இந்த உலகம் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. எல்லாக் காலங்களிலும் ஊடகம் தனது பேராற்றலை தனக்கேற்றப் பாணியில் பிரயோகித்துக் கொண்டுதான் இருக்கிறது. பொதுவாக, ஒரு சாமானியனின் பார்வையில் ஊடகம் காட்டுவது வெறும் செய்தி அல்ல; உண்மை. அதுவும், இந்த ரியாலிட்டி ஷோக்கள் வந்ததிலிருந்து, அவர்கள் காட்டுவதுதான் எல்லாம் என்றாகிப்போனது பார்வையாளனின் அதிர்ஷ்டமா அல்லது துரதிர்ஷ்டமா என்று கணிப்பதில் ஒரு பெரிய சிக்கல் இருப்பதை மறுப்பதற்கில்லை; இந்தக் கட்டுரையும் அதைப் பற்றியதுதான்.
கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி, ‘சன்’ தொலைக்காட்சியில் ‘நாம் ஒருவர்’ மற்றும் ‘தாயா? தாரமா?’, ‘விஜய்’ தொலைக்காட்சியில் ‘நீயா? நானா?’, ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் ‘ஒரு சாமானியனின் குரல்’ ஆகிய நான்கு நிகழ்ச்சிகள் பார்வை மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்தி ஒளிபரப்பப்பட்டன. அது உண்மையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த அளவு உதவி இருக்கின்றன என்பதை ஆராயத்தான் இந்தக் கட்டுரையே தவிர, நிச்சயமாக அந்த ஊடகங்களை விமர்சிப்பதற்காக அல்ல என்பதை இங்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
நாம் ஒருவர்
‘சன்’ தொலைக்காட்சியில், நடிகர் திரு. விஷால் அவர்கள் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் நான்காவது எபிசோடாக இருந்தது அன்றைய நிகழ்ச்சி; ஆண்ட்ரியாவை அழைத்திருந்தார்கள். ஒரு சிறிய குடும்பம்; அதில், ஒரு பார்வைத்திறன் குறையுடைய சிறுவன். அந்தக் குடும்பத்தின் வரலாறு, வாழ்க்கைத்தரம் மற்றும் அந்தச் சிறுவனின் நிலை ஆகியவற்றைக் கொண்டு நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்த பார்வைக் குறைபாடுடைய சிறுவனின் பெற்றோருக்குக் கடை வைத்து தரவேண்டும் என்பதும், அந்தச் சிறுவனுக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய பணம் திரட்ட வேண்டும் என்பதும்தான் அன்றைய நிகழ்ச்சியின் நோக்கம். இந்த நிகழ்ச்சியின் உண்மையான நோக்கமே இயலாதவர்களுக்கு உதவுவதுதான் என்பதால், அதை உளமார பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம். இதற்கு முன் ஒளிபரப்பப்பட்ட மூன்று எபிசோடுகளும் பிறருக்கு உதவுவதையே நோக்கமாகக் கொண்டிருந்ததால், இந்த நிகழ்ச்சியை மட்டும் பிரித்துத் தனிமைப்படுத்தி கேள்வி எழுப்ப இயலவில்லை.
ஆனால், ‘ஆண்ட்ரியாவிடமும், விஷாலிடமும், சன் தொலைக்காட்சியிடமும் இல்லாத பணத்தையா பிறரிடம் இருந்து அவர்கள் திரட்டப் போகிறார்கள்?’ என்ற கேள்வி எழாமல் இல்லை. அதே நேரத்தில், இப்படிச் செய்தால் நிறைய பேர் உதவ முன்வருவார்கள் என்று இதயத்தில் உருவாகும் நேர்மறை எண்ணத்தையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று தோன்றுகிறது. அதற்காக ஆண்ட்ரியா பாடலெல்லாம் பாடி உதவி கேட்பதும், அதில் சிலர் இருபது ரூபாய் மட்டும் நன்கொடையாகக் கொடுத்துச் செல்வதும் பார்ப்பவர்களை உணர்ச்சி வசப்படுத்துவதற்காக மட்டுமே செய்யப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும், அந்த பார்வைக் குறையுடைய சிறுவனை, ‘வருங்கால சையிண்டிஸ்ட்’ என்று அழைத்ததெல்லாம் வாதத்திற்குகூட ஒத்துவராது என்பது திரு. விஷாலுக்கும் தெரியும்!
இந்த நிகழ்ச்சி பார்வையற்றவர்களைப் புரிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டது அல்ல என்பதும், ஏழ்மை நிலையில் இருக்கும் ஒரு பார்வைக் குறைபாடுடைய சிறுவனின் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவுவதுதான் அதன் குறிக்கோள் என்பதும் தெரிந்ததால், இந்த நிகழ்ச்சியைப் பாராட்டிதான் ஆகவேண்டும். அதே வேளையில், தன்னுடைய டி.ஆர்.பி. (TRP) ரேட்டிங்கை ஏற்றிக்கொள்ள ‘சன்’ தொலைக்காட்சி ஒளிபரப்பும் ஒரு நிகழ்ச்சிதான் இது என்ற அப்பட்டமான உண்மையையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, பார்வையற்றவர்களைப் பற்றி வெறும் உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமல்லாமல் கொஞ்சம் யதார்த்த நிலையிலிருந்தும் அணுகுமாறு திரு. விஷால் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். உதாரணமாக, அவர்களுக்கான பள்ளி, அவர்கள் உபயோகப்படுத்தும் பொருட்கள் போன்றவற்றைத் தெரிந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்தியிருந்தால், இன்னும் இயல்பாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து.
நீயா? நானா?
