“என் பின்னாலேயே வா மாப்ள” என்று சொன்னபடியே, தன் தோளில் கைவைத்து உடன் நடந்த கனகராஜை தனக்குப் பின்னால் ஒதுக்கிவிட்டு, வலக்கையில் பிடித்திருந்த ஸ்டிக்கைத் தன் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, வீட்டின் முன் கேட்டைத் திறந்தான் சசி. “மாப்ள இங்க செருப்பை விடு” என்று சொன்னவனிடம், “இது வீட்டோட முகப்பா சசி?” என அறியாதவனாய் கனகு கேட்டான்.
“இது கார் பார்க்கிங் மாப்ள”.
“கார் நிறுத்தவா? அப்டினா, புதுசா கார் வாங்கியிருக்கியோ?”
“அட நீ வேற. கார் வாங்கி என்ன பன்றது? இப்போலாம் சிட்டில கார் பார்க்கிங் வைக்காம வீடு கட்டவே முடியாது. பேங்க்ல லோன் தரமாட்டான்”.
“அடப்பாவத்த! இவ்ளோ இடம் வேஸ்டு தானே?” என்று அங்கலாய்த்தான் கனகு.
“என்ன பன்றது? வீட்டோட முற்றமுனு நினைச்சுக்க வேண்டியதுதான்” என்று பதில் சொன்னான் சசி. பேசிக்கொண்டே இருவரும் வீட்டின் ஹாலை அடைந்தார்கள்.
“இப்டி உட்காரு” என்று சுவரோரமாய் போடப்பட்டிருந்த சோஃபாவின் மேற்பரப்பில் கனகராஜின் கையை பிடித்து வைத்தான் சசி. இருக்கையில் சாய்ந்த கனகின் கைகள் சோஃபாவை அளந்தன. வெல்வெட் போர்த்திய அதன் மேலுறையும், உட்காரும்போது உணரப்படுகிற ஒருவிதத் துள்ளலும் அவனுக்கு நேற்று அவன் பயணித்த அரசு விரைவுப் பேருந்தை நினைவுபடுத்தியது.
“நேத்து பஸ்ல கண்டக்டரோட ஒரே சண்டையாயிடுச்சு மாப்ள” என்று தொடங்கினான் கனகு.
“என்ன? பாஸ் செல்லாதுனு சொன்னாரா?”
“அப்டி சொல்லிருந்தா பரவாலயே. அது ஸ்பெஷல் பஸ்ஸாம், அதுனால அதுல பாஸ் செல்லாதாம். நான் விடல. செல்லாதுனு அடையாள அட்டை ஜெராக்ஸ்ல எழுதிக்கொடு, நான் டிக்கெட் எடுத்துக்கிறேனு கண்டிப்பா சொல்லிட்டேன். அப்புறம்தான் நம்ம வழிக்கு வந்தாரு அவரு. ஆனா ஒன்னு, அவரு மட்டும் எழுதிக்கொடுத்திருந்தா நடுவழியிலயே நான் கீழதான் இறங்கிருக்கனும். கால் சார்ஜ் கணக்குப் பண்ணிதான் மாப்ள காசு கொண்டாந்தேன்” என்று வெள்ளந்தியாய் கனகு சொன்னதைக் கேட்டு, உள்ளுக்குள் வருந்தினான் சசி.
தரையின் வழவழப்பைத் தன் கால்களால் நுகர்ந்துகொண்டிருந்த கனகுவிடம், “மாப்ள உட்கார்ந்திரு இதோ வாறேன்”, சொல்லிவிட்டு தன் அறைக்குப் போனான் சசி.
சசி, கனகராஜ் இருவரும் பள்ளி கால நண்பர்கள். மதுரை ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில், சாதாரணப் பள்ளியில் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் ஒன்றாகப் படித்தவர்கள். விவசாயத்தில் அதிக ஆர்வமிருந்ததால் கனகு கல்லூரிக்குச் செல்லவில்லை. ஊரிலேயே தனது நிலத்தில் விவசாயம் பார்க்கத் தொடங்கியவன், எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த அத்தை மகள் லட்சுமியைத் திருமணம் செய்துகொண்டான்.
