “இவரு செய்வாருன்னு நம்புறேன்”, கனகு மையமாகச் சொல்ல, “இல்ல மாப்ள, நிச்சயமா செய்வாரு. உடனே மாவட்ட ஆஃபீசர்கிட்ட பேசிட்டாரு பாத்தியா? அதான் கார்டு வரலைனா ஃபோன் பண்ண சொல்லிருக்காருல்ல”, நம்பிக்கை ஊட்டினான் சசி. பேசிக்கொண்டே இருவரும் நடந்தபோது, ஓர் அறையிலிருந்து அந்தப் பெண் குரல் கேட்டது. “மாப்ள, ஒரு நிமிஷம் கௌசல்யா மேடத்தைப் பார்த்துட்டுப் போயிடுவோம்”. “அவுங்க யாரு?” “சூப்பிரண்டெண்ட். ரொம்ப நல்ல டைப். நல்லாப் பேசுவாங்க. உன் பிரச்சனையை அவுங்க கிட்டையும் சொல்லிக் கொஞ்சம் ஃபாலோ பண்ணிக்கச் சொல்லுவோம்”, சொல்லிக்கொண்டே குரல் வந்த கோப்புகள் பிரிவுக்குள் இருவரும் நுழைந்தார்கள். சிலர் பணி நிமித்தம் கணினியில் டைப் செய்துகொண்டிருக்க, வேறு சிலரோ பேப்பரும் பேனாவுமாக இருந்தார்கள். “மேடம், மேடம்” என்று அழைத்தபடி சசி முன்னேறுகையில், குறைந்த இடைவெளிகளில் அடுத்தடுத்துப் போடப்பட்டிருந்த மேசைகளில் ஒன்றில் இடித்துவிட்டான். “சொல்லுங்க என்ன வேணும்”, உரத்துக் கேட்டது ஒரு ஆண் குரல். “கௌசல்யா மேடம்”. “மேடம் இல்லையே”. “மேடம் வாய்ஸ் கேட்டுச்சே?” “இப்பதான் வெளில கிளம்பினாங்க”, கௌசல்யாவின் சைகையை மொழி பெயர்த்தார் அந்த ஊழியர். சசிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. நிச்சயமாக எதுவும் சொல்ல முடியாது என்பதால், எதுவும் பேசாமல் அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். “சே! ஜஸ்ட் மிஸ். இப்பதான் வெளிய போனாங்களாம். உனக்கு லக்கே இல்ல மாப்ள”, பந்தை கனகின் பக்கமே திருப்பிவிட்டான் சசி. “பரவால விடு சசி. சீஃப் ஆஃபீசரைப் பார்க்க முடியலைனாலும், உமாநாத் சாரைப் பார்த்தது ரொம்ப நல்லதாப் போச்சு”, கனகு பூரித்தான். “ஆமாமா. இன்னும் ரெண்டு செகண்ட் ஈ.ஓ. லேட்டா வந்திருந்தாருன்னா, நீயும் ஜே.ஓ.-வும் அடிச்சுக்கிட்டுதான் நின்னிருப்பீங்க”. இருவரும் அலுவலகத்தின் முன்வாயிலில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். “சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்க! கார் போகட்டும்”, வாயிற்காவலர் அவர்களின் கைபிடித்து இழுத்தார். “யார் காருண்ணே?” சசி கேட்டான். “சீஃப் ஆஃபீசர் மீட்டீங் போறாரு”. “இன்னக்கி அவர் வரலைனாங்க?” கனகு வேகமாகக் கேட்க, “காலைல பத்தரைக்கெல்லாம் அவரு வந்துட்டு, இப்போதான் ஒரு மீட்டிங்காக வெளிய போறாரு”. வாயிற்காவலரின் பதிலைக் கேட்டபோது இருவருக்கும் அந்த உதவியாளர்மீது கோபம் கோபமாக வந்தது. “சரி விடு மாப்ள. அவரப் பாத்திருந்தாலும் என்ன சொல்லிருப்பாரு, நான் பாத்துக்கிறேன் போங்கனுதானே?” கனகைத் தேற்றினான் சசி. இருவரும் கடற்கரைச் சாலைக்கு அருகே வந்து நின்றுகொண்டார்கள். அடுத்தடுத்து வந்த வாகனங்களால் சாலை பரபரத்துக் கிடந்தது. அவர்களை சாலைக்கு அந்தப் பக்கமாகக் கடத்தி விடும்படியாகவும் எவரும் வரவில்லை. சாலையின் ஓரமாகவே சிறிது தொலைவு நடந்து சென்று உதவி கேட்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தபோது, தொலைவில் ஈ.ஓ. உரத்துப் பேசிக்கொண்டு வருவது கேட்டது. அவரிடமே சாலையைக் கடத்திவிடச் சொல்லலாம் என சசி நினைத்தான். யாரிடமோ அலைபேசியபடியே எதிர்த்திசையில் இருந்து வந்துகொண்டிருந்தார் அவர். குரல் வந்த திசை நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான் சசி. சசி தன் குரலை கவனித்துவிட்டதை உணர்ந்த மாத்திரத்திலேயே, ‘ஒரு நிமிஷம்’ என்று அலைபேசுவதை இடைநிறுத்திவிட்டு, “சசி! கவலைப்படாம போங்க. நான் பாத்துக்கிறேன்”, சொல்லிவிட்டு அவர்களின் பதிலை எதிர்பாராதவராய் ‘ஹலோ’ என்று தனது உரையாடலைத் தொடர்ந்தபடி, அலுவலகம் நோக்கி வேகமாக நடந்தார் ஈ.ஓ. சிறிது தொலைவு நடந்த இருவரும், வழியில் எதிர்பட்ட யாரோ ஒரு பொது ஜனத்தின் உதவியோடு சாலையைக் கடந்து, கடல் கரை சேர்ந்தார்கள்! *** தொடர்புக்கு: [email protected] “குழந்தைகளே! இது உங்களின் தினம், உங்களுக்காகவே!” என்று பெருமை பேசும் அளவிற்கு இன்றைய சமூகமும், சூழலும் இல்லை என்றே சொல்வேன். நம் வாழ்வில் மீண்டும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றால், நாம் பயணிக்க விரும்பும் பருவம், குழந்தைப் பருவமாகத்தான் இருக்கும். பிஞ்சு மனங்களாய், பேதைகளாய் வாழவே நாம் ஒவ்வொருவரும் ஏங்கிக் கிடக்கின்றோம். ஆனால், குழந்தைகள் மீதான வன்முறைகள்தான் அதிகமாகி வருகின்றன. இத்தகைய சூழலில் குழந்தைகள் நலன் குறித்து பேசுவது அவசியம் என உணர்கிறேன். குழந்தைகள் தினத்தை சிறப்பு நிகழ்ச்சிகளோடு கொண்டாட வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். அதே நேரத்தில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் அரசு சிந்தித்து துரிதமாக செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகளை வடிவமைப்பது பள்ளிகள் என்றால், அவர்களைச் செதுக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. அப்படியானால், குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாப்பு தொடர்பான புரிதலை ஏற்படுத்துவதும் நமது கடமையே. பள்ளிகளில் ஆண்-பெண் வேறுபாட்டை களைய வேண்டும். பதின் பருவத்தின் கலகங்களை சரியான முறையில் வழிநடத்திட வேண்டியது இன்றைய சூழலுக்கு மிகமிக அவசியமான ஒன்று. சமீபத்தில், ‘மீ டூ’ இயக்கம் மிகப் பிரபலம் அடைந்தது. பல பிரபலங்கள் பேசியதாலோ என்னவோ, அதிகமாகவே பிரபலம் அடைந்தது போலும். அந்த சமயம், சில ஆண் பிரபலங்கள், தங்களுக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் உண்டு என வாய்திறக்க துவங்கினர். ஆம்! பாலியல் பிரச்சனைகள் பெண்களை மட்டுமே நோக்கி ஏவப்படும் கணைகள் அன்று; ஆண்களையும், குறிப்பாக ஆண் குழந்தைகளையும் வாட்டிக் கொண்டு இருக்கும் மர்ம புற்றுநோய்தான் அது. ஆனால், அவைகள் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகள் போன்றே