புதுக்கோட்டை மாவட்ட மக்கள் வானிலை அறிக்கைகளை எள்ளலுடன் கடந்துசெல்லும் இயல்புடையவர்கள். இப்பகுதிகளில் மழை பொய்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. புயல் வந்தாலாவது மழை பொழியுமே என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் வானிலை செய்திகளை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். ‘வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக புதுகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்’ என்ற அறிவிப்பைக் கேட்கும்பொழுது அவர்கள் மனதில் மகிழ்ச்சி எழும்; மழை பொழிந்து ஓய்ந்த பிறகு அது துயரமாக வடிவெடுக்கும். விவசாயத் தேவை, குடிநீர்த் தேவை என எதையும் பூர்த்தி செய்யாது, தரையை மட்டும் நனைத்துவிட்டு மழை நின்றிருக்கும். ஒருமுறை மட்டுமல்ல; ஒவ்வொரு முறையும் இப்படியே நடப்பதால் மக்கள் வானிலை அறிக்கைகளைக் கேலிச்சிரிப்புடன் கடக்கத்தொடங்கினர்.
‘கஜாப் புயலின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை பொழியும்’ என்ற அறிவிப்பைக் கேட்டுவிட்டு இதேபோலத்தான் கேலிச்சிரிப்புடன் கடந்துசென்றனர் மக்கள். பக்கத்து வீட்டில் கேதம்; நிறையபேர் வருவார்கள் என்பதால், அவர்களுக்காக தோசை மாவை அதிகம் ஆட்டத் தொடங்கின அவ்வூரிலிருந்த உணவகங்கள். இப்படி ஒவ்வொருவரும் தங்களது அன்றாட பணிகளுக்கான திட்டமிடலை வகுத்துவிட்டு, வழக்கம்போல் உறங்கச் சென்றனர்.
அதிகாலை 3 மணி; லேசாகக் காற்று வீசத் தொடங்கியது. மெல்ல மெல்ல அதன் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. 3.30 மணிக்குப் பின் வேகமெடுத்த காற்று, காலை எட்டு மணிக்குத் தான் ஓய்ந்தது. 4 மணிக்குப் பிறகு, புயலோடு மழையும் கைகோர்த்துக் கொண்டது. அது நிகழ்த்திய கோரத்தாண்டவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. உயிரை மட்டும் விட்டுவிட்டு, உடைமைகள் அனைத்தையும் அது சிதைத்து சென்றுவிட்டது.
இங்கே வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவித்துக் கொண்டிருந்த சமயத்தில், புயல் முன்னேற்பாடு குறித்த வாழ்த்து மழையில் தமிழக அரசு நனைந்துகொண்டிருந்தது, முதலமைச்சரோ, அவர் மாவட்டத்தில் நடந்த நிகழ்வில் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியாயிருந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அமைச்சரோ, ‘பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை’ எனப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். இத்தகைய பேரிடர்கள் சூழ்ந்திருந்த தருணத்தில், பார்வை மாற்றுத்திறனாளிகள் எத்தகைய இடர்களைச் சந்தித்தனர் என அவர்களிடமே கேட்டோம்.
புதுக்கோட்டை மாவட்டம் நெய்வத்தலியைச் சேர்ந்த முருகானந்தம், “எங்களது பொருளாதாரத் தேவையை பூர்த்திசெய்த தென்னை மரங்கள் அனைத்தும் புயல் காற்றில் சாய்ந்துவிட்டன. இவ்விழப்புகளிலிருந்து எவ்வாறு மீண்டு வரப்போகிறோம் எனத் தெரியவில்லை. நிவாரணப் பொருட்களை வாங்குவதில் நான் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டேன். பல நிவாரணப் பொருட்களை நான் வாங்க முடியாதது பற்றி வருத்தப்படவில்லை; ஆனால், அத்தியாவசியத் தேவையான உணவைக் கூட என்னால் வாங்க இயலவில்லை. ஏனெனில், எல்லோரும் அடித்துப் பிடித்து தங்களது பாத்திரங்களை நிரப்பிக்கொண்டு சென்றுவிட்டனர். அவர்களைப் போல் என்னால் முந்திக்கொண்டு செயல்பட இயலாததால், பல நேரங்களில் சாப்பாட்டை இழந்திருக்கிறேன். பேரிடரின் பாதிப்பைக் கண்டு முகம் தெரியாத பலரும் உதவிக்கரம் நீட்டுகின்றனர். ஆனால், பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த சிலர், எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்ற நோக்கில் மனித நேயமற்று செயல்பட்டனர். எங்கள் ஊரில் கைபேசிகளுக்கு மின்னேற்றம் செய்ய 200 ரூபாய் வரை வாங்கிய கொடுமையெல்லாம் அரங்கேறியது” என்று தன் ஆதங்கத்தைக் கூறி முடித்தார்.