வறுமையின் காரணமாக கண்ணில்லாதவனுக்கு வாழ்க்கைப்பட்ட லட்சுமிக்கு அது மிகப்பெரிய மனக்குறையாகவே இருந்தது. ஆனால், விவசாயம் தொடர்பான அத்தனை செயல்களிலும் அவன் காட்டிய ஆர்வமும், உழைப்பும் அவளுக்கு மிரட்சியும், ஆச்சரியமும் தந்தது. கூடவே, அவனது கள்ளம் கபடமில்லாத அன்பு அவளை மெல்ல அவன்மீது பிடிப்புகொள்ள வைத்தது. நிலம், மனைவி, இரண்டு குழந்தைகளே தன் உலகம் என வாழ்ந்தவனை, இன்று பத்திப் பைகளுடன் ஊர்ஊராய் சுற்றவைத்திருக்கிறது காலம்.
பி.எட். முடித்துவிட்டு, ஆசிரியர் பணியை அரசிடம் போராடிப் பெற்ற கடைசித் தலைமுறை பார்வையற்றவர்களுள் சசியும் ஒருவன். தன்னைப்போலவே ஒரு பார்வையற்ற பெண்தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்கிற உன்னத இலட்சியத்தோடு தேடிப்பிடித்த பெண்தான் இசை ஆசிரியை சந்திரா. சந்திராவையும், நான்கு வயது மகள் வர்ஷினியையும் தவிர சசிக்கு வேறு சொந்தம் கிடையாது. தற்போது வர்ஷினி வந்தவாசியிலிருக்கும் சந்திராவின் அம்மா வீட்டில் வளர்கிறாள்.
வார இறுதி நாட்களில் வர்ஷினியைப் பார்க்க இருவருமே வந்தவாசி கிளம்பிவிடுவதுதான் வழக்கம். கடந்த இரண்டு வார சனிக்கிழமைகளிலும் பள்ளி வேலை நாள் என்பதால், இந்த வாரம் சனி, ஞாயிறு மட்டுமல்லாது திங்கள் கிழமையும் சேர்த்து விடுப்பு எடுத்துக்கொண்டு குழந்தையோடு செலவிடுவது என்கிற சந்திராவின் முடிவை மாற்றியது கனகின் வருகை. ஞாயிற்றுக்கிழமை மாலையே சென்னைக்கு வந்ததில் சந்திராவுக்கு வருத்தம்.
“கண்டிப்பா அடுத்த வருஷம் வந்தவாசி பக்கம் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிடனும். சென்னைல இருக்கிறதால, செக்ரட்ரியேட்ல வேல, DPI போறேன், சங்க வேலைனு யாராவது வந்துக்கிட்டேதான் இருக்காங்க”, மூடிய அறைக்குள் சசியிடம் பொங்கினாள் சந்திரா.
“ஏய்! அவன் இப்பத்தான்டி மொத தடவையா நம்ம வீட்டுக்கு வாறான். இன்னும் சொல்லப்போனா, அவன் இப்போதான் முதல்முறையா சென்னைக்கே வந்திருக்கான்”, சொல்லியபடியே கதவைத் திறந்துகொண்டு மீண்டும் ஹால் நோக்கி நடந்தான் சசி.
“வாங்கண்ணா” என்று அழைத்தபடி, உள்ளே இருந்து வந்தாள் சந்திரா.
“வாமா! இதுவரைக்கும் ஃபோன்லதான் பேசியிருக்கோம். இப்பதான் நேர்ல பார்க்கிறோம் இல்ல?”, கனகு சொல்ல,
“இப்பவும் பேசிட்டுதான் இருக்கோம்” என்று சந்திரா சிரிக்கவே, சற்று ஆசுவாசம் அடைந்தான் சசி.
“பாப்பா நல்லா இருக்கா?”
“ம். அம்மா வீட்டில இருக்காணா. நேத்துத்தான் பாத்துட்டு வந்தோம்”, சொல்லிக்கொண்டே, தன் இடக்கையால் அவனது வலக்கையைத் தடவிப் பிடித்து, மெல்ல தன் வலக்கையில் இருந்த காஃபி டம்ளரை அவனது வலக்கைக்கு இடம் மாற்றும் வேலையைச் செய்தாள் சந்திரா.
“இப்போதான் எங்களைலாம் பார்க்கனுமுனு தோணுச்சா?”, கனகு சென்னை வந்த காரணத்தை அறிவதில் ஆர்வம் காட்டினாள் சந்திரா.