பெரிதாக பேசப்படுவதில்லை. ஆணை ஆளுமை படைத்தவனாகவே சித்தரிக்கும் நம் சமூகம், அவனைச் சுற்றிப் போலியான திரையைப் போட்டு வைத்திருப்பது என்னவோ உண்மைதான். அதனால்தான், தனக்கு நேரும் கொடுமைகளைக்கூட ஆண்கள் கௌரவம், மரியாதை, பெயர், புகழ் என்கிற திரைகளுக்குப்பின் ஒளித்து வைத்துக்கொள்கின்றனர். பெண் குழந்தையோ, ஆண் குழந்தையோ; அவர்களுக்கு தங்களின் வாழ்க்கையை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழும் உரிமை உண்டு. அப்படியிருக்க, அதைப் பெற்றுத் தரவேண்டியது நமது கடமை. எப்படி என்ற வினாவிற்கு விடை தருவதே இன்றைய இளைய தலைமுறைக்கு தேவை. நமது கல்வி முறைகளில் கட்டாயம் மாற்றங்களை கொண்டு வருதல் அவசியம். இன்னமும் பழையவர்களின் சிந்தனைகளையே நாமும் சிந்திக்க கற்றுக் கொடுப்பதாலோ என்னவோ, சுய சிந்தனையை மறந்தே போய்விட்டது இன்றைய தலைமுறை! ஆபத்து காலங்களில் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிகளையும், முதலுதவி குறித்த விழிப்புணர்வையும் பாடப்பகுதிகளில் இணைப்பது மட்டுமல்லாமல், செயல்முறை வகுப்புகளைக் கட்டாயமாக்கிட வேண்டும். உடற்பயிற்சி வகுப்புகள் இன்னும் உயிரோடு இயங்கி வருகின்றனவா என்பது சந்தேகமே. அதை மாற்றி, கராத்தே, சிலம்பம் போன்ற வீர விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தந்திட வேண்டும். ஆண், பெண் உடலமைப்பு குறித்த சரியான புரிதலை இருபாலருக்கும் ஏற்படுத்துவதோடு, மனதளவிலும் எவரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் அன்று என்ற கருத்தினை ஆழப் பதியச் செய்தல் வேண்டும்; முதலில் அதைப் பெற்றோரும் ஆசிரியர்களும் மனதில் ஏற்றுக்கொள்ளுதல் அவசியம். குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தீய தொடுதலைக் கற்பிக்கும்போது, எவரேனும் தவறாகத் தொட்டால், “கத்தி மற்றவரைக் கூப்பிடு” என்று கற்றுத்தருவதை விடுத்து, தொடுபவரை எவ்விதத்தில் கையாண்டு தன்னைத் தற்காத்தல் வேண்டும் என்பதை கற்றுத்தருவதே சாலச் சிறந்தது. குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து யோசிக்காத அரசுகளை இனி நாமும் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறான மாற்றங்கள் இனி வருங்காலத்தில் அவசியம் வரவேண்டும்; இல்லை என்றால், இந்த உலகம் இனி மெல்ல கருகும்! *** (கட்டுரையாளர் தஞ்சை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்). தொடர்புக்கு: [email protected] ‘பதிலி எழுத்தர்கள்’ - இப்படிச் சொன்னால் சட்டென யாருக்கும் இந்த வார்த்தையின் அர்த்தமோ, வீரியமோ விளங்கிவிடாது. மாறாக, ‘ஸ்கிரைப்’ என ஆங்கிலத்தில் சொன்னால்தான் இந்த வார்த்தையின் வீரியம் விளங்கும் நம்மில் சிலருக்கு. பார்வையற்றவர்களின் பள்ளி துவங்கி, பொதுவான போட்டித் தேர்வுகள் வரை நமக்கு உற்ற துணையாய் வருபவர்கள் இந்தப் பதிலி எழுத்தர்கள். பதிலி எழுத்தர்களின் உதவியுடன் தேர்வு எழுதிய ஒவ்வொரு பார்வையற்றவரின் அனுபவத்தையும் கொண்டு, ஒரு ஸ்கிரைப்பீடியாவே எழுதிவிடலாம். அந்த அளவிற்கு பார்வையற்றவர்களிடையே பதிலி எழுத்தர்கள் குறித்தான அனுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நண்பர் ஒருவர், வங்கித் தேர்விற்காக சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு மதுரையில் இருந்து பேருந்தில் தன் பயணத்தைத் துவங்கியிருந்தார். இரவு 12 மணி; நண்பரின் அலைபேசி அலருகிறது. நண்பர் அலைபேசியை எடுத்து தன் காதருகே கொண்டு சென்று, யார் இந்நேரத்தில் நமக்கு அழைப்பெடுக்கிறார்கள் எனப் பார்க்கிறார். மறுநாள் வங்கித் தேர்விற்கு வருவதாகச் சொல்லி இருந்த பதிலி எழுத்தர்தான் அந்த அழைப்பை ஏற்படுத்தி இருந்தார். நண்பரும் அலைபேசியை எடுத்து, அந்தப் பதிலி எழுத்தரிடம் விஷயத்தைக் கேட்டார். அந்தப் பதிலி எழுத்தரின் உறவினர் யாரோ இறந்துவிட்டதாகவும், தன்னால் தேர்வு எழுத வர இயலாது எனவும், ஆகையால் வேறொரு பதிலி எழுத்தரை ஏற்பாடு செய்யும்படி சொல்லிவிட்டு, தன் மன்னிப்பையும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டார் அவர். நண்பரும் அந்நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் சென்னையில் வந்து இறங்கிவிட்டார். அன்று அவருக்கு அதிர்ஷ்டமும் கைகொடுக்கவில்லை. நான் மேலே குறிப்பிட்ட சம்பவம் ஒரு சாம்பில்தான், இதுபோன்ற பல அசௌகரியத் தருணங்களை ஒவ்வொரு பார்வையற்றவரும் கடந்து வந்திருக்கக் கூடும். இம்மாதிரியான அசௌகரியத் தருணங்களை தவிர்க்கவும், ஒரு தரமான பதிலி எழுத்தரைத் தேடவும், நம் திறன்பேசிக்குள்ளேயே ஒரு செயலி இருந்தால் எப்படி இருக்கும்? அதற்கெல்லாம் தற்போது மொத்தமாய் விடை சொல்லி இருக்கிறார்கள், பெங்களூரைச் சேர்ந்த இரண்டு ஐ.டி. வாலிபர்கள். ஒருவர் ஸ்ரீகாந்த், மற்றொருவர் ஸ்ரீராம். இருவரும் இணைந்து உருவாக்கி இருக்கும் செயலிதான் ‘Scribe Finder’. கடந்த நவம்பரில்தான் ஆண்டிராய்டு உலகத்திற்குள் குதித்திருக்கிறது இந்தச் செயலி. செயலியின் அணுகல் தன்மை வடிவமைப்பும், எளிமையான பயனர் இடைமுகமுமே (User Interface) நம்மை இந்தச் செயலிக்குள் சட்டென ஈர்த்துவிடுகிறது. இந்தச் செயலியின் நேர்த்தியான வடிவமைப்பை பயன்படுத்திப் பார்க்கையில், அந்த வாலிபர்களின் உழைப்பை நிச்சயம் நம் பார்வையற்ற சமூகம் பாராட்டியே ஆகவேண்டும். அந்த வாலிபர்களின் உழைப்பில் உருவான இந்தச் செயலியில், நமக்கு ஏற்றாற்போன்ற வசதிகள் பல வரிசையாய் கொட்டிக் கிடக்கின்றன.