தெற்குநல்லிப்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், “இப்புயலின் காரணமாக இரண்டு நன்மைகள் ஏற்பட்டுள்ளன. முதலாவதாக, சூரிய மின்னாற்றல் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலான கிராமப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கிறது. சூரிய ஆற்றலில் இயங்கும் விளக்குகளைப் பலரும் வாங்கி இப்போது பொருத்த தொடங்கி இருக்கின்றனர். அடுத்ததாக, கைபேசிகளில் மின்னேற்றம் செய்ய இருசக்கர வாகனங்களில் உள்ள மின்கலன்களை பயன்படுத்த மக்கள் இப்போது கற்றுக் கொண்டுவிட்டனர். புயலின் காரணமாக நான் கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்துவதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டேன். பொது இடங்களில் நாம் இன்னும் இச்சிக்கலை எதிர்கொள்கிறோம்; ஆனால், நான் சுதந்திரமாக இயங்கும் வீட்டிலேயே இன்னொருவரின் உதவியை நாட வேண்டியிருந்தது. இயற்கை உபாதைகள் வரும்போது செல்ல இயலாது; உதவிக்கு ஆள் வரும்போதே நான் கழிப்பிடங்களுக்குச் சென்றேன்” என்றார்.
இப்புயல் காற்றில் ராஜா முகமது என்ற பார்வை மாற்றுத்திறனாளியின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. இதைக் கேள்விப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளி நண்பர்களான பிரபு, பிரபாகரன் மற்றும் சோலைகணேஷ் ஆகிய மூவரும் இவருக்கு உதவி செய்துள்ளனர். இவர்கள் செய்த உதவியைக் கேள்விப்பட்ட பிற பார்வை மாற்றுத்திறனாளி நண்பர்களும் இவருக்கு உதவ முன்வந்தனர்! இதைச் சாத்தியமாக்கியது, ‘உதவும் உள்ளங்கள்’ என்ற கட்செவி குழு. இதன் உறுப்பினர்கள் அனைவருமே பார்வை மாற்றுத்திறனாளிகள். இக்குழுவை உருவாக்கிய பிரபு தாங்கள் செய்த உதவியைப் பற்றிக் கூற, அக்குழுவில் இருக்கும் பிற பார்வையற்ற நண்பர்களும் தங்களால் இயன்ற பண உதவிகளைச் செய்துள்ளனர்.
“புயலில் எங்களது வீடு முழுவதும் சிதைந்து போனது. இரவில் உறங்கவும், மழை வரும்போதும் அண்டை வீடுகளில் அடைக்கலம் கேட்டு தங்கிக் கொள்வேன். என் நிலைமையைக் கேட்டவுடன், பிரபு மற்றும் அவரது நண்பர்கள் உரிய நேரத்தில் எனக்கு உதவினர். தொலைபேசி வாயிலாகவே அவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டனர். மின்சாரமில்லாத சூழலில் அது சிக்கலானதாக இருந்தது. பண உதவி செய்ததோடு மட்டுமல்லாமல், அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் எங்களுக்கு வழிகாட்டினர்” என்றார் ராஜா முகமது.