“இப்பவும் அவன் நம்மள பார்க்க வரல சந்திரா. அவனுக்கு மெயின் ஆஃபீஸ்ல ஏதோ வேலைனு வந்திருக்கான். என்ன மாப்ள வேலை?”, கேட்டான் சசி.
“அதான் மாப்ள, உன்கிட்ட சொல்லிருந்தேனே. நம்ம ஊரு யூனியன் ஆஃபீஸ்ல ரெண்டு ஓ.ஏ. போஸ்ட் காலியா இருக்கு. பிலைண்டுக்கு ஒன்னு, ஹேண்டிகேப்டுக்கு ஒன்னு. அதுக்கு மாவட்ட ஆஃபீஸ்ல இருந்து இண்டர்வியூ அனுப்பிருக்காங்க. ரெண்டு தடவை இண்டர்வியூ தள்ளிப் போயிடுச்சு மாப்ள. ஆனா ஒருதடவை கூட எனக்கு இண்டர்வியூ கார்டு வரவே இல்ல. நானும் மாவட்ட ஆஃபீஸ்ல பலமுறை கேட்டுப் பாத்துட்டேன். சரியான பதிலே இல்ல. நம்ம மாவட்ட ஆஃபீஸ்ல வேலை பார்க்கிறாரே மணி, அவர்தான் சொன்னாரு, ‘நம்ம ஆஃபீசர் அவருக்கு வேண்டிய ஒருத்தருக்காக ட்ரை பன்றாரு. அதனால இங்க எதுவும் நடக்காது. நீ மெயின் ஆஃபீஸ்ல மனு கொடு, அவுங்க கேட்டா இவுங்களால மறுக்க முடியாது”-ன்னு. நானும் அவர் சொன்ன மாதிரி மூனு தடவை லெட்டர் போட்டுட்டேன் மாப்ள. ஆனா இதுவரைக்கும் மெயின் ஆஃபீஸ்ல இருந்து எந்த பதிலும் இல்ல. அதான் ஒரு தடவை நேர்ல போய் பாத்துரலாம்னு”.
“இங்க போய் கேட்டா மட்டும் என்ன நடந்திருமுனு நினைக்கிற?”, கொஞ்சம் விரக்தியோடே கேட்டான் சசி.
“இல்ல மாப்ள, மணிதான் சொன்னாரு, புதுசா வந்திருக்கிற சீஃப் ஆஃபீசரு ரொம்ப நல்ல மனுஷனாம். எல்லாத்துக்கும் உடனே நடவடிக்கை எடுக்கிறாராம்”. கனகின் குரலில் நம்பிக்கை தொனித்தது.
“நானும் அப்டித்தான் கேள்விப்பட்டேன். ஆனா ஒன்னு, எப்பவுமே சாமி பிரச்சனை கிடையாது. பிரச்சனையெல்லாம் பூசாரிங்களால வர்றதுதான்”, சசி சொல்லவே, அதை ஆமோதித்துச் சிரித்தான் கனகு.
ஓலாவின் மைக்ரோ காரில் கனகுவிற்குக் கிடைத்தது அதே சோஃபா சுகம். தலைக்கு மேலே ஒரு கையை உயர்த்தி, காரின் வெல்வெட் கூரையை அங்கும் இங்குமாகத் தடவிக்கொண்டே வந்தான். “ஏன் சசி! செல் எடுத்த, என்னமோ பண்ணுன, வீட்டு வாசலுக்கே கார் வந்திருச்சு. டச் செல்லுல அதெல்லாம் பண்ணலாமா?”, கனகு இடைவெளி விடாமல் கேட்ட அந்தக் கேள்வியில் அப்பட்டமாக வெளிப்பட்டது சக தலைமுறைப் பார்வையற்ற சமூகத்திடையே நிலவுகிற மிகப்பெரிய இடைவெளி.
“டச் மொபைல்ல எல்லாமே ஆப் தான் மாப்ள. இது ஓலா ஆப். உட்கார்ந்த இடத்திலிருந்தே நாம கார் புக் பண்ணிக்கலாம்”, சசி முடிக்கும் முன்பே,
“அப்போ ஸ்டிக்கப் போட்டு, தடவித் தடவி பஸ் ஸ்டாப் போயி, ஒவ்வொருத்தர் கிட்டையா இது என்ன நம்பரு, என்ன நம்பருனு கேட்டு பஸ் ஏறுற கஷ்டம் இல்ல. உனக்கு ரொம்ப வசதியாப் போச்சு. நீ அடுத்தவுங்க கிட்ட கேட்கவே கூச்சப்படுற ஆளாச்சே”, கனகு சசியின் தொடையைத் தட்டினான்.