நான் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்தும் துல்லியமாய் கிடைக்க வேண்டுமானால், நம் பார்வையற்ற சமூகம் இங்கே ஒரு விடையத்தைச் செய்ய வேண்டும். அதாவது, நீங்கள் சந்திக்கும் தன்னார்வலர்கள், உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்களை இந்தச் செயலியில் உறுப்பினராக இணைத்து விடுங்கள். இந்தச் செயலியில் நாமும், தன்னார்வலர்களும் எவ்வாறு உறுப்பினர் ஆகவேண்டும் என்பது குறித்து பின்னால் பார்க்கலாம். ஒரு தரமான பதிலி எழுத்தரைத் தேடி, தேர்வை எழுதி முடிக்க, அந்தத் தேர்வுக்கு நன்றாகப் படித்திருக்க வேண்டும் இல்லையா? அதற்கும் இந்த செயலிக்குள்ளேயே பதில் வைத்திருக்கிறார்கள் இவர்கள்! உங்கள் தேர்வுக்கு வேண்டிய பாடத் தொகுப்புகளையும் இந்தச் செயலிக்குள்ளேயே தர முயற்சித்திருக்கிறார்கள் இந்த வாலிபர்கள். நீங்கள் உங்களிடம் உள்ள பாடத் தொகுப்புகளையும் இந்தச் செயலிக்குள் தரவேற்றலாம். அதற்கேற்ற ஆப்ஷன்களையும் இந்த செயலிக்குள்ளேயே ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். செயலியை எப்படிப் பயன்படுத்துவது? முதலில் உங்கள் ஆண்டிராய்டு கைபேசியின் பிரத்தியேக ஆப் ஸ்டோருக்கு சென்று, ‘Scribe Finder’ என தட்டச்சவோ அல்லது உங்கள் குரலில் இந்தச் செயலியின் பெயரைச் சொல்லியோ அல்லது இந்தத் தொடுப்பை பயன்படுத்தியோ (செயலியை நிறுவ) செயலியை உங்கள் கைபேசியில் நிறுவிக் கொள்ளலாம். செயலியைக் கைபேசியில் நிறுவிய பின், அந்தச் செயலியை கண்டறிந்து அதனுள்ளே செல்லுங்கள். அங்கு உங்களுக்கு 2 தெரிவுகள் காட்டப்படும். அவை, 1. நான் பார்வையற்றவன் (I’m Needy/Visually Impaired) மற்றும் 2. நான் தன்னார்வலர் (I’m Volunteer). இதற்கு நம்மவர்கள், ‘நான் பார்வையற்றவன்’ என்ற முதல் தெரிவை தேர்வு செய்து, உங்களது விவரங்களைக் கொடுத்து புதிய கணக்கு ஒன்றை உருவாக்கிக் கொண்டால், செயலியில் உள் நுழையும் பணி முடிந்தது. உங்கள் தன்னார்வலர்களும் இந்தச் செயலியில் உறுப்பினராக வேண்டுமெனில், ‘நான் தன்னார்வலர்’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உறுப்பினர் ஆகிக்கொள்ளலாம். நீங்கள் செயலிக்குள் நுழைந்ததும், திரையில் மெனுவை தவிர மொத்தம் 4 ஆப்ஷன்கள் மட்டுமே காட்டப்படும். அவற்றில் முதலாவதாக இருப்பது, ‘உங்கள் பதிலி எழுத்தரைத் தேடுங்கள்’ (Search for Scribe). அதற்கு அடுத்ததாக முறையே, ‘பாடத் தொகுப்புகள்’ (Study Materials), ‘பாடத் தொகுப்புகளைத் தரவேற்றுக’ (Upload Notes), ‘முந்தைய பாடத் தரவேற்றல்களை காண்க’ (View Uploads). இந்த 4 எளிய ஆப்ஷன்களும்தான் இந்தச் செயலியை அலங்கரிக்கின்றன. நான் இங்கே இந்தச் செயலியின் முதலாவது ஆப்ஷனை மட்டும் விளக்குவது உசிதம் என நினைக்கிறேன்; மற்ற ஆப்ஷன்களை வாசகர்களே பயன்படுத்தி பார்த்துவிட்டு, சந்தேகங்களை பின்னூட்ட பகுதியில் வினவலாம். ‘Search for Scribes’ என்ற அந்த முதலாவது ஆப்ஷனை கிளிக் செய்தால், மொத்தம் 5 ஐகான்கள் திரையில் தோன்றும். அதில் முதலாவது, உங்கள் அருகில் உள்ள பதிலி எழுத்தரை தேடக்கூடிய ‘Near Me’ ஆப்ஷன். அப்படி உங்களுக்கு அருகில் எந்தப் பதிலி எழுத்தரும் இல்லை என்ற சிக்கலைத் தவிர்க்கும் பொருட்டு, ‘மாநிலத்தைத் தேர்வு செய்’ (Select State), ‘மாவட்டத்தைத் தேர்வு செய்’ (Select District), ‘நகரத்தைத் தேர்வு செய்’ (Select City) மற்றும் இறுதியாகத் ‘தேடுக’ (Search) பொத்தானும் கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்த ஆப்ஷன்களைக் கொண்டு, பதிலி எழுத்தரை நீங்கள் மிக எளிமையாக தேடிக்கொள்ளலாம். இந்தப் பதிலி எழுத்தரைத் தேடுக பகுதியிலுள்ள ஆப்ஷன்களில், ‘Near Me’ ஆப்ஷன் தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் ஓரளவிற்கு வேலை செய்கிறது. மற்ற மாவட்டங்களில் ‘Near Me’ ஆப்ஷன் தரமாக வேலை செய்கிறதா என்பதை வாசகர்கள்தான் பயன்படுத்திப் பார்த்துவிட்டு தங்கள் கருத்துகளைப் பகிரவேண்டும். எப்படி ஒரு பதிலி எழுத்தரைத் தேடுவது? நான் மேலே சொன்ன ‘Near Me’ ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்களுக்கு அருகாமையில் இருக்கும் பதிலி எழுத்தர்களை காண்பிக்கும்; அருகாமையில் யாரும் இல்லை எனில், ‘வேறு இடத்தைக் கொண்டு தேடுக’ என்ற செய்தி நம் திரையில் தோன்றும். எனவே, நீங்கள் மற்ற மாவட்டங்களில் உள்ள பதிலி எழுத்தர்களைத் தேடத் தயாராகிக்கொள்ள வேண்டும். ‘Near Me’ ஆப்ஷனுக்கு கீழ் உள்ள, ‘மாநிலத்தைத் தேர்வு செய்’, ‘மாவட்டத்தைத் தேர்வு செய்’, ‘நகரத்தைத் தேர்வு செய்’ போன்ற ஆப்ஷன்களில் உங்களுக்கு வேண்டியவற்றைத் தேர்வு செய்து, ‘தேடுக’ பொத்தானை கிளிக் செய்தால் பதிலி எழுத்தர்கள் உங்கள் திறன்பேசித் திரையில் வரிசையாக மிளிர்வார்கள்! அந்தப் பதிலி எழுத்தர் பட்டியலில் ஏதாவது ஒரு பதிலி எழுத்தரின் பெயரை நீங்கள் கிளிக் செய்தால், அவர் குறித்த விவரங்கள் திரையில் தோன்றும். நீங்கள் அவரது சுய விவரத்தைப் பார்த்து, உங்களுக்கு அவர் தேர்வு எழுத ஏற்றவரெனில், அவருடன் மின்னஞ்சல் வாயிலாகவோ, அலைபேசியிலோ தொடர்புகொண்டு பேசலாம். நான் மேலே சொன்ன மாநிலம், மாவட்டம், நகரம் போன்றவற்றைத் தேர்வு செய்யக்கூடிய ஆப்ஷன்கள் டிராப் டவுன் பாக்ஸாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது இச்செயலி குறித்து ஒரளவிற்கேனும் புரிந்திருக்கும் என நம்புகிறேன். இதே மாதிரியான பதிலி எழுத்தர்களைத் தேடும் செயலி ஒன்று நம் தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு உதயமாகி இருந்தது. ஆனால், தற்பொழுது அந்தச் செயலி குறித்தான பயன்பாடுகள் நம்மவர்களிடையே பெரிதாகத் தென்படவில்லை. காரணம், அவர்களுக்கென்று ஒரு தனியான நேவிகேஷன் முறையை அவர்களது ஆப் டெவலப்பர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். அந்தத் தனித்துவம்தான் அவர்களின் செயலியை கொஞ்சம் நம்மவர்களிடம் இருந்து விலக்கி வைத்திருக்கிறது. ஆனால், ‘Scribe Finder’ அப்படிப்பட்ட செயலி இல்லை என்பதை நீங்கள் இந்தச் செயலிக்குள் நுழைகையில் உணர்வீர்கள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். தற்பொழுது, தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்தச் செயலியில் உறுப்பினர் ஆகி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. பதிலி