நூலை எழுதியவர்: எண்டமூரி வீரேந்திரநாத்
தெலுங்கிலிருந்து தமிழில்: கௌரி கிருபாநந்தன்
படித்தது: வாசிப்பாளர் துணையுடன்
வழக்கமான கிரைம் நாவல்களிலிருந்து மாறுபட்ட ஒன்று ‘ருத்ர நேத்ரா’; இது ஓர் அறிவுசார் கிரைம் நாவல். இத்தகைய நாவல்களை எழுத பல்துறை அறிவு வேண்டும். அது தனக்கு வாய்க்கப்பட்டிருப்பதை நிரூபித்திருக்கிறார் இந்த நாவலாசிரியர்.
கதை பக்கத்திற்குப் பக்கம் அல்ல, பத்திக்குப் பத்தி, நிமிடத்திற்கு நிமிடம் அதிர்வுகளை ஏற்படுத்திய வண்ணம் விறுவிறுப்பாக நகர்கிறது! இப்படியொரு நாவலைக் கடைசிவரை தொய்வின்றி கொண்டுசெல்ல தனித்திறன் வேண்டும் தான்.
ஆசிரியரைப் பற்றி
கதைக்குள் செல்வதற்கு முன், ஆசிரியரைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வது அவசியமானது. இவர் ஒரு ‘சார்ட்டட் அக்கௌண்டண்ட்’ (Chartered Accountant). ‘ஸ்டேட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்’-இல் ஐந்து வருடங்களும், ஆந்திர வங்கியில் உயர் அதிகாரியாக பத்து ஆண்டுகளும் பணியாற்றி, எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் அதைத் துறந்து, முழுநேர எழுத்தாளராக மாறிவிட்டார்.
சுமார் 55 நாவல்கள், 25 திரைக்கதைகள் மற்றும் ஏராளமான சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் சினிமா இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தனது முதல் திரைப்படத்திற்காக ஜனாதிபதி விருது பெற்றவர்! இவர் இயக்கிய நான்கு தொலைக்காட்சித் தொடர்கள் பல விருதுகளையும், சிறந்த தொலைக்காட்சித் தொடருக்கான ‘கோல்டன் நந்தி’ விருதையும் பெற்றுள்ளன. ‘சாகித்திய அகாடெமி’ விருதும் பெற்றுள்ளார். இவருடைய, ‘வெற்றிக்கு ஐந்து படிகள்’ என்ற நூல், தெலுங்கில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனையானது. ஆந்திராவில் என்.டி. ராமாராவிற்கு பிறகு, 2-ஆவது பிரபலமானவராக 1982-இல் இவர் தேர்வானார்.
கதை
பயங்கரவாதிகளின் ஏஜெண்ட் ஜென்ரல் க்யூ; இண்டர்போல் காவல்துறையில் ஏஜெண்டாக பணியாற்றுபவன் ருத்ர நேத்ரா. பணத்தாசையும் அதிகார வெறியும் கொண்ட தொழிலதிபர் பூஷணத்தை கைக்குள் வைத்துக் கொண்டு, தன் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறான் ஜென்ரல் க்யூ. பூஷணம் நிகழ்வுகளின் பின்விளைவுகளை அறியாமலேயே தன் செல்வாக்கைப் பயன்படுத்திப் பலரையும் தானும் ஜென்ரல் க்யூவும் உள்ளடங்கிய வட்டத்திற்குள் கொண்டு வருகிறார். ஆனால், அங்கே க்யூவின் கையே ஓங்கி நிற்கிறது.