“முன்ன மாதிரிலாம் இல்ல மாப்ள. மதுரையில ஸ்டிக் இல்லாம கெத்தா நடந்த காலமெல்லாம் போச்சு. சென்னைக்கு வந்துட்டாலே ஸ்டிக் எடுக்கனும், வாயத் தொறந்தே ஆகனும். ஆனா சென்னைல நல்லா ஹெல்ப் கிடைக்குது. நல்ல அவார்னஸ் இருக்கு”.
“அவார்னஸ்னா?”, கனகு தயங்க,
“அவார்னஸ்னா நம்மலப் பத்தின புரிதல்”, சசியிடமிருந்து யோசிக்காமல் பதில் வந்தது.
தங்கள் வாழ்வில் கடந்தது, நடப்பது என அவர்கள் எல்லாவற்றையும் பேசிக்கொண்டே வந்தார்கள். நீண்ட நாளுக்குப் பின்னான பள்ளித் தோழனுடனான சந்திப்பு என்கிற அந்தத் தருணங்கள் மிக அழகானவை, ஒப்பனையற்றவை. அதனால்தான் கார் கடந்துவந்த முக்கால் மணிநேரத்தை அவர்கள் மூன்று நிமிடமாய் உணர்ந்தார்கள். விரைவாக வந்துவிட்டது சசிக்கு ஆச்சரியம் என்றால், 500 ரூபாய் ஆகியிருக்கிறது, அதையும் காசாகக் கொடுக்காமல், சசி ஏடிஎம் கார்டு வைத்து ஏதோ செய்கிறான் என்பது கனகுவிற்கு வியப்பாகவும், பயமாகவும் இருந்தது. அதுபற்றி பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று யோசித்தபடியே, சசியின் தோள் பிடித்து நடந்தான் கனகு.
“அடேங்கப்பா! காத்து சும்மா சிலுசிலுனு அடிக்குதில்ல”, கனகு சிலிர்த்தான்.
“எதிர்த்த மாதிரி பீச் மாப்ள. இங்க சீக்கிரம் வேலை முடிஞ்சுட்டா, பீச் போவோம்”.
“இதுதான் மெரினாவா? அப்போ அம்மா சமாதி போகலாம்”, கனகு உற்சாகமானான்.
அலுவலகத்தின் முன்வாயிலைக் கடந்து அவர்கள் இருவரும் முன்னேறிக் கொண்டிருக்கையில், “மாப்ள, கொஞ்சம் செருப்பைக் கழற்றிக் கால் வச்சுப் பாரேன்” என்று சசி சொல்ல, கனகு வெறுங்காலால் தரையைத் தடவினான். தரையில் நீளவாக்கில் சில புடைத்த கோடுகள் போடப்பட்டிருந்தன.
“இது எதுக்கு மாப்ள?”
“எல்லாம் நம்ம வசதிக்குத்தான். இந்த கோட்டுலயே அப்படியே நடந்து போனா, இது எங்க கட் ஆகுதோ, அங்க ஒரு ரூம் இருக்குன்னு அர்த்தம்” சொல்லிக்கொண்டே சுவரோரமாகக் கனகை நிறுத்தி, அவன் கையை மேலே உயர்த்திப் பிடித்து, சுவரில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் போர்டைத் தடவிப் பார்க்கச் செய்தான்.
‘தண்ணீர் அருந்தும் இடம்’ என்று படித்தபோது கனகு சிலிர்த்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரெயில் புள்ளிகள் அவன் விரல்களை உரசுகையில், கனகுவிற்குள் ஏதோ செய்தது. அவன் அந்தக் கணத்தில் மிகுந்த பரவசமும், பெருமிதமும் கொண்டவனாகக் காணப்பட்டான்.
“ஏன் சசி, இதுமாதிரி போர்ட் ஒவ்வொரு ரூமுக்கு முன்னாலயும் ஒட்டியிருப்பாங்களோ?”