எழுத்தர்கள் சென்னை துவங்கி, தமிழகத்தின் தென்கோடி முனைவரை செயலிக்குள் பரவிக் கிடக்கிறார்கள். போட்டித் தேர்வுகள் அதிகமாகிவிட்ட இக்காலகட்டத்தில் இதுபோன்ற செயலிகளும் நம் சமூகத்திற்குத் தேவையான ஒன்றாகவே இருக்கிறது. வாசகர்களே! நீங்களும் உங்களுக்குத் தெரிந்த தன்னார்வலர்களையும் இச்செயலியில் இணைக்கத் தயார்தானே? *** தொடர்புக்கு: [email protected] அன்று காலையிலிருந்தே பயங்கர வலி! காயம் சிறியதுதான் என்றாலும், வலி தாங்க முடியாததாக இருந்தது. அன்று காலை ஏழரை மணி வாக்கில், புதிதாக வாங்கிய மருந்து (Tonic) புட்டி ஒன்றைத் திறக்க முயன்றேன்; அப்போது பெற்ற வீரக் காயம் இது! மூடிக்கும், புட்டிக்கும் இடையில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த கூர்மையான பிளாஸ்டிக் துண்டு வலது கை ஆள்காட்டி விரலில் குத்தியதன் விளைவு! சாப்பிட முடியவில்லை; தண்ணீரில் புழங்க முடியவில்லை; யாருடைய கையையும் பிடித்துக்கொண்டு நடக்க முடியவில்லை; எதையுமே தொட முடியவில்லை. கணினியை இயக்க, அலைபேசியை நோண்ட, பேருந்தில் நின்றுகொண்டு உயர இருக்கும் கம்பியைப் பிடிக்க என என் அன்றாடச் செயல்பாடுகள் அனைத்துமே பாதிக்கப்பட்டன. இவை எல்லாவற்றையும் நான் பொறுத்துக்கொண்டேன்; ஒரே ஒரு பிரச்சனை மட்டும் வலியையும் தாண்டி என்னைச் சிந்திக்க வைத்தது. வகுப்பில் பிரெயில் புத்தகத்தை என்னால் வாசிக்க முடியவில்லை! புத்தகத்தைத் தொட்டு நகரும்போது, மேடேறிய பிரெயில் புள்ளிகள் ஊசியாய் என் வலது கை ஆள்காட்டி விரலைக் குத்தின. அந்தக் காயம் படாமல் அந்த விரலை என்னால் பயன்படுத்த இயலவில்லை. வேறு விரலைப் பயன்படுத்தி வாசிக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். அது எனக்கு அதுவரை, ஏன் இது வரை பழக்கம் இல்லை. நான் மதுரை IAB பிரெயில் அச்சகத்தில் மெய்ப்புத் திருத்துனராக (Proof Reader) பணிபுரிந்தபோது நண்பர் ஒருவர் சொல்வார், “உன் வலது கை ஆள்காட்டி விரலை மட்டும் எடுத்துவிட்டால், உன் பிழைப்பு அவ்வளவுதான்” என்று. அப்போதே நான் சிந்தித்திருக்க வேண்டும். சிந்திக்கவில்லையே! பிரெயில் புத்தகத்தை வாசிப்பது எப்படி என்று கூகுளிடம் கேட்டால், அதற்கென்று தனி முறை எல்லாம் இல்லை என்று பதில் வருகிறது. ஒருவர் என்னைப் போலவே வலது கை ஆள்காட்டி விரலில் வாசிக்கிறார்; ஆனால், பாதுகாப்பிற்கென இடது கை விரல் ஒன்றையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். இன்னொருவர் வலது கை நடு விரல் கொண்டு வாசிக்கிறார்; பாதுகாப்பிற்கென வலது கை ஆள்காட்டி விரலைப் பயன்படுத்திக் கொள்கிறார். மற்றொருவர் இடது கை விரல்களை வாசிக்கப் பயன்படுத்துகிறார். என் பள்ளிக் காலத்தில் இடது கையால் புத்தகத்தை வாசித்து, வலது கையால் அதை அப்படியே பிரெயிலில் எழுதியவர்களையும் பார்த்திருக்கிறேன். இன்னும் சிலர் புத்தகத்தை மேசை மேல் நன்றாகப் பரப்பி, இரு கைகளையும் அதன் மேல் தவழவிட்டு வாசிப்பர். இப்படி பிரெயில் வாசித்தல் என்பது அது கையாளப்படும் நபர்களின் அடிப்படையில் மாறுபடக்கூடியது. அவரவருக்கு ஏற்ற வகையில், புரிந்துகொண்ட வகையில் வாசிப்பர். எனக்கு இவை எதுவுமே சரிபட்டு வராது. இதுவரை வலது கை ஆள்காட்டி விரல் மட்டும்தான் வாசிக்கப் பயன்பட்டு வருகிறது. வேறு எந்த விரலும், கையும் உதவிக்குத் தேவைப்பட்டதில்லை. ஆனால் இப்போது? முடியவில்லை. மாணவர்களை வாசிக்கச் சொல்லி சமாளித்தேன். துரோணரைப் போல் இல்லாமல், எனக்கு வாய்த்த நல்ல ஆசிரியர்களுக்கு மனதிற்குள் நன்றி தெரிவித்துக் கொண்டேன். துரோணரிடம் நான் ஒரு வேளை பிரெயில் கற்றிருந்தால், நான் ஆள்காட்டி விரலை இழந்த ஏகலைவனாகியிருப்பேன். அந்த வகையில், எனக்கு பிரெயில் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்குக் கோடானு கோடி நன்றிகள். ஆசிரியர்களுக்கு மட்டுமா? எனக்கு இவ்வெழுத்து முறையை அறிவித்த லூயி பிரெயிலுக்கும்தான். எல்லோரும் கையடக்கம் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க, விரலடக்கமாய் 6 புள்ளிகளுக்குள் அகிலத்தையே அடக்கிய அற்புத மனிதனல்லவா லூயி. தொட்டுத் தடவி பல்வேறு பொருட்களை உணர்ந்து கொண்டிருந்த கைகளை எழுத்துணரிகளாக மாற்றிய அற்புத ஆளுமை லூயி பிரெயில். அப்போதுதான் தோன்றியது, எத்தனையோ பேர் என்னென்னவோ பிதற்றுகிறார்களே! 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஒரு விரல் புரட்சி செய்துவிட்டாரே லூயி. இன்று பிரெயில் எழுத்துகளை எந்த வகையில் நாம் படித்தாலும், எத்தனை விரல்களை துணைக்கு அழைத்துக் கொண்டாலும், அவ்வெழுத்துகளை உணரப்போவது ஒரு விரல் தானே! அந்த ஒரு விரல் புரட்சியாளனை வாழ்த்துவோம், என்றென்றும்! *** தொடர்புக்கு: [email protected] பால் பிரிவு என்பதை உடல்ரீதியான அளவீடாகவே இயற்கை வைத்திருக்கிறது. அந்த அளவீட்டை நாம்தான் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்கிற பெயர்களில் மெல்ல மனதிற்கும் பழக்கப்படுத்திவிட்டோம். விளைவு, தனது இணையைப் பொருட்படுத்தாத, அல்லது தன்னை மட்டுமே முன்னிறுத்துகிற ஒரே ஜீவராசியாக ஆண்கள் நாம் மாறிப்போனோம். இந்தப் பதிவு முழுமைக்கும் எனது ‘நாம்’ என்கிற சொல்லாடல், என்னையும் உட்படுத்திய ஆண்களையே குறிக்கும் என்பது பின்குறிப்பல்ல; நேரடிச் செய்தி.