க்யூ யாருடைய ஏஜெண்ட்? பாகிஸ்தானின் ஏஜெண்டாக தோற்றமளித்து பாகிஸ்தான் நாட்டை நம்ப வைக்கிறான். பூஷணத்துடன் சேர்ந்து ஒருவகை வாயு வடிவிலான பயங்கர இரசாயன ஆயுதத்தைத் தயாரித்து சோதிக்க முயலுகின்றான். அந்த வாயு குண்டை வெடிக்கச் செய்தால், மக்கள் உயிர் மட்டும் குடிக்கும்; பொருட்களுக்கு எந்தச் சேதமும் நேரிடாது. வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திப் பார்த்த ஆயுதம்தான் அது. அதை வைத்துக்கொண்டு உலக நாடுகளிடம் பேரம் பேசுவது; அல்லது உலக நாடுகளை அடிமை நாடுகளாக மாற்றுவது; அதற்கு இந்தியாவைச் சோதனைக் களமாக்கிச் சோதித்துப் பார்ப்பது; இதில் யாருக்கு வெற்றி என்பதில் நகர்கிறது நாவல் முழுமையும்.
அதிகப்படியான நிகழ்வுகளே இத்தகைய நாவல்களுக்கு ஓர் அடிப்படைத் தேவை. அவை தவிர்க்க முடியாதவை என்றாலும், சில நேரங்களில் அவை மிக்குரைத்தலாகப் படுகிறது.
எடுத்துக்காட்டாக, நேத்ரா மரணமடைந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வு, பஞ்சாயத்துத் தலைவரின் மகனை உடலில் வெடிகுண்டுடன் கட்டி வைத்து பீரங்கியை இயக்கி அவனை வெளியே அனுப்புவது, மேலே கயிற்றைப் பிடித்துத் தொங்கி ஆகாயத்தில் பறந்து பீரங்கியிலிருந்து பறந்துகொண்டிருக்கும் சிறுவனைக் காப்பாற்றி வெடிகுண்டு விபத்தைத் தவிர்ப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆசிரியரின் சினிமாத்தனம் இங்கே பளிச்சிடுகிறது. அனிமேஷன் காட்சிகளுக்கு அதிக வாய்ப்புள்ள இடங்கள் இவை. மொத்தத்தில் கதையில் விறுவிறுப்பிற்குப் பஞ்சம் ஏற்படுவதில்லை.
கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு வகை என்றுதான் சொல்ல வேண்டும். அவற்றுள் சில முக்கிய பாத்திரங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
சாரங்கராஜன்: ஒரு நீதிபதி. சட்ட நுணுக்கங்கள் நன்கு தெரிந்த வித்தகர். சுவர்ணரேகா என்னும் ஓர் அபலைப் பெண் மீது நடத்தப்பட்ட கூட்டு வன்புணர்வில் இவரும் பங்கேற்கிறார். மஸ்தான் ராஜா: மாஃபியா கூட்டத்தின் தலைவன். யாரையும் தீர்த்துக்கட்ட வல்லவன். தர்மாராவ்: உள்துறை அமைச்சர். மேற்சொன்ன அனைவருடனும் தொடர்பில் இருப்பவர் பூஷணம்.
இவர்களிடம் சுவர்ணரேகா சிக்கியது ஒரு விபரீத நிகழ்வு என்றே சொல்ல வேண்டும். போக்குவரத்து தடைப்பட்ட நேரத்தில், ஒரு கார்காரனிடம் லிப்ட் கேட்டதால் வந்த விளைவு. குடிபோதையின் உச்சத்தில் இருக்கும் அவன் அவளைக் கெடுக்க முயன்றபோது, தப்பி ஓடியவனைக் கையில் கிடைத்த கம்பி கொண்டு தாக்குகிறாள். அது அவன் கண்ணில் பட்டு, உள்ளே பாய்ந்து, ஒரு கண்ணைக் குருடாக்குகிறது. அவன் அலறிச் சாயும் நேரம், வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு காவல் நிலையம் சென்று நடந்ததைச் சொல்கிறாள். முதலில் பாராட்டும் காவல்துறை அதிகாரி, தாக்கப்பட்டது உள்துறை அமைச்சர் தர்மாராவின் பிள்ளை என்று அறிந்ததும், அவருக்கு போன் செய்து வரவழைக்கிறார். அமைச்சரின் ஆட்களும், காவலர்களும் சேர்ந்து அவளைக் காரில் ஏற்றுகிறார்கள். அவளைக் கொண்டுசென்ற இடத்தில்தான் மேற்சொன்ன கூட்டு வன்புணர்ச்சி நடக்கிறது. தன் தந்தையின் வயதையொத்த தர்மாராவின் முயற்சியின்போது, அவனைக் கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடுகிறாள். அவள் தந்தையின் சோதனைக் கூடத்தில் அடைக்கலம் புகுகிறாள்.