பார்வையற்றவர்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றிருக்க வேண்டிய நிகழ்ச்சி. ஏனோ ஏதோ ஒரு புள்ளியில் துவங்கி ஏதோ ஒரு புள்ளியில் முடிந்துவிட்டது! பார்வையற்றவர்களின் உலகம் எவ்வாறு இருக்கிறது என்று ஆராயத் தொடங்கிய நிகழ்ச்சி, அவர்களின் வாழ்வில் ஓர் அங்கமான இசையை மட்டுமே தூக்கிப்பிடித்து, அவர்களின் அன்றாட வாழ்வின் இன்னல்களைப் பற்றி பெரிதாக விவாதிக்காமலேயே முடிந்து விட்டது. விவாதிப்பதற்கு நிறைய விடையங்களும் அதற்கான சரியான நபர்களும் இருந்தும், எந்த ஒரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இந்த நிகழ்ச்சி முடிந்து விட்டது என்று தோன்றுகிறது.
இருப்பினும், கடைசி ஐந்து நிமிடங்கள் முன்வைக்கப்பட்ட பகிர்வுகளும், விவாதங்களும் நிகழ்ச்சிக்கு வலு சேர்த்ததைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்; நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே அதை செய்திருக்கலாம். பார்வை மாற்றுத்திறனாளிகள் தாம் எதிர்கொள்வதாகச் சொன்ன சில முக்கியமான பிரச்சினைகளை கத்தரி போட்டதைத் தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில், பெரிதாக எதையும் செய்யாமல் ஏமாற்றியதாகத்தான் இருந்தது இந்த ‘நீயா? நானா?’ என்ற எண்ணம் பெரும்பாலான பார்வையற்றவர்களின் மனதில் தோன்றியதை உணர முடிகிறது. இருப்பினும், பார்வையற்றவர்களுக்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தியதற்காக ‘விஜய்’ தொலைக்காட்சிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சாமானியனின் குரல்
விளிம்பு நிலையில் இருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பற்றி கொஞ்சம் உணர்வுபூர்வமாகவும், கொஞ்சம் உண்மைத் தன்மையுடனும் ஆராய்ந்து ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி இது. பார்வையற்றவர்களுக்கு பாடல்தான் எல்லாமே என்று ஆரம்பித்திருந்தாலும், அவர்கள் பயணித்த சில விடையங்கள் கொஞ்சம் ஆறுதலைத் தந்தது. பார்வையற்றவர்கள் என்றாலே நன்றாகப் பாடுவார்கள் என்று யாரோ கிளப்பி விட்டுவிட்டார்கள் போலும்; ஒரு சிலரைப் பாடவைத்து இசைக்கு பாலூற்றிவிட்டார்கள்.
வெறும் 22 நிமிடங்களே ஒளிபரப்பப் பட்டாலும், பார்வை மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின்மீதும் சற்று கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ’பெற்றோருக்குப்பின் அவர்களது நிலை என்ன?’, ’எந்த மாதிரியான சூழ்நிலைகளில் பார்வை இல்லையே என்று வருந்தியிருக்கிறார்கள்?’ போன்ற சில அத்தியாவசியக் கேள்விகளும் இடம்பெற்றிருப்பதைப் பாராட்டிதான் ஆகவேண்டும். அடுத்த முறை, மற்ற துறையில் இருக்கும் பார்வையற்றவர்களைப் பற்றியும் ஆராய்ந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும். ஏனென்றால், இதுபோன்ற நிகழ்ச்சிகள், ‘பார்வையற்றவர்கள் பாடுவதற்கு மட்டும்தான் சரிப்பட்டு வருவார்கள்’ என்ற பிம்பத்தைச் சமுதாயத்தில் ஏற்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன!
தாயா? தாரமா?
பார்வை மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்தி ஒளிபரப்பப்பட்ட நான்கு நிகழ்ச்சிகளில் ஒரு தரமான நிகழ்ச்சி என்று இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். வெறும் உணர்வுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், திறமைக்கு தீனி போடும் விதமாகவும் அமைந்தது இந்த நிகழ்ச்சி. அதில் பங்கு பெற்ற பார்வைக் குறைபாடுடைய போட்டியாளர் திரு. குமார் அவர்கள், தனது அண்ணனின் தியாகத்தைப் பற்றி கண்ணீருடன் சொன்னது, தன் விழி ஒளி இழந்த மனைவிக்கு ஏன் முக்கியத்துவம் தருகிறார் என்று சொன்னது, தொகுப்பாளர் அசாரை தேவையான இடங்களில் கலாய்த்தது போன்றவை அளவாகவும், அழகாகவும் இருந்தன. அதே நேரத்தில், அந்தத் தொகுப்பாளரும் போட்டியாளர்களை வெறும் பார்வை மாற்றுத்திறனாளிகளாக மட்டும் நடத்தாமல், சக மனிதர்களைப் போல் நடத்தியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. மொத்தத்தில், ‘தாயா? தாரமா?’ மற்ற மூன்று நிகழ்ச்சிகளைக் காட்டிலும் மிகத் தரமாக இருந்தது!
எது எப்படியோ! விழி ஒளி இழந்தவர்களின்மீது ஒரு வெளிச்சம் விழுந்திருக்கிறது. அனைத்து ஊடகங்களும் பார்வைச்சவால் கொண்டவர்களை வைத்து தத்தம் பங்கிற்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி முடித்திருக்கின்றன. வருங்காலங்களிலாவது இதுபோன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக விழும் இந்த வெளிச்சம், விழி ஒளி இழந்தவர்களின் வாழ்வியல் ரீதியான மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவும் என்று நம்புவோம்!
***
(கட்டுரையாளர் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் பணியாற்றி வருகிறார். ‘www.slvinoth.blogspot.com’ என்ற தனது வலைப் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்).
தொடர்புக்கு: [email protected]