இன்றைக்கு கல்வியாலும், காலச்சூழல்களாலும் பெண்கள் வெளியே தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார்கள் என்றாலும், எல்லா நிலைகளிலும் அவர்களுக்கான சம வாழ்வை நாம் அங்கீகரித்திருக்கிறோமா என்றால், மௌனமும் அதுகடந்த குற்ற உணர்ச்சிகளுமே நம்மைத் துரத்திக்கொண்டிருக்கின்றன. நாம் சுகவாசிகள்; காலங்காலமாய் அப்படித்தான் நமது மரபணுக்கள் செறிவூட்டப்பட்டிருக்கின்றன. நமது அன்றாடங்கள், நிறைபோதை தெளிந்த ஒருவனின் இருண்ட பகல் என்பதே நமக்கு உரைக்கவில்லை. அந்த அளவிற்கு இறுகிப்போய்விட்டது நம் மனம். நாம் அழுவதையே அவமானம் என்று எண்ணும் ஏமாளிகள்; இன்னும் சொல்வதானால், அப்படி எண்ணுவதால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் கோமாளிகளும்தான் நாம். இந்த உண்மையை பல்வேறு தருணங்களில் நமது மனம் நமக்கு உரைத்துக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அதைக் காதுகொடுத்துக் கேட்பதே இல்லை. அதற்கான பொறுமையோ, அவகாசமோ நம்மிடம் இல்லை என்பதாக நாம் பாவனை செய்கிறபோது, நம்மையும் உடைத்து, ஊடுருவி, கலைத்துப்போட்டுவிடுகிற ஆற்றல் கொண்ட கலைவடிவங்களாக இருப்பவை இசையும், இலக்கியமும். நல்ல இசை நம்மை மௌனிக்கச் செய்கிறது; நல்லிலக்கியம் நம் மனதில் மெல்ல அன்பு விதை தூவுகிறது. இசையும், இலக்கியமும் இரண்டறக் கலக்கும்போது, ஆண் தன்மை தளர்ந்து உயிர்த்தன்மையில் ஒன்றுகிறது மனம். உண்மையில் உயிர்த்தன்மை என்பது என்ன? எல்லாவற்றிலும் தன்னைக் காண்பது; எவர் ஒருவரையும் தானாக உணர்வது. அப்படியானால், அத்தகைய உயிர்த்தன்மையைக் கேட்கும்போதெல்லாம் கொடையளிக்கிற தன்மை சில திரையிசைப் பாடல்களுக்கு உண்டு. அவற்றுள் ஒன்று, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம்’ பாடல். பாடலின் இத்தன்மைக்கு வலு சேர்ப்பது இலக்கியமாய் அமைந்த படத்தின் திரைக்கதை. கதைப்படி, நாகரிகச் சுவடே அறியாத ஒரு கிராமத்தில், படிப்பு வாசனை இல்லாத வெள்ளந்தி மனிதனாக, செம்பட்டை என்கிற பெயரில் தனது அன்றாடத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார் நாயகன் சிவக்குமார். அவருக்கு நந்தினி என்கிற அழகான, நவநாகரிகத்தில் ஈடுபாடு கொண்ட நாயகி தீபா மணம் முடிக்கப்படுகிறாள். நாயகியின் நியாயமான அபிலாஷைகள், அதற்குத் துளியும் பொருந்திப்போகாத நாயகன் மற்றும் அந்த கிராமம், விளைபயனாய் அவளை ஆட்கொள்ளும் ஏக்கங்கள், முரண் முடிவுகள் எனத் திரைக்கதை நம்மில் எழுப்புகிற கேள்விகள் ஏராளம். அந்தக் கேள்விகளின் முனைகளைத் தன் இசையால் கூர்தீட்டி, நாமே மார்பேந்தி வாங்கிக்கொள்ளும்படி நம்மை நோக்கி எறிந்திருக்கிறார் இசைஞானி. அதிலும், பாடலின் துவக்கத்தில் தலைகாட்டி, சரணத்தின் இடையிடையே வியாபித்திருக்கிற அந்தப் புல்லாங்குழல் இசை, அடடா! மங்கையவள் மனம் தடுமாறுகிற வாசனையைத் தடம் மாறாது நம் செவி நிறைத்துவிடுகிறது. ‘என் மன கங்கையில் சங்கமிக்க, பங்கு வைக்க, பொங்கிடும் அன்பெனும் பூம்புனலில் போதையிலே மனம் பொங்கி நிற்க, தங்கி நிற்க, காலம் இன்றே சேராதோ?’ என அணு அணுவாய்த் தன் வார்த்தைகளால் நம் மனத்தை ஆழப் பிளந்திருப்பார் கவிஞர். கண்களை மூடிக்கொண்டு நித்திரை முயற்சிக்கு நீங்கள் ஆட்படுகிற ஓர் இரவு வேளையில், எங்கோ ஒரு மூலையில், ‘மஞ்சளைப் பூசிய மேகங்களே! மோகங்களே! மல்லிகை முல்லையின் மாலைகளே! மார்கழி மாதத்துக் காலைகளே! சோலைகளே! என்றும் என்னைக் கூடாயோ?’ என்று கேட்டபடி, ஏக்கம் நிறைந்த கண்களோடு, உங்கள் எதிரே தீபா நிழலாடினால் அதற்கு வாணி ஜெயராமே பொறுப்பு. பாடல் தொடக்கம் முதல் இறுதிவரை நம்மை ஆட்கொண்டபடியேதான் கடந்து செல்கிறது. ஒரு மென்மையும், நெகிழ்வுமான மனம் வாய்க்கப்பெறுகிறோம். அந்த நந்தினியின் பொருட்டு நாம் விசும்புகிறோம். அவளுக்கு மறுக்கப்பட்டவைகளை நாமே மனதால் பட்டியலிடுகிறோம். நடைமுறையில் அப்படியான நடத்தைகளை எள்ளி நகையாடுகிற ஆண் தன்மையைக் கழற்றிப் போட்டுவிட்டு, அந்த நந்தினிக்காய் நியாயம் கேட்டு நிற்பதுவும் நம் மனம்தான் என்றால், யார் நாம்? எது நமது உண்மைத்தன்மை? எனக்குள் எழுந்த கேள்விகள் உங்களுக்குள்ளும் எழ, பாடலைக் கேளுங்கள்! ...ரதம் பயணிக்கும் *** தொடர்புக்கு: [email protected] நூலை எழுதியவர்: எண்டமூரி வீரேந்திரநாத் தெலுங்கிலிருந்து தமிழில்: கௌரி கிருபாநந்தன் படித்தது: வாசிப்பாளர் துணையுடன் வழக்கமான கிரைம் நாவல்களிலிருந்து மாறுபட்ட ஒன்று ‘ருத்ர நேத்ரா’; இது ஓர் அறிவுசார் கிரைம் நாவல். இத்தகைய நாவல்களை எழுத பல்துறை அறிவு வேண்டும். அது தனக்கு வாய்க்கப்பட்டிருப்பதை நிரூபித்திருக்கிறார் இந்த நாவலாசிரியர். கதை பக்கத்திற்குப் பக்கம் அல்ல, பத்திக்குப் பத்தி, நிமிடத்திற்கு நிமிடம் அதிர்வுகளை ஏற்படுத்திய வண்ணம் விறுவிறுப்பாக நகர்கிறது! இப்படியொரு நாவலைக் கடைசிவரை தொய்வின்றி கொண்டுசெல்ல தனித்திறன் வேண்டும் தான். ஆசிரியரைப் பற்றி கதைக்குள் செல்வதற்கு முன், ஆசிரியரைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வது அவசியமானது. இவர் ஒரு ‘சார்ட்டட் அக்கௌண்டண்ட்’ (Chartered Accountant). ‘ஸ்டேட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்’-இல் ஐந்து வருடங்களும், ஆந்திர வங்கியில் உயர் அதிகாரியாக பத்து ஆண்டுகளும் பணியாற்றி, எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் அதைத் துறந்து, முழுநேர எழுத்தாளராக மாறிவிட்டார். சுமார் 55 நாவல்கள், 25 திரைக்கதைகள் மற்றும் ஏராளமான சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் சினிமா இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தனது முதல் திரைப்படத்திற்காக ஜனாதிபதி விருது பெற்றவர்! இவர் இயக்கிய நான்கு தொலைக்காட்சித் தொடர்கள் பல விருதுகளையும், சிறந்த தொலைக்காட்சித் தொடருக்கான ‘கோல்டன் நந்தி’ விருதையும் பெற்றுள்ளன. ‘சாகித்திய அகாடெமி’ விருதும் பெற்றுள்ளார். இவருடைய, ‘வெற்றிக்கு ஐந்து படிகள்’ என்ற நூல், தெலுங்கில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனையானது. ஆந்திராவில் என்.