அவளைத் தேடிக்கொண்டிருந்த தர்மாராவின் மகன், அவள் அங்கே நுழைவதைக் கண்டு பின் தொடர்கிறான். கலவரச் சத்தம் கேட்டு அவனை நோக்கி ஓடிவந்த சுவர்ணாவின் தந்தையின் கன்னத்தில் பளீர் என்று அறைகிறான். தன் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெறவிருந்த விஞ்ஞானியான அவர், அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறக்கிறார். பின்னர், அவளை நோக்கி நெருங்கியவன் மீது, அமில பாட்டிலை வீசுகிறாள் சுவர்ணரேகா. அவன் அங்கேயே கருகிச் சாகின்றான்.
சரியாக அந்த நேரத்தில் அங்கே வந்து சேருகிறார் பூஷணம். அமைச்சர் கூட்டம் அவளைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சரின் மகனையும் கொன்றதால் நிலைமை இன்னமும் தீவிரமடைந்துவிட்டது என்றும், தன் மூத்த மகளைப்போல் அவளைத் தான் காப்பாற்றுவதாகவும் கூறி அவளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்.
இதற்குப் பரிகாரமாக, அவள் தந்தை மனித குலத்தை காக்க உருவாக்கிய அறிவியல் அறிவை உல்டாவாக மாற்றி, வாயு வடிவிலான ஆயுதம் கண்டுபிடிக்க உதவுகிறாள். ஒரு கட்டத்தில், ஜென்ரல் க்யூவின் பேச்சைக்கேட்டு பூஷணம் தன்னைக் கொல்ல முயல்வதை அறிந்து, அந்த கூட்டத்திற்கு எதிராக மாறுகிறாள். உலகில் ஆண்கள் எல்லோரும் கொடியவர்கள் என்னும் தன் மன பிம்பத்தை தானே உடைக்கிற அளவிற்கு ருத்ர நேத்ராவின் நடவடிக்கைகள் அவளை மாற்றுகின்றன.
சிலருக்குச் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும்; ஆனால், போதுமான தைரியமோ, புத்திசாலித்தனமோ இருக்காது. இத்தகைய பாத்திரமாகக் காட்சி தருகிறாள் பிரதிமா. ருத்ர நேத்ரா மீது காதலை மனதிற்குள் வளர்த்துக் கொண்டிருந்த அவள், தன் அவசர புத்தியால் தன் காதலுக்கு ஒரு போட்டியாளரை தயார் செய்துவிடுகிறாள். பூஷணம் பற்றி செய்திகளைச் சொல்லி, அவரது மகளான அம்சரேகாவின் படத்தை ருத்ர நேத்ராவிடம் கொடுத்துவிடுகிறாள். இருவரையும் கண்டிராதவன், அம்சரேகாவிடம் காதலிப்பதாக நடிக்க, ஏதும் அறியாத அந்தப் பேதைப் பெண் உண்மையில் அவனைக் காதலிக்க தொடங்கி விடுகிறாள்.
