“குழந்தைகளே! இது உங்களின் தினம், உங்களுக்காகவே!” என்று பெருமை பேசும் அளவிற்கு இன்றைய சமூகமும், சூழலும் இல்லை என்றே சொல்வேன்.
நம் வாழ்வில் மீண்டும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றால், நாம் பயணிக்க விரும்பும் பருவம், குழந்தைப் பருவமாகத்தான் இருக்கும். பிஞ்சு மனங்களாய், பேதைகளாய் வாழவே நாம் ஒவ்வொருவரும் ஏங்கிக் கிடக்கின்றோம். ஆனால், குழந்தைகள் மீதான வன்முறைகள்தான் அதிகமாகி வருகின்றன. இத்தகைய சூழலில் குழந்தைகள் நலன் குறித்து பேசுவது அவசியம் என உணர்கிறேன்.
குழந்தைகள் தினத்தை சிறப்பு நிகழ்ச்சிகளோடு கொண்டாட வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். அதே நேரத்தில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் அரசு சிந்தித்து துரிதமாக செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.
குழந்தைகளை வடிவமைப்பது பள்ளிகள் என்றால், அவர்களைச் செதுக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. அப்படியானால், குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாப்பு தொடர்பான புரிதலை ஏற்படுத்துவதும் நமது கடமையே. பள்ளிகளில் ஆண்-பெண் வேறுபாட்டை களைய வேண்டும். பதின் பருவத்தின் கலகங்களை சரியான முறையில் வழிநடத்திட வேண்டியது இன்றைய சூழலுக்கு மிகமிக அவசியமான ஒன்று.
சமீபத்தில், ‘மீ டூ’ இயக்கம் மிகப் பிரபலம் அடைந்தது. பல பிரபலங்கள் பேசியதாலோ என்னவோ, அதிகமாகவே பிரபலம் அடைந்தது போலும். அந்த சமயம், சில ஆண் பிரபலங்கள், தங்களுக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் உண்டு என வாய்திறக்க துவங்கினர்.
ஆம்! பாலியல் பிரச்சனைகள் பெண்களை மட்டுமே நோக்கி ஏவப்படும் கணைகள் அன்று; ஆண்களையும், குறிப்பாக ஆண் குழந்தைகளையும் வாட்டிக் கொண்டு இருக்கும் மர்ம புற்றுநோய்தான் அது. ஆனால், அவைகள் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகள் போன்றே பெரிதாக பேசப்படுவதில்லை.
ஆணை ஆளுமை படைத்தவனாகவே சித்தரிக்கும் நம் சமூகம், அவனைச் சுற்றிப் போலியான திரையைப் போட்டு வைத்திருப்பது என்னவோ உண்மைதான். அதனால்தான், தனக்கு நேரும் கொடுமைகளைக்கூட ஆண்கள் கௌரவம், மரியாதை, பெயர், புகழ் என்கிற திரைகளுக்குப்பின் ஒளித்து வைத்துக்கொள்கின்றனர்.
பெண் குழந்தையோ, ஆண் குழந்தையோ; அவர்களுக்கு தங்களின் வாழ்க்கையை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழும் உரிமை உண்டு. அப்படியிருக்க, அதைப் பெற்றுத் தரவேண்டியது நமது கடமை. எப்படி என்ற வினாவிற்கு விடை தருவதே இன்றைய இளைய தலைமுறைக்கு தேவை.
நமது கல்வி முறைகளில் கட்டாயம் மாற்றங்களை கொண்டு வருதல் அவசியம். இன்னமும் பழையவர்களின் சிந்தனைகளையே நாமும் சிந்திக்க கற்றுக் கொடுப்பதாலோ என்னவோ, சுய சிந்தனையை மறந்தே போய்விட்டது இன்றைய தலைமுறை!
ஆபத்து காலங்களில் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிகளையும், முதலுதவி குறித்த விழிப்புணர்வையும் பாடப்பகுதிகளில் இணைப்பது மட்டுமல்லாமல், செயல்முறை வகுப்புகளைக் கட்டாயமாக்கிட வேண்டும். உடற்பயிற்சி வகுப்புகள் இன்னும் உயிரோடு இயங்கி வருகின்றனவா என்பது சந்தேகமே. அதை மாற்றி, கராத்தே, சிலம்பம் போன்ற வீர விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தந்திட வேண்டும்.
ஆண், பெண் உடலமைப்பு குறித்த சரியான புரிதலை இருபாலருக்கும் ஏற்படுத்துவதோடு, மனதளவிலும் எவரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் அன்று என்ற கருத்தினை ஆழப் பதியச் செய்தல் வேண்டும்; முதலில் அதைப் பெற்றோரும் ஆசிரியர்களும் மனதில் ஏற்றுக்கொள்ளுதல் அவசியம்.
குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தீய தொடுதலைக் கற்பிக்கும்போது, எவரேனும் தவறாகத் தொட்டால், “கத்தி மற்றவரைக் கூப்பிடு” என்று கற்றுத்தருவதை விடுத்து, தொடுபவரை எவ்விதத்தில் கையாண்டு தன்னைத் தற்காத்தல் வேண்டும் என்பதை கற்றுத்தருவதே சாலச் சிறந்தது.
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து யோசிக்காத அரசுகளை இனி நாமும் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறான மாற்றங்கள் இனி வருங்காலத்தில் அவசியம் வரவேண்டும்; இல்லை என்றால், இந்த உலகம் இனி மெல்ல கருகும்!
***
(கட்டுரையாளர் தஞ்சை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்).
தொடர்புக்கு: [email protected]