டி. ராமாராவிற்கு பிறகு, 2-ஆவது பிரபலமானவராக 1982-இல் இவர் தேர்வானார். கதை பயங்கரவாதிகளின் ஏஜெண்ட் ஜென்ரல் க்யூ; இண்டர்போல் காவல்துறையில் ஏஜெண்டாக பணியாற்றுபவன் ருத்ர நேத்ரா. பணத்தாசையும் அதிகார வெறியும் கொண்ட தொழிலதிபர் பூஷணத்தை கைக்குள் வைத்துக் கொண்டு, தன் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறான் ஜென்ரல் க்யூ. பூஷணம் நிகழ்வுகளின் பின்விளைவுகளை அறியாமலேயே தன் செல்வாக்கைப் பயன்படுத்திப் பலரையும் தானும் ஜென்ரல் க்யூவும் உள்ளடங்கிய வட்டத்திற்குள் கொண்டு வருகிறார். ஆனால், அங்கே க்யூவின் கையே ஓங்கி நிற்கிறது. க்யூ யாருடைய ஏஜெண்ட்? பாகிஸ்தானின் ஏஜெண்டாக தோற்றமளித்து பாகிஸ்தான் நாட்டை நம்ப வைக்கிறான். பூஷணத்துடன் சேர்ந்து ஒருவகை வாயு வடிவிலான பயங்கர இரசாயன ஆயுதத்தைத் தயாரித்து சோதிக்க முயலுகின்றான். அந்த வாயு குண்டை வெடிக்கச் செய்தால், மக்கள் உயிர் மட்டும் குடிக்கும்; பொருட்களுக்கு எந்தச் சேதமும் நேரிடாது. வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திப் பார்த்த ஆயுதம்தான் அது. அதை வைத்துக்கொண்டு உலக நாடுகளிடம் பேரம் பேசுவது; அல்லது உலக நாடுகளை அடிமை நாடுகளாக மாற்றுவது; அதற்கு இந்தியாவைச் சோதனைக் களமாக்கிச் சோதித்துப் பார்ப்பது; இதில் யாருக்கு வெற்றி என்பதில் நகர்கிறது நாவல் முழுமையும். அதிகப்படியான நிகழ்வுகளே இத்தகைய நாவல்களுக்கு ஓர் அடிப்படைத் தேவை. அவை தவிர்க்க முடியாதவை என்றாலும், சில நேரங்களில் அவை மிக்குரைத்தலாகப் படுகிறது. எடுத்துக்காட்டாக, நேத்ரா மரணமடைந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வு, பஞ்சாயத்துத் தலைவரின் மகனை உடலில் வெடிகுண்டுடன் கட்டி வைத்து பீரங்கியை இயக்கி அவனை வெளியே அனுப்புவது, மேலே கயிற்றைப் பிடித்துத் தொங்கி ஆகாயத்தில் பறந்து பீரங்கியிலிருந்து பறந்துகொண்டிருக்கும் சிறுவனைக் காப்பாற்றி வெடிகுண்டு விபத்தைத் தவிர்ப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆசிரியரின் சினிமாத்தனம் இங்கே பளிச்சிடுகிறது. அனிமேஷன் காட்சிகளுக்கு அதிக வாய்ப்புள்ள இடங்கள் இவை. மொத்தத்தில் கதையில் விறுவிறுப்பிற்குப் பஞ்சம் ஏற்படுவதில்லை. கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு வகை என்றுதான் சொல்ல வேண்டும். அவற்றுள் சில முக்கிய பாத்திரங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். சாரங்கராஜன்: ஒரு நீதிபதி. சட்ட நுணுக்கங்கள் நன்கு தெரிந்த வித்தகர். சுவர்ணரேகா என்னும் ஓர் அபலைப் பெண் மீது நடத்தப்பட்ட கூட்டு வன்புணர்வில் இவரும் பங்கேற்கிறார். மஸ்தான் ராஜா: மாஃபியா கூட்டத்தின் தலைவன். யாரையும் தீர்த்துக்கட்ட வல்லவன். தர்மாராவ்: உள்துறை அமைச்சர். மேற்சொன்ன அனைவருடனும் தொடர்பில் இருப்பவர் பூஷணம். இவர்களிடம் சுவர்ணரேகா சிக்கியது ஒரு விபரீத நிகழ்வு என்றே சொல்ல வேண்டும். போக்குவரத்து தடைப்பட்ட நேரத்தில், ஒரு கார்காரனிடம் லிப்ட் கேட்டதால் வந்த விளைவு. குடிபோதையின் உச்சத்தில் இருக்கும் அவன் அவளைக் கெடுக்க முயன்றபோது, தப்பி ஓடியவனைக் கையில் கிடைத்த கம்பி கொண்டு தாக்குகிறாள். அது அவன் கண்ணில் பட்டு, உள்ளே பாய்ந்து, ஒரு கண்ணைக் குருடாக்குகிறது. அவன் அலறிச் சாயும் நேரம், வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு காவல் நிலையம் சென்று நடந்ததைச் சொல்கிறாள். முதலில் பாராட்டும் காவல்துறை அதிகாரி, தாக்கப்பட்டது உள்துறை அமைச்சர் தர்மாராவின் பிள்ளை என்று அறிந்ததும், அவருக்கு போன் செய்து வரவழைக்கிறார். அமைச்சரின் ஆட்களும், காவலர்களும் சேர்ந்து அவளைக் காரில் ஏற்றுகிறார்கள். அவளைக் கொண்டுசென்ற இடத்தில்தான் மேற்சொன்ன கூட்டு வன்புணர்ச்சி நடக்கிறது. தன் தந்தையின் வயதையொத்த தர்மாராவின் முயற்சியின்போது, அவனைக் கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடுகிறாள். அவள் தந்தையின் சோதனைக் கூடத்தில் அடைக்கலம் புகுகிறாள். அவளைத் தேடிக்கொண்டிருந்த தர்மாராவின் மகன், அவள் அங்கே நுழைவதைக் கண்டு பின் தொடர்கிறான். கலவரச் சத்தம் கேட்டு அவனை நோக்கி ஓடிவந்த சுவர்ணாவின் தந்தையின் கன்னத்தில் பளீர் என்று அறைகிறான். தன் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெறவிருந்த விஞ்ஞானியான அவர், அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறக்கிறார். பின்னர், அவளை நோக்கி நெருங்கியவன் மீது, அமில பாட்டிலை வீசுகிறாள் சுவர்ணரேகா. அவன் அங்கேயே கருகிச் சாகின்றான். சரியாக அந்த நேரத்தில் அங்கே வந்து சேருகிறார் பூஷணம். அமைச்சர் கூட்டம் அவளைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சரின் மகனையும் கொன்றதால் நிலைமை இன்னமும் தீவிரமடைந்துவிட்டது என்றும், தன் மூத்த மகளைப்போல் அவளைத் தான் காப்பாற்றுவதாகவும் கூறி அவளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். இதற்குப் பரிகாரமாக, அவள் தந்தை மனித குலத்தை காக்க உருவாக்கிய அறிவியல் அறிவை உல்டாவாக மாற்றி, வாயு வடிவிலான ஆயுதம் கண்டுபிடிக்க உதவுகிறாள். ஒரு கட்டத்தில், ஜென்ரல் க்யூவின் பேச்சைக்கேட்டு பூஷணம் தன்னைக் கொல்ல முயல்வதை அறிந்து, அந்த கூட்டத்திற்கு எதிராக மாறுகிறாள். உலகில் ஆண்கள் எல்லோரும் கொடியவர்கள் என்னும் தன் மன பிம்பத்தை தானே உடைக்கிற அளவிற்கு ருத்ர நேத்ராவின் நடவடிக்கைகள் அவளை மாற்றுகின்றன. சிலருக்குச் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும்; ஆனால், போதுமான தைரியமோ, புத்திசாலித்தனமோ இருக்காது. இத்தகைய பாத்திரமாகக் காட்சி தருகிறாள் பிரதிமா. ருத்ர நேத்ரா மீது காதலை மனதிற்குள் வளர்த்துக் கொண்டிருந்த அவள், தன் அவசர புத்தியால் தன் காதலுக்கு ஒரு போட்டியாளரை தயார் செய்துவிடுகிறாள். பூஷணம் பற்றி செய்திகளைச் சொல்லி, அவரது மகளான அம்சரேகாவின் படத்தை ருத்ர நேத்ராவிடம் கொடுத்துவிடுகிறாள். இருவரையும் கண்டிராதவன், அம்சரேகாவிடம் காதலிப்பதாக நடிக்க, ஏதும் அறியாத