இன்று நிலைமை வேறாக இருக்கலாம். ஆனால் 20, 30 ஆண்டுகளுக்கு முன் பாலுறவு பற்றிய அறிவு தெளிவற்றதாக இருந்தது. தொலைக்காட்சி, செய்தித்தாள் முதலிய சாதனங்கள் பரவலாக எல்லா வீடுகளையும் சென்றடையாத காலம் அது. ‘நிரோத்’ என்பது ஒருவகை மாத்திரை என்று நினைத்தவர்களைப் பற்றியும், பெண்ணின் ஆசனவாய் வழியே பிள்ளைப்பேறு நடக்கும் என்று எண்ணியிருந்தவர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆயினும், அம்ச ரேகாவின் ஆண் பெண் உறவு பற்றிய அறியாமை சற்று அதிகம்தானோ என்று தோன்றுகிறது. ஆம்! ஆண் முத்தமிட்டதும் பெண் கர்ப்பம் தரிப்பாள் என்று அம்சரேகா நினைப்பது சற்று மிகையானதாகவே தோன்றுகிறது.
கதையில் வரும் பார்வையற்ற பாத்திரம்
நேற்றுவரை காட்சிப்பொருளாக இருந்த பார்வை மாற்றுத்திறனாளிகள், இன்று கதாபாத்திரங்களாக காட்சியளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 1975-ஆம் ஆண்டு, முதல் பதிப்பாக வெளிவந்த ‘கரிச்சான் குஞ்சு’ எழு்திய ‘பசித்த மானுடம்’ என்ற நாவலில் ‘பூங்கோதை’ என்கிற பார்வை மாற்றுத்திறனாளி பாத்திரம் காணப்பட்டது. என் கையில் கிடைத்த அதற்கு முந்தைய நாவல் எதிலும் பார்வை மாற்றுத்திறனாளி பாத்திரப் படைப்பு காணப்படவில்லை. உண்மையைச் சொன்னால், இந்த விமர்சனக் கட்டுரையே அந்த பெண் பாத்திரத்திற்காகத்தான்!
கல்யாணி ஒரு பார்வையற்ற பெண். பெற்றோரை இழந்த அண்ணன் பாஸ்கரனையும், தங்கை கல்யாணியையும் அவர்களின் தாத்தா, பாட்டி வளர்த்து வருகின்றனர். கல்யாணி பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்ந்து, விடுதியில் தங்கிப் படித்து வருகிறாள். அண்ணன் பாஸ்கரன் உளவுத்துறையில் சேர்ந்து நேத்ராவுடன் பணியாற்றிய நிலையில், ஜெனரல் க்யூவால் கொல்லப்படுகிறான். தாத்தாவும் முன்னாள் படைவீரர் என்பது அந்தக் குடும்பத்தின் சிறப்பம்சம்.
கல்யாணிக்கு தன் அண்ணன் பெயரில் ஒரு வருத்தம் உண்டு. தன்னைத் தங்கையாகக் கருதும் அண்ணனின் தோழன் ருத்ர நேத்ரா பிரெயில் எழுத்தைக் கற்றுக் கொண்டபோது, பாஸ்கரன் அதைக் கற்றுக் கொள்ளவில்லை என்கிற வருத்தம்தான் அது. ருத்ர நேத்ரா விடுப்பில் வந்து அவளை பார்த்துவிட்டுச் சென்றதும், தான் பத்திரமாய் தன் இருப்பிடத்தைச் சேர்ந்துவிட்டதாகத் தங்கை கல்யாணிக்கு பிரெயிலில் கடிதம் போடுவான். இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு இது புதுமையாகத் தோன்றி புருவங்களை உயரச் செய்யலாம். நான் பள்ளியில் படித்த காலத்திலேயே, என் சீனியர், ஜாம்ஷெட்பூரில் பொறியாளராக இருந்த தன் அண்ணனுக்கு பிரெயில் எழுத்து முறையைக் கற்றுக் கொடுத்ததால், அவர் பணியிடம் திரும்பியதும் ஆங்கிலத்தில் தான் பத்திரமாகச் சேர்ந்துவிட்டதாக பிரெயிலில் எழுதி அனுப்பி விடுவார் என்று அந்த நண்பர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஒருங்கிணைந்த கல்வி என்றும், உள்ளடங்கிய கல்வி என்றும் புதிய புதிய பெயரில் பார்வையற்றோரின் கல்வி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பாழாகிக்கொண்டிருக்கும் போது, எண்டமூரி வீரேந்திரநாத் காட்டும் பள்ளியைப் பாருங்கள்! பள்ளி விடுமுறைக்கு விடுதி மாணவிகள் வீட்டிற்குப் போகும் போது, விடுமுறையில் செய்வதற்கான வீட்டுப்பாடத்தை வாங்கிச் செல்ல வேண்டும். செய்தித்தாள்களில் வரும் தலைப்புச் செய்திகள் பிரெயிலில் நகலெடுத்துத் தரப்படும். வீட்டில் அதைப்பார்த்து கல்யாணி பிரெயிலில் ஒவ்வொரு புள்ளியாக குத்தி எழுதுகிறாள். தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியிலாவது இப்படி நடக்கிறதா? ஒரு பள்ளியையேனும் நம்மால் சுட்டிக்காட்ட முடியுமா?