‘உதவும் உள்ளங்கள்’ கட்செவி குழுவில் உள்ள மாரிச்சாமி, “நாங்கள் எத்தனையோ உதவிகளைப் பெற்று, படித்து முன்னேறி இருக்கிறோம். இன்று நாங்களும் இச்சமூகத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என நினைக்கிறோம். களத்தில் நின்று உதவ முடியவில்லையே என்பதுதான் எங்களது சிறு கவலையாக இருக்கிறது” என்றார்.
புதுக்கோட்டை பார்வையற்றோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, கஜாப் புயல் காரணமாக மின்சார வசதியும், தண்ணீரும் இல்லாததால், ஒரு வாரம் மூடப்பட்டது. இதனால், பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் அவரவர் வீட்டிற்குப் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். எப்போதும் தன் மகனோ, மகளோ வீட்டிற்கு வருகி்றார்கள் என்று அறிந்தவுடன் மகிழும் பெற்றோர், அன்று மகிழ்ச்சியாக இல்லை.
நம்மிடம் பேசிய ஒரு மாணவனின் தாயார் இப்படிக் கூறினார், “எங்க வீடு புயல்ல அடிச்சுக்கிட்டு போயிருச்சு. நாங்க நிவாரண முகாமுக்கு வந்துட்டோம். என் மகனாவது பள்ளிக்கூடத்துல பத்திரமா இருப்பான்னு சந்தோசப்பட்டோம். ஆனா, அவனும் இங்க வந்து எங்களோட கஷ்டப்படுறான். சாப்பாட்டுக்கும், ஒன்னுக்கு, ரெண்டுக்கு போறதுக்கும் அவன் ரொம்ப கஷ்டப்படுறான். வேகமா பள்ளிக்கூடம் தெறந்தா எங்களுக்கு நிம்மதியா இருக்கும்”. நிலைமை சீர் செய்யப்பட்டு ஒரு வாரத்தில் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.
கைக்குறிச்சியைச் சேர்ந்த சக்திவேல் புயல் காற்றைப் பற்றி இவ்வாறு விவரிக்கிறார், “புயல் காற்றின் சத்தமானது ஒரு பெண்ணின் ஓலம் போல இருந்தது. ஏதேனும் ஒரு பிடிமானம் இல்லாமல் தரையில் நம்மால் காலை வைத்து நடக்க இயலவில்லை. மனிதனைத் தூக்கும் அளவிற்கு அதன் வேகம் இருந்தது. மழை எப்பொழுதும் வானிலிருந்து தரையை நோக்கி விழுந்துதான் நாம் கண்டிருப்போம்; ஆனால், காற்றின் காரணமாக நேரடியாக நம் முகத்தில் நீரை வேகமாக பீச்சியடிப்பதுபோல் மழைப்பொழிவு இருந்தது. இதன் காரணமாக வெளியே செல்பவர்கள் மூச்சு விடுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். எங்கள் உணவகத்தின் கூரை ஆஸ்பெட்டாஸ் சீட்டால் வெய்யப்பட்டது. அடிக்கும் காற்று அதை இழுத்துக்கொண்டு போய்விடுமோ என்ற பயத்தில் இருந்தோம். அழகு சுந்தரி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு அக்கா எங்கள் ஊரில் இருக்கிறது. அந்தப் பயங்கர புயல் காற்றிலும், தலையில் ஒரு நெகிழி கவரை மாட்டிக்கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது. நாங்கள் அந்த அக்காவைக் கடைக்குள் அழைத்தும் வரவில்லை. பலமுறை சாலையில் விழுந்தாலும், எழுந்து நடந்து சென்றது அந்த அக்கா. சாலையோரத்திலிருந்த மரங்கள் விழுந்து கொண்டிருந்தன. அவற்றிலிருந்து அந்த அக்கா உயிர் தப்பியது அதிசயம்தான்! இவ்வாறு, புயலினால் மனவளர்ச்சி குன்றியோர் பல பாதிப்புகளைச் சந்தித்திருப்பர். அவர்களுக்காக மனம் உள்ளவர்கள் நாமாவது குரல் கொடுப்போம்”.