அந்தப் பேதைப் பெண் உண்மையில் அவனைக் காதலிக்க தொடங்கி விடுகிறாள். இன்று நிலைமை வேறாக இருக்கலாம். ஆனால் 20, 30 ஆண்டுகளுக்கு முன் பாலுறவு பற்றிய அறிவு தெளிவற்றதாக இருந்தது. தொலைக்காட்சி, செய்தித்தாள் முதலிய சாதனங்கள் பரவலாக எல்லா வீடுகளையும் சென்றடையாத காலம் அது. ‘நிரோத்’ என்பது ஒருவகை மாத்திரை என்று நினைத்தவர்களைப் பற்றியும், பெண்ணின் ஆசனவாய் வழியே பிள்ளைப்பேறு நடக்கும் என்று எண்ணியிருந்தவர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆயினும், அம்ச ரேகாவின் ஆண் பெண் உறவு பற்றிய அறியாமை சற்று அதிகம்தானோ என்று தோன்றுகிறது. ஆம்! ஆண் முத்தமிட்டதும் பெண் கர்ப்பம் தரிப்பாள் என்று அம்சரேகா நினைப்பது சற்று மிகையானதாகவே தோன்றுகிறது. கதையில் வரும் பார்வையற்ற பாத்திரம் நேற்றுவரை காட்சிப்பொருளாக இருந்த பார்வை மாற்றுத்திறனாளிகள், இன்று கதாபாத்திரங்களாக காட்சியளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 1975-ஆம் ஆண்டு, முதல் பதிப்பாக வெளிவந்த ‘கரிச்சான் குஞ்சு’ எழு்திய ‘பசித்த மானுடம்’ என்ற நாவலில் ‘பூங்கோதை’ என்கிற பார்வை மாற்றுத்திறனாளி பாத்திரம் காணப்பட்டது. என் கையில் கிடைத்த அதற்கு முந்தைய நாவல் எதிலும் பார்வை மாற்றுத்திறனாளி பாத்திரப் படைப்பு காணப்படவில்லை. உண்மையைச் சொன்னால், இந்த விமர்சனக் கட்டுரையே அந்த பெண் பாத்திரத்திற்காகத்தான்! கல்யாணி ஒரு பார்வையற்ற பெண். பெற்றோரை இழந்த அண்ணன் பாஸ்கரனையும், தங்கை கல்யாணியையும் அவர்களின் தாத்தா, பாட்டி வளர்த்து வருகின்றனர். கல்யாணி பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்ந்து, விடுதியில் தங்கிப் படித்து வருகிறாள். அண்ணன் பாஸ்கரன் உளவுத்துறையில் சேர்ந்து நேத்ராவுடன் பணியாற்றிய நிலையில், ஜெனரல் க்யூவால் கொல்லப்படுகிறான். தாத்தாவும் முன்னாள் படைவீரர் என்பது அந்தக் குடும்பத்தின் சிறப்பம்சம். கல்யாணிக்கு தன் அண்ணன் பெயரில் ஒரு வருத்தம் உண்டு. தன்னைத் தங்கையாகக் கருதும் அண்ணனின் தோழன் ருத்ர நேத்ரா பிரெயில் எழுத்தைக் கற்றுக் கொண்டபோது, பாஸ்கரன் அதைக் கற்றுக் கொள்ளவில்லை என்கிற வருத்தம்தான் அது. ருத்ர நேத்ரா விடுப்பில் வந்து அவளை பார்த்துவிட்டுச் சென்றதும், தான் பத்திரமாய் தன் இருப்பிடத்தைச் சேர்ந்துவிட்டதாகத் தங்கை கல்யாணிக்கு பிரெயிலில் கடிதம் போடுவான். இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு இது புதுமையாகத் தோன்றி புருவங்களை உயரச் செய்யலாம். நான் பள்ளியில் படித்த காலத்திலேயே, என் சீனியர், ஜாம்ஷெட்பூரில் பொறியாளராக இருந்த தன் அண்ணனுக்கு பிரெயில் எழுத்து முறையைக் கற்றுக் கொடுத்ததால், அவர் பணியிடம் திரும்பியதும் ஆங்கிலத்தில் தான் பத்திரமாகச் சேர்ந்துவிட்டதாக பிரெயிலில் எழுதி அனுப்பி விடுவார் என்று அந்த நண்பர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒருங்கிணைந்த கல்வி என்றும், உள்ளடங்கிய கல்வி என்றும் புதிய புதிய பெயரில் பார்வையற்றோரின் கல்வி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பாழாகிக்கொண்டிருக்கும் போது, எண்டமூரி வீரேந்திரநாத் காட்டும் பள்ளியைப் பாருங்கள்! பள்ளி விடுமுறைக்கு விடுதி மாணவிகள் வீட்டிற்குப் போகும் போது, விடுமுறையில் செய்வதற்கான வீட்டுப்பாடத்தை வாங்கிச் செல்ல வேண்டும். செய்தித்தாள்களில் வரும் தலைப்புச் செய்திகள் பிரெயிலில் நகலெடுத்துத் தரப்படும். வீட்டில் அதைப்பார்த்து கல்யாணி பிரெயிலில் ஒவ்வொரு புள்ளியாக குத்தி எழுதுகிறாள். தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியிலாவது இப்படி நடக்கிறதா? ஒரு பள்ளியையேனும் நம்மால் சுட்டிக்காட்ட முடியுமா? நாவலாசிரியர் பார்வையற்றவர்களை நன்றாகவே கூர்ந்து கவனித்திருக்கிறார். “பார்வையற்றவர்கள் ‘பிரெயிலர்’ என்னும் அவர்களுக்கான டைப்ரைட்டர்களில் தான் ஒரு எழுத்திற்கான எல்லா புள்ளிகளையும் ஒரே சமயத்தில் குத்தி எழுத முடியும். ஆனால், பிரெயிலில் அப்படி அல்ல. ஒவ்வொரு புள்ளியாகத்தான் குத்தி எழுத வேண்டும்”. பத்திரிக்கையில் வந்திருந்த குட்டிச் செய்தி, ‘இண்டர்போல் ருத்ர நேத்ரா மரணம்’. “அவள் கைகள் நடுங்குகின்றன; அந்த பிரெயில் தாள் கையில் இருந்து நழுவி கீழே விழுகிறது”. பார்வையற்ற பெண் குழந்தைகளுக்கு வீட்டு வேலைகள் தொடர்பான போதுமான பயிற்சியைப் பெற்றோர் அளிப்பதில்லை. இங்கு, “போதுமான” என்கிற சொல்கூட சற்று நாகரிகமான சொல்தான். பயிற்சியே தருவதில்லை என்பதே எதார்த்தம். இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். கல்யாணியின் பாட்டியைப் பாருங்கள். தன் பேத்திக்கு வீட்டு வேலைகளில் நல்ல பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறாள். ருத்ர நேத்ராவுக்குக் கொடுக்கச் சொல்லி பூஷணம் தந்த நஞ்சை பாலில் கலக்கும் பொருட்டு, பிரெஸிடெண்ட் கல்யாணி வீட்டு அடுக்களையில் காபி தயாரிக்கும்போது, “என்ன குழம்பிப் போயிட்டீங்களா? எங்க பாட்டி எப்பவும் இப்படித்தான் பண்ணும்; சர்க்கரைனு எழுதியிருக்கிற டப்பாவுல மல்லி இருக்கும்” என்றெல்லாம் கூறி பிரெஸிடெண்டுக்கு உதவுகிறாள். இப்படியான விடையங்களைக் கடந்து, ஒரு கட்டத்தில் அந்த பார்வையற்ற பெண் பாத்திரத்தை தியாகியாக்கி, கதையின் முக்கியமான இடத்தில் இயங்கவிட்டு, வலுவான பாத்திரமாக மாற்றியிருக்கிறார் கதாசிரியர். பூஷணத்தைக் கொல்ல நினைக்கும் சுவர்ணரேகாவிற்கும் பூஷணத்திற்கும் துப்பாக்கிச் சண்டை நடக்கிறது. திட்டங்கள் அமலாவதைப் பற்றி அறிய வந்த ஜென்ரல் க்யூ, நிலைமையை புரிந்துகொண்டு சுவர்ணரேகாவை அவனும் சுடுகிறான். இந்நிகழ்வு தொடங்குவதற்கு முன், அங்கிருந்த ஸ்டோருக்குச் சென்று தனக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு கல்யாணி சாலைக்கு வருகிறாள். பூஷணத்தின் வீட்டிற்கு