நாவலாசிரியர் பார்வையற்றவர்களை நன்றாகவே கூர்ந்து கவனித்திருக்கிறார். “பார்வையற்றவர்கள் ‘பிரெயிலர்’ என்னும் அவர்களுக்கான டைப்ரைட்டர்களில் தான் ஒரு எழுத்திற்கான எல்லா புள்ளிகளையும் ஒரே சமயத்தில் குத்தி எழுத முடியும். ஆனால், பிரெயிலில் அப்படி அல்ல. ஒவ்வொரு புள்ளியாகத்தான் குத்தி எழுத வேண்டும்”. பத்திரிக்கையில் வந்திருந்த குட்டிச் செய்தி, ‘இண்டர்போல் ருத்ர நேத்ரா மரணம்’. “அவள் கைகள் நடுங்குகின்றன; அந்த பிரெயில் தாள் கையில் இருந்து நழுவி கீழே விழுகிறது”.
பார்வையற்ற பெண் குழந்தைகளுக்கு வீட்டு வேலைகள் தொடர்பான போதுமான பயிற்சியைப் பெற்றோர் அளிப்பதில்லை. இங்கு, “போதுமான” என்கிற சொல்கூட சற்று நாகரிகமான சொல்தான். பயிற்சியே தருவதில்லை என்பதே எதார்த்தம். இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். கல்யாணியின் பாட்டியைப் பாருங்கள். தன் பேத்திக்கு வீட்டு வேலைகளில் நல்ல பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறாள். ருத்ர நேத்ராவுக்குக் கொடுக்கச் சொல்லி பூஷணம் தந்த நஞ்சை பாலில் கலக்கும் பொருட்டு, பிரெஸிடெண்ட் கல்யாணி வீட்டு அடுக்களையில் காபி தயாரிக்கும்போது, “என்ன குழம்பிப் போயிட்டீங்களா? எங்க பாட்டி எப்பவும் இப்படித்தான் பண்ணும்; சர்க்கரைனு எழுதியிருக்கிற டப்பாவுல மல்லி இருக்கும்” என்றெல்லாம் கூறி பிரெஸிடெண்டுக்கு உதவுகிறாள்.
இப்படியான விடையங்களைக் கடந்து, ஒரு கட்டத்தில் அந்த பார்வையற்ற பெண் பாத்திரத்தை தியாகியாக்கி, கதையின் முக்கியமான இடத்தில் இயங்கவிட்டு, வலுவான பாத்திரமாக மாற்றியிருக்கிறார் கதாசிரியர். பூஷணத்தைக் கொல்ல நினைக்கும் சுவர்ணரேகாவிற்கும் பூஷணத்திற்கும் துப்பாக்கிச் சண்டை நடக்கிறது. திட்டங்கள் அமலாவதைப் பற்றி அறிய வந்த ஜென்ரல் க்யூ, நிலைமையை புரிந்துகொண்டு சுவர்ணரேகாவை அவனும் சுடுகிறான். இந்நிகழ்வு தொடங்குவதற்கு முன், அங்கிருந்த ஸ்டோருக்குச் சென்று தனக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு கல்யாணி சாலைக்கு வருகிறாள். பூஷணத்தின் வீட்டிற்கு எதிரே மாடியில் குடியிருந்த ருத்ர நேத்ரா சுவர்ணரேகாவைக் காப்பாற்ற கீழே ஓடி வருகிறான்.