வேகமாகத் தண்ணீரை விழுங்கிவிட்டு, “ஆமா. எந்த ஆஃபீஸா இருந்தாலும் நாம சுயமா, சுதந்திரமா நடமாட இந்த வசதியெல்லாம் செஞ்சு தரனுங்கிறது புதுசா வந்திருக்கிற சட்டம்” என்றான் சசி.
பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் தலைமை அலுவலரின் (Chief Officer) உதவியாளர் அறை நோக்கி நடந்தார்கள். உதவியாளர் அவர்களிடம் சொன்ன வழக்கமான பதில், “ஐயா இல்லங்களே”.
“எப்போ வருவார்?”
“ஐயா ஒரு மீட்டிங் போயிருக்காங்க. எப்போ வருவாங்கனெல்லாம் சொல்ல முடியாது”, சசிக்குப் பதில் சொன்னார் அவர்.
“இல்ல சார், ஃப்ரெண்டு ரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்காப்ல”, சசி இழுக்க,
“புரியுது சார். ஆனா ஐயா இப்போ அவைலபில் இல்லையே. என்ன பன்றது? நீங்க ஒரு ஃபோன் பண்ணிக் கேட்டுட்டு வந்திருக்கலாமே?” நிதானமாக பதில் சொன்னார் உதவியாளர்.
“நீங்க ஒன்னு பண்ணுங்க. ஜே.ஓ.-வைப் பாருங்க. கொஞ்சம் முன்னால போய் வலது பக்கமாத் திரும்பி, பத்து ஸ்டெப். ஜே.ஓ. ரூம் எதுனு கேளுங்க” என்று சொல்லி, இருவரையும் அங்கிருந்து நகர்த்துவதில் வெற்றி பெற்றார் அவர். சிறிதுநேரக் காத்திருப்பிற்குப் பிறகு இருவரும் ஜே.ஓ. அறைக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். கனகின் கையில் வைத்திருந்த கடிதத்தை வாங்கிப் படித்தார் ஜே.ஓ.
“ஏன் உங்களுக்கு இண்டர்வியூ கார்டு வரல?” ஜே.ஓ. கேட்டார்.
சில வினாடிகள் யோசனைக்குப் பிறகு, “தெரிலங்கையா”. பவ்யமாகச் சொன்னான் கனகு.
“கார்டு வரலைனு மாவட்ட ஆஃபீசர்கிட்டைல சொல்லனும். இங்க வந்து என்ன பன்றது?” கொஞ்சம் காட்டமாகவே கேட்டார் ஜே.ஓ.
“பல தடவை பார்த்துப் பேசிட்டேங்கயா. ஒவ்வொரு தடவையும் பேரச் சேர்த்துடுறேனு சொல்றாரே தவிர...” கனகு இழுத்தான்.
“விண்ணப்பமெல்லாம் கரெக்டா ஃபில் பண்ணிக் கொடுத்தீங்களா?”
“ம். கொடுத்தேங்கையா”.
“சரி, நாங்க என்னன்னு விசாரிக்கிறோம்”.
“இல்ல சார் இண்டர்வியூ அடுத்த வாரம்”, சசி தயங்கிச் சொல்ல,
“அடுத்த வாரம் இண்டர்வியூவ வச்சுக்கிட்டு இப்போ வந்து சொன்னா?” கோபமானார் ஜே.ஓ.
“இல்லங்கையா, இது சம்பந்தமா மூனு லெட்டர் போட்டிருக்கேன்”, பதட்டமும் கோபமுமாய் கனகும் சொன்னான்.
“சரி, நான் பாக்குறேன்”.
“இல்ல சார், நீங்க மாவட்ட அதிகாரிகிட்ட பேசுனீங்கனா...” சசி இழுக்க,
“எனக்கு ஆர்டர் போடுறீங்களா?” ஜே.ஓ. குரல் இறுகியது.
“அப்டிலாம் இல்ல சார்”.
“வேற எப்படி? நான் பாக்குறேனு சொல்லிட்டேன். இவுங்கட்ட பேசு, அவுங்கட்ட பேசுனலாம் எனக்கு நீங்க சொல்லக்கூடாது. நீங்க வெளிய போங்க”, கத்தத் தொடங்கினார் ஜே.ஓ.
“வெளிய போங்களா? அவ்ளோ தூரத்திலேருந்து வர்றோம். சரியான பதிலும் சொல்ல மாட்றீங்க. வெளிய போங்கனு கத்துனா எப்படி?” கனகு கோபமாகக் கத்தினான்.