எதிரே மாடியில் குடியிருந்த ருத்ர நேத்ரா சுவர்ணரேகாவைக் காப்பாற்ற கீழே ஓடி வருகிறான். எல்லாத் திசைகளிலிருந்தும் துப்பாக்கி குண்டுகள் பறக்கின்றன. மக்கள் வீதியில் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். அப்படி ஓடிவந்த ஓர் இளைஞன், கல்யாணியின் மார்பில் கையை வைத்து அவளைக் கீழே தள்ளிவிட்டு ஓடுகிறான். கல்யாணியின் வெண்கோல் சாக்கடையில் விழ, அவள் தட்டுத்தடுமாறி நடந்து வருகிறாள். தங்கையைப் பார்த்துவிட்டார் ருத்ர நேத்ரா. “அப்படிப் போகாதே. இப்படி வா” என்று குரல் கொடுக்க, அவன் குரல் கேட்ட திசைக்குத் திரும்புகிறாள். சாகக்கிடக்கும் சுவர்ணரேகாவிற்கு அவள் ரத்த வகையைச் சேர்ந்த எல்லோரும் ரத்தம் கொடுத்தும் போதாத நிலையில், கடைசியாக கல்யாணியை அழைத்து வருகிறார்கள். கல்யாணியின் உடலிலிருந்து எடுக்க வேண்டிய அளவு எடுக்கப்பட்டதும், ரத்தம் செல்லும் குழாய் பாதையின் நாபை நிறுத்திவிட்டு டாக்டர் வெளியேறுகிறார். “இந்தத் துறையில் இருக்கும் என் போன்றவர்களுக்கு பந்த பாசம் கூடாது. அங்கே தங்கையை பார்த்ததும் ஒரு கணம் தடுமாறிவிட்டேன்” என்று தன் அதிகாரியிடம் ருத்ர நேத்ரா அறைக்கு வெளியே பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டதும், கல்யாணி ஒரு முடிவு எடுக்கிறாள். தன் உடன்பிறவா அண்ணன் தன்மீது வைத்திருக்கும் பாசத்திற்கு நன்றிக்கடன் செலுத்த விரும்பி, ரத்தம் செல்லும் குழாயின் நாபைத் தேடிப்பிடித்து அதை திறக்கிறாள். இரத்தம் முழுவதையும் இழந்த கல்யாணி வேதனையில் துடித்து இறப்பதும், சுவர்ணரேகா கண் விழிப்பதும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. ஒரு பார்வையற்ற பெண்ணைக் கதையின் முக்கிய நிகழ்வோடு இணைத்து, அந்தப் பாத்திரத்திற்கு வலுவூட்ட கதாசிரியருக்கு கொஞ்சம் தைரியமும், நல்ல மனமும் வேண்டும். எண்டமூரி வீரேந்திரநாத்துக்கு அவை இருப்பது தெரிகிறது. மொழிபெயர்ப்பு என்று தெரியாத வண்ணம் தெலுங்கிலிருந்து மொழிபெயர்த்திருக்கும் கௌரி கிருபாநந்தனுக்கும் நம் மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துதான் ஆகவேண்டும்! *** (கட்டுரையாளர் ஓய்வுபெற்ற வரலாற்றுத் துறை பேராசிரியர். கோயம்புத்தூரில் வசித்துவரும் இவர், ‘காத்திருப்பு’, ‘நெருப்பு நிஜங்கள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். பல சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்). தொடர்புக்கு: [email protected] பிரச்சனைகள் நம் வாழ்வில் இரண்டறக் கலந்தவை. அவை சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கலாம். ஒவ்வொரு பிரச்சனையின் முடிவும் ஆறுதல், தீர்வு ஆகிய இரு நிகழ்வுகளோடு அமைந்தால்தான் அது முற்றுப்பெறும். ஆறுதல்கள் விரைவாகக் கிடைத்துவிடும்; தீர்வு கிடைப்பதற்கு மிகவும் தாமதமாகும்; கிடைக்காமலும் போகலாம். ஆறுதல்கள் தீர்வாகிவிடாது; ஆனால், தீர்வுகள் நிச்சயம் ஆறுதலாக இருக்கும்.
ஆனால், நாம் பல நேரங்களில் ஆறுதலையே தீர்வாகக் கருதி அமைதி அடைந்துவிடுகிறோம். அது பலருக்கு நல்லதாகிவிடுகிறது. ஆறுதல் என்பது ஒரு சிக்கலிலிருந்து ஒருவரை விடுவித்திருப்பதாக நம்பவைக்குமே தவிர, தீர்வாக அமையாது. இன்னும் தெளிவாகச் சொன்னால், ஆறுதல் சிக்கலை மறப்பதற்கான தற்காலிக சுகம். அது பிரார்த்தனையாகவோ, கண்ணீராகவோ, போதை மருந்தாகவோ, இனிய வார்த்தைகளாகவோ, ஆதரவான தொடுதலாகவோ இருக்கலாம். இந்த தற்காலிக சுகங்கள் நம்மைப் புது உலகிற்கு அழைத்துச் செல்லலாம்; அது நிஜ உலகம் அல்ல! இதனால் ஆறுதல் அவசியமற்றது என்றும் கருதிவிட வேண்டாம்; அதனோடு சிக்கல் முடிந்துவிட்டதாக நினைப்பதுதான் தவறு. அது ஒருவரின் போர்க்குணத்தை மழுங்கச் செய்துவிடுவதுதான் வருந்தத்தக்கது. ஒருவன் நல்ல வெயிலில் தார்ச் சாலையில் நடந்துகொண்டிருந்தான்; அவன் கால்களில் செருப்பு இல்லை. சுற்றிலும் ஏகப்பட்ட செருப்புக் கடைகள் இருந்தும், தன்னால் செருப்பு வாங்க இயலவில்லை என்பதை எண்ணி வருந்தினான்; படைத்தவனை நொந்துகொண்டான். அப்போது, எதிரே கால்கள் இல்லாத ஒருவன் தவழ்ந்து வந்துகொண்டிருந்தான். அவனைக் கண்ட இவன் முகத்தில் இருந்த கோபமும், வருத்தமும் காணாமல் போயின; தன்னைக் கால்களோடு படைத்தவனுக்கு நன்றி கூறிக்கொண்டான். இது பலரும் அறிந்த கதைதான். கால்கள் இல்லாதவனைப் பார்த்து செருப்புகள் இல்லாதவன் ஆறுதல் அடைகிறான். கால்கள் இல்லாதவன் ஆறுதலடைய அவன் பயன்படுத்தும் கைகளும் இல்லாதவன் தேவைப்படுகிறான். இப்படியே யோசித்துப்பாருங்கள். ‘உனக்குக் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்கிறது ஒரு திரைப்பாடல். நமக்குக் கீழ் இருப்பவர்களைக் கண்டு நாம் நிம்மதி அடையவேண்டுமா? அதற்காகவேனும் நமக்குக் கீழ்நிலையில் யாரேனும் இருக்கவேண்டுமா? எல்லோரும் தனக்குக் கீழ்நிலையில் இருப்பவர்களைக் கண்டு நிம்மதி அடைந்து, உயர்நிலை பற்றி யோசிக்காமல் இருந்திருந்தால் இவ்வுலகில் வளர்ச்சி என்பது சாத்தியமாகியிருக்குமா? கீழ்நிலையில் இருப்பவர்களைப் பார்த்து நிம்மதி அடைவதற்குப் பதிலாக, ‘நானே இவ்வளவு சிரமப்படுகிறேன்; அவன் எவ்வளவு சிரமப்படுவான்?’ என்று சிந்தித்தால், அறிவுசார் கோபம் கொண்டால் சமூகத்திற்குப் பயன் கிடைக்கும். அதை விடுத்து, மேற்கூறிய ஆறுதலோடு நின்றுவிட்டால் அர்த்தமற்ற நம்பிக்கையும், சிக்கல் இல்லாதது போன்ற உணர்வும்தான் கிடைக்கும். இதைத் தான் வள்ளுவர், “அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடை” என்கிறார். எல்லாச் சிக்கல்களுக்கும் ஆறுதல் அவசியம்தான். அது வருத்தத்தை, கோபத்தைச் சரிசெய்யும். அதற்குப் பிறகு சிந்தித்துச் செயல்பட்டால் தீர்வு கிடைக்கும். கஷ்ட காலங்களில் தூக்க மருந்துகள் பயனுள்ளவையாக இருந்தாலும், இயல்பான தூக்கம்தானே நமக்கு நிம்மதி தரும்? *** தொடர்புக்கு: [email protected] |