மேலும் அவர் கூறும்போது, “ஒரு மெழுகுவர்த்தி 100 ரூபாய்க்கும் மேல் விலை வைத்து விற்கப்பட்டது. அரசின் செயல்பாடுகள் மீட்புப் பணிகளில் மிகவும் மந்தமாகவே இருந்தன. ‘முதலமைச்சர் புதுக்கோட்டை மாவட்டத்தைப் பார்வையிட வருகிறார்’ என்ற அறிவிப்பு வந்ததும், அவர் செல்ல வேண்டிய பாதைகள் மட்டும் விரைந்து சரிசெய்யப்பட்டன. அவர் வருவதற்கு முந்தைய நாள் இரவு, அனைத்து ஊர்களிலும் குடிநீர் வண்டிகளில் வழங்கப்பட்டது. அத்தண்ணீரைத்தான் எங்கள் கடையில் கை கழுவுவதற்காக ஊற்றி வைத்திருந்தோம். அதைப்பார்த்த வாடிக்கையாளர்கள், ‘தண்ணீர் என்ன இந்த நிறத்தில் இருக்கிறது? நல்ல தண்ணியை மாற்றி வையுங்கள்’ எனக் கூறிச் சென்றனர். அத்தண்ணீரைத்தான் பலரும் குடிக்க வாங்கியிருந்தனர். எத்தனை மோசமான நீரை அன்று இரவு பொதுமக்கள் பயன்படுத்தி இருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். இப்புயலால் பல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. அதைச் சாக்காக வைத்துக்கொண்டு, சாலையோரத்தில் நின்ற மரங்களைப் பலரும் வெட்டியதைக் காண முடிந்தது.
கஜாப் புயலுக்குப் பின், மின்னூழியர்கள் பம்பரமாய் சுழன்று பணியாற்றினர். அவர்களது சேவைக்கு தமிழகமே தலைவணங்குகிறது. காட்டிலும் மேட்டிலும் அவர்கள் கஷ்டப்பட்டு, சாலையோரத்திலிருக்கும் ஊர்களுக்கு மட்டும் மின்னிணைப்பு கொடுத்து முடிக்கும்போதே, மாவட்டம் முழுவதும் மின்னிணைப்பு கொடுக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் பேட்டி கொடுத்துவிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் முடுக்குப்புஞ்சை பகுதியில், விவசாய மோட்டார்களுக்கு மின்னிணைப்பு கொடுக்க 500 ரூபாய், வீடுகளுக்கு மின்னிணைப்பு கொடுக்க 100 ரூபாயென பணத்தைப் பெற்றுக்கொண்டு மின்னிணைப்பு வழங்கியதெல்லாம் கொடுமையின் உச்சம்.
அரசுக்கு எதிராகத் தினந்தோறும் சாலை மறியல் மற்றும் போராட்டங்கள் வெடித்துக்கொண்டே இருந்தன. அவர்களது உச்சபட்ச கவலையாக இருந்தது, ‘அரசாங்கத்தைச் சேர்ந்த யாரும் வந்து பார்க்கவில்லையே’ என்பதுதான். தன்னார்வலர்கள் சிறப்பாக தங்கள் வேலைகளைப் பகிர்ந்தளித்து, நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்தனர். பல தரவுகளையும், ஆள் பலத்தையும் கொண்டிருக்கும் அரசு எந்திரம் விரைவாகச் செயல்படாமல் இருந்தது மிகுந்த வருந்தத்தக்க நிகழ்வாகும். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், உரிய பிரதிநிதிகள் இல்லாமல் கிராமப் பகுதியினர் துயரப்பட்டதையும் காண முடிந்தது. நொடிப்பொழுதில் தேசத்தின் நோட்டையே மாற்றிய வல்லமை வாய்ந்த பிரதமருக்கு, கஜா நிவாரணத்தை ஒதுக்க நேரமில்லை போலும்! புயலுக்குப் பின் மக்கள் ஓலமிட்டுக் கொண்டிருக்க, அரசாங்கம் அமைதியாக இருந்ததுதான் இவ்வாண்டின் பெரும் பேரிடர்!
***
தொடர்புக்கு: parvaiyatravan@gmail.com