அன்று காலையிலிருந்தே பயங்கர வலி! காயம் சிறியதுதான் என்றாலும், வலி தாங்க முடியாததாக இருந்தது.
அன்று காலை ஏழரை மணி வாக்கில், புதிதாக வாங்கிய மருந்து (Tonic) புட்டி ஒன்றைத் திறக்க முயன்றேன்; அப்போது பெற்ற வீரக் காயம் இது! மூடிக்கும், புட்டிக்கும் இடையில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த கூர்மையான பிளாஸ்டிக் துண்டு வலது கை ஆள்காட்டி விரலில் குத்தியதன் விளைவு!
சாப்பிட முடியவில்லை; தண்ணீரில் புழங்க முடியவில்லை; யாருடைய கையையும் பிடித்துக்கொண்டு நடக்க முடியவில்லை; எதையுமே தொட முடியவில்லை. கணினியை இயக்க, அலைபேசியை நோண்ட, பேருந்தில் நின்றுகொண்டு உயர இருக்கும் கம்பியைப் பிடிக்க என என் அன்றாடச் செயல்பாடுகள் அனைத்துமே பாதிக்கப்பட்டன. இவை எல்லாவற்றையும் நான் பொறுத்துக்கொண்டேன்; ஒரே ஒரு பிரச்சனை மட்டும் வலியையும் தாண்டி என்னைச் சிந்திக்க வைத்தது.
வகுப்பில் பிரெயில் புத்தகத்தை என்னால் வாசிக்க முடியவில்லை! புத்தகத்தைத் தொட்டு நகரும்போது, மேடேறிய பிரெயில் புள்ளிகள் ஊசியாய் என் வலது கை ஆள்காட்டி விரலைக் குத்தின. அந்தக் காயம் படாமல் அந்த விரலை என்னால் பயன்படுத்த இயலவில்லை. வேறு விரலைப் பயன்படுத்தி வாசிக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். அது எனக்கு அதுவரை, ஏன் இது வரை பழக்கம் இல்லை.
நான் மதுரை IAB பிரெயில் அச்சகத்தில் மெய்ப்புத் திருத்துனராக (Proof Reader) பணிபுரிந்தபோது நண்பர் ஒருவர் சொல்வார், “உன் வலது கை ஆள்காட்டி விரலை மட்டும் எடுத்துவிட்டால், உன் பிழைப்பு அவ்வளவுதான்” என்று. அப்போதே நான் சிந்தித்திருக்க வேண்டும். சிந்திக்கவில்லையே!
பிரெயில் புத்தகத்தை வாசிப்பது எப்படி என்று கூகுளிடம் கேட்டால், அதற்கென்று தனி முறை எல்லாம் இல்லை என்று பதில் வருகிறது. ஒருவர் என்னைப் போலவே வலது கை ஆள்காட்டி விரலில் வாசிக்கிறார்; ஆனால், பாதுகாப்பிற்கென இடது கை விரல் ஒன்றையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். இன்னொருவர் வலது கை நடு விரல் கொண்டு வாசிக்கிறார்; பாதுகாப்பிற்கென வலது கை ஆள்காட்டி விரலைப் பயன்படுத்திக் கொள்கிறார். மற்றொருவர் இடது கை விரல்களை வாசிக்கப் பயன்படுத்துகிறார்.
என் பள்ளிக் காலத்தில் இடது கையால் புத்தகத்தை வாசித்து, வலது கையால் அதை அப்படியே பிரெயிலில் எழுதியவர்களையும் பார்த்திருக்கிறேன். இன்னும் சிலர் புத்தகத்தை மேசை மேல் நன்றாகப் பரப்பி, இரு கைகளையும் அதன் மேல் தவழவிட்டு வாசிப்பர். இப்படி பிரெயில் வாசித்தல் என்பது அது கையாளப்படும் நபர்களின் அடிப்படையில் மாறுபடக்கூடியது. அவரவருக்கு ஏற்ற வகையில், புரிந்துகொண்ட வகையில் வாசிப்பர்.
எனக்கு இவை எதுவுமே சரிபட்டு வராது. இதுவரை வலது கை ஆள்காட்டி விரல் மட்டும்தான் வாசிக்கப் பயன்பட்டு வருகிறது. வேறு எந்த விரலும், கையும் உதவிக்குத் தேவைப்பட்டதில்லை. ஆனால் இப்போது? முடியவில்லை. மாணவர்களை வாசிக்கச் சொல்லி சமாளித்தேன்.
துரோணரைப் போல் இல்லாமல், எனக்கு வாய்த்த நல்ல ஆசிரியர்களுக்கு மனதிற்குள் நன்றி தெரிவித்துக் கொண்டேன். துரோணரிடம் நான் ஒரு வேளை பிரெயில் கற்றிருந்தால், நான் ஆள்காட்டி விரலை இழந்த ஏகலைவனாகியிருப்பேன். அந்த வகையில், எனக்கு பிரெயில் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்குக் கோடானு கோடி நன்றிகள்.
ஆசிரியர்களுக்கு மட்டுமா? எனக்கு இவ்வெழுத்து முறையை அறிவித்த லூயி பிரெயிலுக்கும்தான். எல்லோரும் கையடக்கம் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க, விரலடக்கமாய் 6 புள்ளிகளுக்குள் அகிலத்தையே அடக்கிய அற்புத மனிதனல்லவா லூயி. தொட்டுத் தடவி பல்வேறு பொருட்களை உணர்ந்து கொண்டிருந்த கைகளை எழுத்துணரிகளாக மாற்றிய அற்புத ஆளுமை லூயி பிரெயில்.
அப்போதுதான் தோன்றியது, எத்தனையோ பேர் என்னென்னவோ பிதற்றுகிறார்களே! 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஒரு விரல் புரட்சி செய்துவிட்டாரே லூயி. இன்று பிரெயில் எழுத்துகளை எந்த வகையில் நாம் படித்தாலும், எத்தனை விரல்களை துணைக்கு அழைத்துக் கொண்டாலும், அவ்வெழுத்துகளை உணரப்போவது ஒரு விரல் தானே! அந்த ஒரு விரல் புரட்சியாளனை வாழ்த்துவோம், என்றென்றும்!
***
தொடர்புக்கு: [email protected]