எல்லாத் திசைகளிலிருந்தும் துப்பாக்கி குண்டுகள் பறக்கின்றன. மக்கள் வீதியில் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். அப்படி ஓடிவந்த ஓர் இளைஞன், கல்யாணியின் மார்பில் கையை வைத்து அவளைக் கீழே தள்ளிவிட்டு ஓடுகிறான். கல்யாணியின் வெண்கோல் சாக்கடையில் விழ, அவள் தட்டுத்தடுமாறி நடந்து வருகிறாள். தங்கையைப் பார்த்துவிட்டார் ருத்ர நேத்ரா. “அப்படிப் போகாதே. இப்படி வா” என்று குரல் கொடுக்க, அவன் குரல் கேட்ட திசைக்குத் திரும்புகிறாள்.
சாகக்கிடக்கும் சுவர்ணரேகாவிற்கு அவள் ரத்த வகையைச் சேர்ந்த எல்லோரும் ரத்தம் கொடுத்தும் போதாத நிலையில், கடைசியாக கல்யாணியை அழைத்து வருகிறார்கள். கல்யாணியின் உடலிலிருந்து எடுக்க வேண்டிய அளவு எடுக்கப்பட்டதும், ரத்தம் செல்லும் குழாய் பாதையின் நாபை நிறுத்திவிட்டு டாக்டர் வெளியேறுகிறார். “இந்தத் துறையில் இருக்கும் என் போன்றவர்களுக்கு பந்த பாசம் கூடாது. அங்கே தங்கையை பார்த்ததும் ஒரு கணம் தடுமாறிவிட்டேன்” என்று தன் அதிகாரியிடம் ருத்ர நேத்ரா அறைக்கு வெளியே பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டதும், கல்யாணி ஒரு முடிவு எடுக்கிறாள். தன் உடன்பிறவா அண்ணன் தன்மீது வைத்திருக்கும் பாசத்திற்கு நன்றிக்கடன் செலுத்த விரும்பி, ரத்தம் செல்லும் குழாயின் நாபைத் தேடிப்பிடித்து அதை திறக்கிறாள். இரத்தம் முழுவதையும் இழந்த கல்யாணி வேதனையில் துடித்து இறப்பதும், சுவர்ணரேகா கண் விழிப்பதும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
ஒரு பார்வையற்ற பெண்ணைக் கதையின் முக்கிய நிகழ்வோடு இணைத்து, அந்தப் பாத்திரத்திற்கு வலுவூட்ட கதாசிரியருக்கு கொஞ்சம் தைரியமும், நல்ல மனமும் வேண்டும். எண்டமூரி வீரேந்திரநாத்துக்கு அவை இருப்பது தெரிகிறது. மொழிபெயர்ப்பு என்று தெரியாத வண்ணம் தெலுங்கிலிருந்து மொழிபெயர்த்திருக்கும் கௌரி கிருபாநந்தனுக்கும் நம் மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துதான் ஆகவேண்டும்!
***
(கட்டுரையாளர் ஓய்வுபெற்ற வரலாற்றுத் துறை பேராசிரியர். கோயம்புத்தூரில் வசித்துவரும் இவர், ‘காத்திருப்பு’, ‘நெருப்பு நிஜங்கள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். பல சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்).
தொடர்புக்கு: [email protected]