“இங்க சத்தமெல்லாம் போடக்கூடாது. எனக்கு நிறைய வேலை இருக்கு”.
“இதுவும் உங்க வேலைதானே?”
“கனகுக்கும் ஜே.ஓ.-வுக்கும் இடையே வாக்குவாதம் சூடாகிக் கொண்டிருந்தது. கனகை சசியால் அமைதிப்படுத்த இயலவில்லை.
வேறு ஏதாவது தவறாகப் போய்விடுமோ என சசி பயந்துகொண்டிருக்க, ஒரு அலுவல் நிமித்தமாக ஜே.ஓ.-வைச் சந்திக்க அறைக்குள் நுழைந்தார் ஈ.ஓ. வாக்குவாதத்தை இடைநிறுத்தி, “வாங்க சார்” என்றார் ஜே.ஓ. ஜே.ஓ.-வுக்குத் தலையசைத்துவிட்டு, “என்னப்பா சசி! நல்லா இருக்கியா?” என்று சசியின் தோளைத் தட்டினார் ஈ.ஓ.
ஈ.ஓ.-வுக்குத் தெரிந்தவர்களாக இருக்குமோ என்ற சுதாரிப்புடன், “யூனியன் ஆஃபீஸ் ஓ.ஏ. போஸ்டுக்கு அப்லே பண்ணிருக்காறாம். மாவட்ட ஆஃபீஸ்ல இருந்து இண்டர்வியூ கார்டே வரலையாம்”, ஜே.ஓ. சொல்ல,
ஏதோ ஜே.ஓ.-விற்கு சைகை செய்துவிட்டு, “எந்த மாவட்டம் பா?” சசியிடம் கேட்டார் ஈ.வோ.
“புதுக்கோட்டை சார்”.
“சரி கீழ என் ரூம்ல இருங்க. நான் வர்றேன். முத்து, இவுங்க ரெண்டு பேரையும் கீழ என் ரூம்ல விட்டுடு” ஜே.ஓ.-வின் உதவியாளரிடம் சொன்னார் ஈ.ஓ.
“சார் உங்க நண்பர் ரொம்ப டென்ஷனாயிட்டாரு?” சசியிடம் பேச்சுக்கொடுத்தார் முத்து.
“பின்ன என்னங்க, அவனவன் காட்டிலையும் மேட்டிலையும் விழுந்தடிச்சு வாறான். உட்கார்ந்துக்கிட்டு நாட்டாமத்தனம் பண்ணுறாங்க”, சூடு தணியாமல் சொன்னான் கனகு.
“சரி, கோபப்படாதீங்க சார். நீங்க ஈ.ஓ. சாராண்ட பொறுமையா எடுத்து சொல்லுங்க சார். கண்டிப்பா அவரு சால்வ் பண்ணிடுவாரு” சசியிடம் சொல்லிக்கொண்டே, ஈ.ஓ.-வின் அறைக்கு அருகே போடப்பட்டிருந்த இருக்கைகளில் இருவரையும் அமர்த்திவிட்டுத் திரும்பினார் முத்து.
அறை திரும்பிய ஈ.ஓ. இருவரையும் அழைத்துப் பேசினார். “மாவட்ட ஆஃபீசர்கிட்ட பேசிட்டேன் பா. கனகராஜ் தானே உன் பேரு? நேத்துத்தான் கார்டு அனுப்பிருக்காங்கலாம். ரெண்டு நாளுல வந்துடும். கார்டே வரலைனாலும் நீ இண்டர்வியூவுக்குப் போ. ஆஃபீசர் ஏதாவது சொன்னா எனக்கு ஃபோன் பண்ணு. ஏம்பா சசி உன்கிட்ட என் நம்பர் இருக்கில்ல?”
“இருக்கு சார்”, சசி சொன்னான்.
“பின்ன என்னப்பா? கவலப்படாம, தைரியமாப் போ”. ஈ.ஓ. பேசியது கனகுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.
“சார் நீங்க எவ்ளோ தன்மையாப் பேசுறீங்க? அவரு கத்த ஆரம்பிச்சிட்டாரு சார்”, கனகு சொல்ல,
“அந்தாள விடுப்பா. நல்ல மனுஷன்தான், கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி”, ஈ.ஓ. முடிப்பதற்குள்,
“நாம ஒன்னும் சும்மா இங்க வாரதில்லையே சார்?” சசி சொல்ல,
“புரியுது, புரியுது. உனக்கு க்ரீவன்ஸ் இல்லைனா நீ ஏம்பா இங்க வரப்போற? சரி, அதெல்லாம் விடுங்க. சாப்டீங்களா?”
