பிரச்சனைகள் நம் வாழ்வில் இரண்டறக் கலந்தவை. அவை சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கலாம். ஒவ்வொரு பிரச்சனையின் முடிவும் ஆறுதல், தீர்வு ஆகிய இரு நிகழ்வுகளோடு அமைந்தால்தான் அது முற்றுப்பெறும். ஆறுதல்கள் விரைவாகக் கிடைத்துவிடும்; தீர்வு கிடைப்பதற்கு மிகவும் தாமதமாகும்; கிடைக்காமலும் போகலாம். ஆறுதல்கள் தீர்வாகிவிடாது; ஆனால், தீர்வுகள் நிச்சயம் ஆறுதலாக இருக்கும்.
ஆனால், நாம் பல நேரங்களில் ஆறுதலையே தீர்வாகக் கருதி அமைதி அடைந்துவிடுகிறோம். அது பலருக்கு நல்லதாகிவிடுகிறது.
ஆறுதல் என்பது ஒரு சிக்கலிலிருந்து ஒருவரை விடுவித்திருப்பதாக நம்பவைக்குமே தவிர, தீர்வாக அமையாது. இன்னும் தெளிவாகச் சொன்னால், ஆறுதல் சிக்கலை மறப்பதற்கான தற்காலிக சுகம். அது பிரார்த்தனையாகவோ, கண்ணீராகவோ, போதை மருந்தாகவோ, இனிய வார்த்தைகளாகவோ, ஆதரவான தொடுதலாகவோ இருக்கலாம். இந்த தற்காலிக சுகங்கள் நம்மைப் புது உலகிற்கு அழைத்துச் செல்லலாம்; அது நிஜ உலகம் அல்ல!
இதனால் ஆறுதல் அவசியமற்றது என்றும் கருதிவிட வேண்டாம்; அதனோடு சிக்கல் முடிந்துவிட்டதாக நினைப்பதுதான் தவறு. அது ஒருவரின் போர்க்குணத்தை மழுங்கச் செய்துவிடுவதுதான் வருந்தத்தக்கது.
ஒருவன் நல்ல வெயிலில் தார்ச் சாலையில் நடந்துகொண்டிருந்தான்; அவன் கால்களில் செருப்பு இல்லை. சுற்றிலும் ஏகப்பட்ட செருப்புக் கடைகள் இருந்தும், தன்னால் செருப்பு வாங்க இயலவில்லை என்பதை எண்ணி வருந்தினான்; படைத்தவனை நொந்துகொண்டான். அப்போது, எதிரே கால்கள் இல்லாத ஒருவன் தவழ்ந்து வந்துகொண்டிருந்தான். அவனைக் கண்ட இவன் முகத்தில் இருந்த கோபமும், வருத்தமும் காணாமல் போயின; தன்னைக் கால்களோடு படைத்தவனுக்கு நன்றி கூறிக்கொண்டான். இது பலரும் அறிந்த கதைதான்.
கால்கள் இல்லாதவனைப் பார்த்து செருப்புகள் இல்லாதவன் ஆறுதல் அடைகிறான். கால்கள் இல்லாதவன் ஆறுதலடைய அவன் பயன்படுத்தும் கைகளும் இல்லாதவன் தேவைப்படுகிறான். இப்படியே யோசித்துப்பாருங்கள். ‘உனக்குக் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்கிறது ஒரு திரைப்பாடல். நமக்குக் கீழ் இருப்பவர்களைக் கண்டு நாம் நிம்மதி அடையவேண்டுமா? அதற்காகவேனும் நமக்குக் கீழ்நிலையில் யாரேனும் இருக்கவேண்டுமா? எல்லோரும் தனக்குக் கீழ்நிலையில் இருப்பவர்களைக் கண்டு நிம்மதி அடைந்து, உயர்நிலை பற்றி யோசிக்காமல் இருந்திருந்தால் இவ்வுலகில் வளர்ச்சி என்பது சாத்தியமாகியிருக்குமா?
கீழ்நிலையில் இருப்பவர்களைப் பார்த்து நிம்மதி அடைவதற்குப் பதிலாக, ‘நானே இவ்வளவு சிரமப்படுகிறேன்; அவன் எவ்வளவு சிரமப்படுவான்?’ என்று சிந்தித்தால், அறிவுசார் கோபம் கொண்டால் சமூகத்திற்குப் பயன் கிடைக்கும். அதை விடுத்து, மேற்கூறிய ஆறுதலோடு நின்றுவிட்டால் அர்த்தமற்ற நம்பிக்கையும், சிக்கல் இல்லாதது போன்ற உணர்வும்தான் கிடைக்கும்.
இதைத் தான் வள்ளுவர்,
“அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை”
என்கிறார்.
எல்லாச் சிக்கல்களுக்கும் ஆறுதல் அவசியம்தான். அது வருத்தத்தை, கோபத்தைச் சரிசெய்யும். அதற்குப் பிறகு சிந்தித்துச் செயல்பட்டால் தீர்வு கிடைக்கும்.
கஷ்ட காலங்களில் தூக்க மருந்துகள் பயனுள்ளவையாக இருந்தாலும், இயல்பான தூக்கம்தானே நமக்கு நிம்மதி தரும்?
***
தொடர்புக்கு: balaganesan2285@gmail.com