“இல்ல சார், போய்த்தான் சாப்பிடனும்”.
“சாப்பிடுறீங்களாப்பா”, தனக்கு எதிரே வைத்திருந்த டிஃபன் பாக்ஸை சுண்டினார் ஈ.ஓ.
“பரவால சார், நீங்க சாப்பிடுங்க. நாங்க கிளம்புறோம். கொஞ்சம் ஞாபகம் வைச்சுக்கங்க சார்”, கனகைத் தொட்டுக்கொண்டு சொன்னான் சசி.
“ஏம்பா சசி! உனக்குத்தான் என்னப்பத்தி தெரியுமே. கவலைப்படாம போங்கப்பா. நான் பாத்துக்குறேன்”.
அறையை விட்டு இருவரும் நம்பிக்கையோடு வெளியேறினார்கள். ஈ.ஓ.-வின் குரல் கனகின் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.
அவர்கள் இருவரையும் கடந்து ஈ.ஓ.-வின் அறைக்குள் நுழைந்தார் ஜே.ஓ. தன் டிஃபன் பாக்ஸை திறந்துகொண்டிருந்த ஜே.ஓ.-விடம், “என்ன சார், டென்ஷன் ஆயிட்டீங்களா?” சிரித்துக்கொண்டே கேட்டார் ஈ.ஓ.
“ஐயோ! அதை ஏன் கேட்கிறீங்க?”
“உங்களுக்கு ட்ரிக் தெரியல. அவுங்ககிட்ட வாதமெல்லாம் பண்ணக்கூடாது. சரிப்பா, செஞ்சிடலாம்பானு அவுங்க பாணிலேயே பேசி அனுப்பப் பார்க்கனும். வெளில பார்த்தீங்கல்ல, எவ்ளோ திருப்தியா போறாங்கனு”, தன்னை வியந்தபடியே முதல் பிடிச் சோற்றை விழுங்கினார் ஈ.ஓ.
“ஏன் சசி, இவரு யாரு?”
“இவரு ஈ.ஓ. உமாநாத் சார்”.
“ஜே.ஓ.-விடப் பெரிய பதவியோ?”
“அதெல்லாம் இல்ல. ஆனா இவருதான் இங்க எல்லாமே. நல்ல அரசியல் செல்வாக்கு உள்ளவரு. அதனால இவரை யாரும் அவ்ளோ சீக்கிரம் எதுக்க மாட்டாங்க”, சசி சொல்ல,
“இவரு செய்வாருன்னு நம்புறேன்”, கனகு மையமாகச் சொல்ல,
“இல்ல மாப்ள, நிச்சயமா செய்வாரு. உடனே மாவட்ட ஆஃபீசர்கிட்ட பேசிட்டாரு பாத்தியா? அதான் கார்டு வரலைனா ஃபோன் பண்ண சொல்லிருக்காருல்ல”, நம்பிக்கை ஊட்டினான் சசி.
பேசிக்கொண்டே இருவரும் நடந்தபோது, ஓர் அறையிலிருந்து அந்தப் பெண் குரல் கேட்டது.
“மாப்ள, ஒரு நிமிஷம் கௌசல்யா மேடத்தைப் பார்த்துட்டுப் போயிடுவோம்”.
“அவுங்க யாரு?”
“சூப்பிரண்டெண்ட். ரொம்ப நல்ல டைப். நல்லாப் பேசுவாங்க. உன் பிரச்சனையை அவுங்க கிட்டையும் சொல்லிக் கொஞ்சம் ஃபாலோ பண்ணிக்கச் சொல்லுவோம்”, சொல்லிக்கொண்டே குரல் வந்த கோப்புகள் பிரிவுக்குள் இருவரும் நுழைந்தார்கள்.
சிலர் பணி நிமித்தம் கணினியில் டைப் செய்துகொண்டிருக்க, வேறு சிலரோ பேப்பரும் பேனாவுமாக இருந்தார்கள். “மேடம், மேடம்” என்று அழைத்தபடி சசி முன்னேறுகையில், குறைந்த இடைவெளிகளில் அடுத்தடுத்துப் போடப்பட்டிருந்த மேசைகளில் ஒன்றில் இடித்துவிட்டான்.
“சொல்லுங்க என்ன வேணும்”, உரத்துக் கேட்டது ஒரு ஆண் குரல்.
“கௌசல்யா மேடம்”.
“மேடம் இல்லையே”.
“மேடம் வாய்ஸ் கேட்டுச்சே?”
“இப்பதான் வெளில கிளம்பினாங்க”, கௌசல்யாவின் சைகையை மொழி பெயர்த்தார் அந்த ஊழியர். சசிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. நிச்சயமாக எதுவும் சொல்ல முடியாது என்பதால், எதுவும் பேசாமல் அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்.
“சே! ஜஸ்ட் மிஸ். இப்பதான் வெளிய போனாங்களாம். உனக்கு லக்கே இல்ல மாப்ள”, பந்தை கனகின் பக்கமே திருப்பிவிட்டான் சசி.
“பரவால விடு சசி. சீஃப் ஆஃபீசரைப் பார்க்க முடியலைனாலும், உமாநாத் சாரைப் பார்த்தது ரொம்ப நல்லதாப் போச்சு”, கனகு பூரித்தான்.
“ஆமாமா. இன்னும் ரெண்டு செகண்ட் ஈ.ஓ. லேட்டா வந்திருந்தாருன்னா, நீயும் ஜே.ஓ.-வும் அடிச்சுக்கிட்டுதான் நின்னிருப்பீங்க”. இருவரும் அலுவலகத்தின் முன்வாயிலில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
“சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்க! கார் போகட்டும்”, வாயிற்காவலர் அவர்களின் கைபிடித்து இழுத்தார்.
“யார் காருண்ணே?” சசி கேட்டான்.
“சீஃப் ஆஃபீசர் மீட்டீங் போறாரு”.
“இன்னக்கி அவர் வரலைனாங்க?” கனகு வேகமாகக் கேட்க,
“காலைல பத்தரைக்கெல்லாம் அவரு வந்துட்டு, இப்போதான் ஒரு மீட்டிங்காக வெளிய போறாரு”. வாயிற்காவலரின் பதிலைக் கேட்டபோது இருவருக்கும் அந்த உதவியாளர்மீது கோபம் கோபமாக வந்தது.
“சரி விடு மாப்ள. அவரப் பாத்திருந்தாலும் என்ன சொல்லிருப்பாரு, நான் பாத்துக்கிறேன் போங்கனுதானே?” கனகைத் தேற்றினான் சசி.
இருவரும் கடற்கரைச் சாலைக்கு அருகே வந்து நின்றுகொண்டார்கள். அடுத்தடுத்து வந்த வாகனங்களால் சாலை பரபரத்துக் கிடந்தது. அவர்களை சாலைக்கு அந்தப் பக்கமாகக் கடத்தி விடும்படியாகவும் எவரும் வரவில்லை.
சாலையின் ஓரமாகவே சிறிது தொலைவு நடந்து சென்று உதவி கேட்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தபோது, தொலைவில் ஈ.ஓ. உரத்துப் பேசிக்கொண்டு வருவது கேட்டது. அவரிடமே சாலையைக் கடத்திவிடச் சொல்லலாம் என சசி நினைத்தான். யாரிடமோ அலைபேசியபடியே எதிர்த்திசையில் இருந்து வந்துகொண்டிருந்தார் அவர். குரல் வந்த திசை நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான் சசி. சசி தன் குரலை கவனித்துவிட்டதை உணர்ந்த மாத்திரத்திலேயே, ‘ஒரு நிமிஷம்’ என்று அலைபேசுவதை இடைநிறுத்திவிட்டு, “சசி! கவலைப்படாம போங்க. நான் பாத்துக்கிறேன்”, சொல்லிவிட்டு அவர்களின் பதிலை எதிர்பாராதவராய் ‘ஹலோ’ என்று தனது உரையாடலைத் தொடர்ந்தபடி, அலுவலகம் நோக்கி வேகமாக நடந்தார் ஈ.ஓ.
சிறிது தொலைவு நடந்த இருவரும், வழியில் எதிர்பட்ட யாரோ ஒரு பொது ஜனத்தின் உதவியோடு சாலையைக் கடந்து, கடல் கரை சேர்ந்தார்கள்!
***
தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com